இணையம் விரல் நுனியில் விரியும் விவரக் களஞ்சியமாக செயல்படுகிறது. நமக்குத் தேவையான
செய்திகளை இணையத்திலிருந்து எந்த நேரமும், இருந்த இடத்திலிருந்தே பெறமுடியும். ஓர்
ஆய்வாளன் தனக்குத் தேவையானதரவுகளை இணையத்தில் உள்ள மின் நூலகத்தைப் (E-Library) பயன்படுத்தி
சேகரிக்க முடியும். இன்தாம். காம்., வெப் உலகம், ஆறாம் திணை.காம், தமிழ்.காம், போன்ற
முன்னணி இணையதளங்களில் இந்த வசதி உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழக வலை தளத்தில் மின்
நூலகம் பகுதி குறிப்பிடத்தக்கது. கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா தனது வாழ்நாளில்
புத்தகங்களை சேகரிப்பதையே நோக்கமாகக் கொண்டு பல அரிய நூல்களை சேகரித்து வைத்தார். 1980களில்
ஓர் ஆய்வாளன் தமிழில் முனைவர் பட்ட ஆய்வு செய்தால் கோட்டையூருக்கு வராமல் தனது ஆய்வை
முடிக்க முடியாது என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்குப் புத்தகங்கள் (ஒரு இலட்சத்திற்கும்
மேல்) வாங்கிக் குவித்திருந்தார். பல அரிய நூல்கள் கால வெள்ளத்தில் அழியத் தொடங்கின.
ரோஜா முத்தையா நூலகத்தின் மதிப்பை உணர்ந்த சிகாகோ பல்கலைக்கழகம் அவற்றை வாங்கி நுண்படமாக
(Microfilm) மாற்றி தங்கள் பல்கலைக்கழக இணைய நூலகத்தில் இணைத்துவிட்டனர். இதனால் அந்நூலகத்தை
உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்த முடியும். நூல்கள், மின்நூல்களாக (E-Book)
மாறும்போது அவற்றின் பயன்பாடு (ஆயுட்காலம்) பல நூற்றாண்டுகளுக்கு மேல் அழியாத ஆவணங்களாக
(Archive) அமைந்துவிடுகின்றன. இவ்வாறு நூல்கள் மின்நூல்களாக இணையத்தில் வெளிவருவதால்,
நாம் விரும்பிய நேரத்தில் அதனைப் படித்து, தேவைப்பட்டால் 'பதிவிறக்கம்' (Download)
செய்து பயன்படுத்த முடிகிறது.
ஒரு குறிப்பிட்ட ஆய்வுப் பொருள் தொடர்பான புதிய நூல்கள் இணையத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அவற்றை நமக்கு இணையத்தின் மூலமாகவே இருந்த இடத்திலிருந்தே அவற்றை மின்வணிகம் மூலமாக
(E-Commerce) வாங்க முடியும்.
ஆய்வு என்பது ஒரு தொடரோட்டம் (Relay) போன்றது. ஒருவர் தான் செய்த ஆய்வை (அ) ஆய்வு முடிவுகளை
இணையத்தில் வெளியிடுவதன் மூலம் பிற ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும், துணையாகவும் அமைகின்றது.
இன்று நமது பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஆய்வுகள் பல்கலைக்கழக மைய நூல்களில் யாரும்
படிப்பாரின்றி முடங்கிக் கிடக்கின்றன. இதனால் என்ன பயன்? வெளிநாடுகளில் நடைபெறும் ஆய்வுகள்,
அனைவரும் அறியும் வகையில் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.
இணையத்தில் உள்ள மின் நூலகத்தைத்தவிர பிற வழிகளிலும் நமக்குத் தேவையான செய்திகளைப்
பெற முடியும். நமக்குத் தேவையான பொருள் பற்றிய செய்திகளைத் திரட்ட 'தேடு பொறிகள்' (Search
Engine) பயன்படுகின்றன. அதில் குறிப்பிட்ட பொருள் பற்றிய வார்த்தைகளைத் தேடு பொறிகளில்
உள்ளிடுவதன் மூலம் அது தொடர்பான இணையப்பக்கங்களின் பட்டியல் வந்துவிடும். அவற்றில்
நமக்குத்தேவையான செய்திகள் அடங்கி தளங்களைச் சலித்து (Filter) தேவையான விவரங்களை எடுத்துக்
கொள்ள முடியும்.
இணையத்தில் செய்திகள் மட்டுமல்லாது ஆய்விற்குத் தேவையான புகைப்படங்கள் (Photos), வரைபடங்கள்
(Graf), நுண்படங்கள் (Microfilm) புள்ளி விபரங்கள் (Datas) ஆகியவற்றையும் பெற முடியும்.
இன்தாம் இணைய தளங்களில் காந்தளகம், நூலகம் போன்ற பதிப்பகங்களில் இதுவரை வெளிவந்துள்ள
நூல்களின் பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன. பதிப்பகங்கள், நூல்கள் அகர வரிசைப்படி இடம்
பெற்றுள்ளதால் நமக்கு வேண்டிய நூல்களை வேண்டிப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.
இவ்வாறு திரட்டிய தரவுகளின் அடிப்படையில் எழுதப்பெறும் ஆய்வேடுகள் இன்றுவரை பல பல்கலைக்
கழகங்களில் A4 வடிவத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதனால் நாம் கூற வந்த ஆய்வு முடிவுகள்
எந்தவிதப் பயனுமின்றி நூலகங்களில் ஆய்வேடாக இடத்தை அடைத்துக் கொள்கின்றன. ஆனால் இதற்கு
விதிவிலக்காகத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை பல்கலைக் கழகத்தில் ஆய்வேடுகளை
'குறுந்தட்டு' (Compact Disc) வடிவிலும் சமர்ப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதனைத்
தொடர்ந்து தற்பொழுது அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகின்றது.
ஆய்வின் நோக்கம், சிக்கல்கள் கருதுகோள், ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை ஆய்வாளனே நேரடியாக
விளக்கும் வகையில் அமைத்து ஆய்வினைச் சமர்ப்பிக்க முடியும். இதனால் தான் சொல்ல வந்த
கருத்து ஆழமாகவும், வலிமையாகவும் (Effective) பதிய வாய்ப்புள்ளது. இவ்வாய்வேடுகளைப்
பிற நாட்டுத்தேர்வாளர்கள் (புற) (External Examiner) மதிப்பிடுவதும் எளிமையாக அமையும்.
இதனால் ஆய்வேடுகள் மதிப்பிடுவதில் உள்ள காலதாமதத்தைத் தவிர்க்க முடிகிறது.
|