கரிகாற் சோழனின் மகளான ஆதிமந்தியார் என்னும் சங்கப் பெண்பாற்புலவர், தன் கணவனான ஆட்டனத்தியைத்
தேடித் திரிந்ததாகப் பாடிய பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது. ஆதிமந்தியின் கணவன்
கிழார் நகரினை அடுத்த காவிரியில் புதுவெள்ளப்புனல் விழாவில் அடித்துச் செல்லப்பட்ட
நிலையில், தன் கணவனைத் தேடி ஊர் ஊராகச் சென்று அலைந்து புலம்பிய அவல நிலையை, பரணர்
தம் அகப்பாடல்களில் (அகம்.76, 135, 222, 236) குறிப்பிடுகிறார் ஒளவையாரும்,
'நெறிப்படு கவலை நிரம்பா நீளிடை
|
வெள்ளி வீதியைப் போல நன்றும்
|
செலவயர்ந் திசினால் யானே.....
|
(அகநா. 147; 8 - 10)
|
என்று வெள்ளிவீதியார் தன் கணவனைத் தேடி அலைந்து திரிந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.
பரணரும், ஒளவையாரும் முறையே ஆதிமந்தி, வெள்ளிவீதியார் ஆகியோர் தம் காதலர்களைத் தேடி
அலைந்த செய்தியை உவமையாகவே கையாண்டுள்ளனர் என்பது இவண் நோக்கத்தக்கது.
தொல்காப்பியர், தலைவனிருக்கும் இடத்தைத் தேடிச்செல்லும் வழக்கு இல்லை எனத் தெளிவாகக்
குறிப்பிட்டுள்ள போதும், சங்க இலக்கியத்தில் ஆதிமந்தியார் பாடல் (குறுந்.31) மட்டும்,
தன் தலைவனை ஊர் ஊராகத் தேடி அலைந்து புலம்பிய அவல நிலையைப் பாடியுள்ளது.
‘பெண் எழுத்தைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதற்கான
தேவை இன்று வரை நீடித்து வருகிறதென்றே கூறவேண்டும். படைப்பிலக்கியம் புனைவதற்காக எழுதுகோளைப்
பெண் ஏந்தத் தொடங்கிய காலக்கட்டத்திலேயே ஆணாதிக்கக் கருத்தியல்கள் சமூகத்தில் நிலைப்பட்டுப்போய்
வேர்பிடித்துத் தழைத்துவிட்டன என்பதும் அவற்றின் தாக்கங்கள் குடும்பத்தளத்தில் மட்டுமின்றிக்
கலை, இலக்கியம், சமயம், அரசியல் எனச் சமுதாயத்தின் பல தளங்களிலும் தமது சுவடுகளை அழுத்தமாகப்
பதியத் தொடங்கிவிட்டன’ (எம்.ஏ.சுசீலா, பெண் இலக்கியம் வாசிப்பு, பக்.68, 69) என்று
கூறுகின்ற கருத்தாக்கம் ஈண்டு மனங்கொள்ளத்தக்கது. சங்க அகப்பாடல்களில், அவற்றின் திணை
துறை கட்டமைப்பிற்கேற்பக் காதல் வயப்பட்ட பெண்ணின் மன ஆற்றாமைகளையும், உடல் சார்ந்த
பசலைத் துன்பங்களையும் ஆண்பாற் புலவர்கள் போலவே பெண் கவிஞர்கள் காட்டியுள்ள போதிலும்
ஒரு சில பாடல்கள், பெண்ணுக்குரிய மரபு வழி மதிப்பீடுகளை விமர்சனம் செய்து அவற்றைத்
தாண்டும் எல்லையைப் பெண் துணிவதைச் சித்தரிப்பதாகவே உள்ளன. அவற்றுள் ‘யாண்டும் காணேன்
மாண்தக் கோனை’ என்ற ஆதிமந்தியாரின் பாடலும் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் பிரிவால்
உடம்பும் உயிரும் வாடிய போதும், இவை ஏன் இப்படியாயின என வருந்துவதல்லது, தலைவன் இருக்குமிடம்
தேடிச்செல்வது தலைவிக்கு இல்லை என மீண்டும் வலியுறுத்துகிறார். தனித்து நெஞ்சோடு உசாவுங்காலத்து,
தலைவனிருக்குமிடம் போவோமா? எனக் கூறுவதுண்டு. ஆனால் அவ்வாறு தலைவனை நாடிச் செல்லுதல்
இல்லை (தொல்.பொரு.10) என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறு தலைவன் இருக்குமிடம் செல்வோமா?
என்ற கூற்று மடற்கூற்றை ஒத்தது. தலைவன் ‘மடலேறுவேன்’ என்று கூறுவது அன்பின் ஐந்திணை.
அதுபோலவே தலைவி, தலைவன் உள்வழிப்படுவதாகக் கூற்று நிகழ்த்துவாளே தவிர, அவ்வாறு ‘உள்வழிச்
செல்லுதல்’ இல்லை. வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியாரின் குறுந்தொகைத்தலைவி, தலைவனின்
பிரிவால் வாடியவழி உழன்று,
'யாங்கண் செல்கம் எழுகென ஈங்கே
|
வல்லா கூறி இருக்கும் ------------'
|
(குறுந். 219; 4 - 5)
|
என்று பாடுகிறாள். தலைவனே தலைவியை நாடிச்செல்லும் இயல்பு வழக்கத்தில் உண்டு. இந்தத்
தமிழ்ப்பண்பாடே இன்றும் திருக்கோயில் வழிபாட்டு நெறிமுறைகளின் ஒன்றாகப் பின்பற்றப்பட்டு
வருகிறது. திருக்கோயில்களில் வழிபாட்டு நெறிமுறைகளில் இறுதி நிகழ்ச்சியாக, ஒவ்வொரு
நாளின் முடிவிலும், இறைவன், இறைவி இருக்கும் இடத்திற்குச் சென்று பள்ளியறையில் துயிலும்
முறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, தலைவன் தலைவியை நாடிச் செல்லலாமே தவிர, தலைவி
தலைவனைத் தேடி செல்லும் மரபு இல்லை என்பது வெளிப்படை.
பண்டைக் காலத்தில் தலைவி பெரும்பாலும் இல்லம் சார்ந்த இடங்களிலேயே உலவி நின்றாள் எனத்
தெரிகிறது. ‘மனைவி’, ‘இல்லாள்’, ‘மனையுறை மகளிர்’ போன்ற சொற்றொடர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
தலைவி குறிகள் நிகழும் இடத்தைக்கூடத் தானே குறிக்கிறாள். இதனைத் தொல்காப்பியர்,
'இரவுக் குறியே இல்லகத்துள்ளும்
|
மனையோர் கிழவிகேட்கும் வழி அதுவே
|
மனையகம் புகா அக் காலையான'
|
(தொல். கள. 40)
|
'பகற்புணர் களனே புறம்என மொழிப
|
அவள் அறிவுணர வருவழியான'
|
(தொல். கள. 41)
|
என்று புலப்படுத்துகிறார். எனவே, தலைவி தன் இல்லத்தின் புறத்தே, இல்லில் உள்ளோர் பேசுவது
கேட்கும் தூரத்தில் மட்டுமே செல்லும் இயல்பினை உடையவளாக இருந்திருக்கிறாள். இறையனர்
அகப்பொருள் உரையும்,
'இரவு மனை இகந்த குறியிடத்தல்லது
|
கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை'
|
(இறை. அகப்பொருள். 21)
|
என்ற நூற்பாவில், தலைவி, தலைவனைச் சேரும் எல்லையை வரையறை செய்கிறது. அகநானூற்றுத் தலைவியை,
'தன் இல்லகத்தே விட்டுச் செல்லாதே; நீ பேதைப் பருவத்தினள் அல்லள் பெதும்பைப் பருவத்தினை
அடைந்துவிட்டாய்!’ எனக் கடிந்து கொள்ளும் தாயைக் (அகம்.7; 5-7) கயமனார் காட்டுகிறார்.
ஆதிமந்தியார் தன் கணவனைக் காவிரியாற்றில் தொலைத்த நிலையில் அவனைத் தேடிச் செல்கிறாள்.
‘தன் கணவன் என்ன ஆனான்’ என்று தெரியாமல் அவனைத் தேடிச் செல்கிறாள். ஆதிமந்தியார் சென்ற
செலவின் நோக்கம் வேறுபட்டது. தலைவி, ‘தலைவனைப் புணர்ச்சியின் நோக்கமாகத் தான் தேடிச்
செல்லுதல் கூடாது’ என்று தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். ஆதிமந்தியார் புணர்ச்சி
நோக்கமின்றித் தன் முதலையே தொலைத்த நிலையில் தேடிச் செல்லுதல், தமிழ்ப்பண்பாட்டு மரபைச்
சிதைப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தலைவி தன் முதல்வனையே (கணவனையே) தொலைத்த நிலையில்
தலைவன் உள்ளவிடத்துத் தேடிச் செல்லலாம் என்ற புதிய விதி தொல்காப்பியத்துள் மறைந்து
நிற்பதை ஆதிமந்தியாரின் பாடல் வழி அறியமுடிகிறது.
|