திருப்பாவையில் குறிப்புப் பொருள்
தமிழகத்தில் பக்தி மணம் கமழச் செய்த பெரியோர்களில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் சிறந்து விளங்கினர். கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பெருக்கெடுத்தோடிய பக்தி வெள்ளம், நிலையாகத் தன் பயனை உலகிற்கு அளித்துள்ளதைக் காணமுடிகிறது. தமிழ்நாட்டில் இறைநெறி பரவுதற்கு ஈடும், எடுப்பும் அற்ற இனிமைத் தமிழ் ஒரு சிறந்த கருவியாகவே இருந்து வந்திருக்கிறது. மார்கழித் திங்களில் சைவர்கள் திருவெம்பாவை படிப்பதும், வைணவர்கள் திருப்பாவை படிப்பதும் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும். ஆண்டாள் இயற்றிய ‘திருப்பாவை’ முப்பது பாடல்களைக் கொண்டது. இவை நெஞ்சையள்ளும் உணர்ச்சிப் பாடல்களாகவே அமைந்துள்ளன. படிக்குந்தோறும் ஆராயின்பம் மாறாது வழங்கும் இறைநெறிப் பாடல்களாகவே திகழ்கின்றன. ஆண்டாள், இறைவனோடு உயிர் மணந்து கொள்வதையே பாடியுள்ளார். ஆண்டாள் பாடிய திருப்பாவையில் மனித சமுதாயம் பின்பற்றி ஒழுக வேண்டிய இறைநெறிகளைக் குறிப்புப் பொருளால் உணர்த்தியிருப்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திருப்பாவையும், ஆண்டாளும்:
ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை பெரியாழ்வார் பாடிய திருமொழிக்கு அடுத்தாக வைத்துத் தொகுக்கப் பெற்றிருக்கும் சிறப்பினைப் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் இயற்றியுள்ளார். இவற்றில் திருப்பாவை மார்கழி மாதத்தில் தமிழக மக்களால் தினந்தோறும் படிக்கப்பெறும் சிறப்பினை உடையது. திருப்பாவையில் ‘வெள்ளியயழுந்து வியாழ முறங்கிற்று’ (13:4) என்ற பாடலடியில் உள்ள குறிப்பை வைத்து ஆண்டாள் கி.பி.716-ஆம் ஆண்டு திருவாடிப்பூரத்தில் அவதரித்ததாகக் கணக்கிடுகிறார் மு.இராகவையங்கார்.’ ஆண்டாள் இராமானுசருக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த போதிலும் வைணவ மரபுப்படி இராமானுசருக்குத் தங்கையாகக் கருதப்படுகிறார்.
புலப்பாட்டு நெறியில் குறிப்புப்பொருள்:

புலவன், ‘தான் கருதிய பொருளை உட்பொருளாய் அமைத்து வெளிப்படையாய் உவமையை மட்டும் கூறுவான். தான் உள்ளுறுத்துக்கூறக் கருதிய பொருள் இதனோடு ஒத்து முடிக’ என்று உட்பொதிந்து கூற, அது முற்றுப்பெற அமைவதே உள்ளுறை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இதனை,

'உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிக என
உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமை'
(தொல்.994)

என்ற நூற்பாவின் வழி விளக்குகிறார்.

நச்சினார்கினியர், யான் புலப்படக் கூறுகின்ற இவ்வுவமத்தோடே புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடிவதாகவென்று புலவன் தான் உள்ளத்தே கருதி, தான் அங்ஙனம் கருதும் மாத்திரத்தேயன்றியும், கேட்போர் மனத்துக்கண்ணும் அவ்வாறே நிகழ்வித்து, அங்ஙனம் உறுப்பாகிய சொல்லெல்லாம் நிறையக் கொண்டு முடிவது உள்ளுறை உவமம்’ என்று உரை செய்கிறார். மேலும் அவர் அதனானே புலவன் தான் கூறியது. கூறாதவழியும் கேட்போர் இவன் கருதிய பொருள் ஈதென்றாராய்ந்து கோடற்குக் கருவியாகிய சில சொற்கிடப்பச் செய்தல் வேண்டுமென்பது கருத்தாயிற்று என்று புலவன் படைத்த படைப்பின் நோக்கத்தை வலியுறுத்துகிறார். இதிலிருந்து படைப்பாளி, ஒரு கருத்தை உள்ளுறை ஆக்க வேண்டும் என்று முன்னரே அமைத்துக் கொள்வான் என்பதும், அவ்வாறு அமைத்துக் கொள்வதை வாசகர் கண்டு தெளிந்து சுவைக்கும் பொருட்டு சில சொற்களை விட்டுச் செல்வான் என்பதும் தெளிவாகிறது.

திருப்பாவையில் குறிப்புப் பொருள்:

திருப்பாவையில் எளிதாக விளங்கும் பொருள் ஒன்று உண்டு. சற்று ஆழ்ந்து நோக்கிக்காணும் உள்ளுறைப் பொருளும் உண்டு. திருப்பாவையின் பாடுபொருள்களாகத் துயில் எழுப்புதல், மார்கழி நீராட அழைத்தல், மழை வேண்டியும், நல்ல மணாளன் வேண்டியும் பாவை நோன்பு நோற்றல், திருமாலைச் சிறப்பித்தல் என அமைகிறது. இப்பாடு பொருள்கள் திருப்பாவையில் மேலோட்டமாகக் காணப்படினும், மறைபொருளாகக் குறிப்பாகச் சில செய்திகளை அறியமுடிகிறது.

துயிலெழுப்புதல்:

ஆண்டாள் பாடிய திருப்பாவையில் பாவைநோன்பு நோற்பதற்குத் தம் தோழியரைத் துயில் எழுப்பும் பாங்கில் அமைந்த பாடல்கள் பத்து. பாவைப் பாடல்களில் ‘துயில் எழுப்புதல்’ (5-10) என்பது வழக்கத்தையயாட்டிய சொற்பொருளாக இருப்பினும், அச்சொல்லின் உட்பொருள், ஒரு மறைபொருளை உணர்த்தி நிற்பதைக் காணமுடிகிறது. ஆண்டாள் அதிகாலையில் துயில் எழ வற்புறுத்தும் பாடல்களில் தம் தோழியரை மட்டும் வற்புறுத்துவதாக மட்டும் பொருளல்ல. உலகத்து மக்கள் அனைவரும் (வையத்து வாழ்வீர்) ஆன்மீக விழிப்புணர்ச்சி பெரும் நோக்கத்திலேயே திருப்பாவையில் ஆண்டாள் ‘துயில் எழுப்புதல்’ என்ற பாடுபொருளை அமைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. திருப்பாவையில் இடம் பெற்றுள்ள பாடல்களில் மூன்றில் ஒரு பகுதிப் பாடல்களில் துயிலெழுப்பும் பொருண்மை குறிப்பிடப்பட்டுள்ளது. துயில் எழுந்த சிறுமிகள் திருமாலையும் அவன் உறவினரையும் திருப்பள்ளியயழுச்சி செய்ய முயல்வதாக ஏழு பாடல்கள் அமைந்துள்ளன. இறைவனைக் காக்கும் அடியவர்களின் மனக்கதவு திறப்பின் இறைவனை எளிதில் காண இயலும். இங்கு ஆண்டாளும் அவளது தோழியர்களும் நந்தகோபனின் கோயில் காவலன் உதவியுடன் உள்ளே புகுந்து நப்பின்னை, யசோதை, பலதேவன் போன்றோரது துணையால் கண்ணனைக்காணும் நிலையைக் காண முடிகிறது. இத்திருப்பள்ளி எழுச்சி முறை வழிபாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. இறைவழிபாட்டில் அதிகாலை திருப்பள்ளியயழுச்சி முதல் இரவு பள்ளியறை வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் தமிழகத் திருக்கோயில் வழிபாட்டு மரபுகளாகவே பின்பற்றப்படுகின்றன.

நீராடுதல்:

தோழியரை அதிகாலையில் துயில் எழுப்பி நீராட அழைக்கும் ஆண்டாள், தம் தோழியருடன் நீராடியதாக எந்தப் பாடலிலும் குறிப்பு இல்லை. அவ்வாறு இருக்க நீராட அழைக்கும் நோக்கத்தை, பெரியவாச்சான் பிள்ளை பின்வருமாறு விளக்குகிறார். தனித்து செய்ய முடியாத காரியத்திற்குப் பிறர் துணையை நாடுவது மக்கள் இயல்பு. இறைவன் அருள்வெள்ளத்தில் நீராடுவது எளிதான காரியம் அல்ல. தேவர்களும் இறைவனைப் பற்றிய ஞாலத்தை முற்றிலும் உணர்ந்தவர் இல்லை என்பர். காகங்கள் உணவைத் தனியே உண்ண விரும்பாமல் அச்சத்தால் தன் இனமான காகங்களைத் துணைக்கு அழைத்து உண்ணும். எனவே பரம்பொருளின் இன்பத்தைத் தனியாக அனுபவிக்க இயலாது என்று தம் தோழியரை அழைத்து பாவை நோன்பிற்கு அழைக்கும் நோக்கத்தின் உட்பொருளை அவர் விளக்குகிறார். நீராடல் என்ற சொல் ‘கலவி’ என்னும் பொருளைத் தரும். அகப் பொருளில் வரும் ‘சுனையாடல்’ போன்றது. எனவே நீராட அழைத்தல் தொடர்பான பாடல்கள் கண்ணபரமாத்மாவுடன் பரம பாகவதர்கள் விரும்பும் பேரின்பக் கலவியைக் குறிக்கின்றது என்பர்.

பாவை நோன்பு
வழிபாடு தனிவழிபாடு, கூட்டு வழிபாடு என இருவகைப்படும். தனி வழிபாட்டின் நோக்கம் சுயநலமானது. கூட்டு வழிபாட்டின் நோக்கம் பொதுநலம் வாய்ந்தது. ஆண்டாள் தன் தோழியருடன் பாவை நோன்பு செய்வது கூட்டுவழிபாடாகும். எனவே தான் ஆண்டாள், பாவை நோன்பின் போது மழை வேண்டி வழிபாடு செய்கிறாள். ஆண்டாளின் இக்கூட்டு வழிபாடு மேண்மையானது. தன் நலன் கருதியோ பிறர் நலன் கருதியோ திருக்கோயில் அமைத்து இறைவனை நீராடி பூச்சொரிந்து வழிபடுவது புறவழிபாடு ஆகும். ஆண்டாள், பதுமை போன்ற உருவினை வைத்து தம் தோழியருடன் சேர்ந்து செய்யும் நோன்பு புறவழிபாட்டின் அடிப்படையில் அமைந்தது.
முக்தி நிலை:

ஆன்மா இறைவனை எவ்வகையாலும் சார்ந்து இன்புறுதலையே முக்தி என்று அழைப்பர். ஒவ்வொரு சமயங்களிலும் இறைவனை அடைய பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சமயங்களின் உண்மை நிலையை நோக்கும்போது அவை ஒவ்வொன்றும் முரண்பட்டன அல்ல என்பது தெளிவாகும். எல்லா ஆறுகளும் கடலை நோக்கியே பயணம் செய்வதைப்போல எல்லாச் சமயங்களும் இறைவனை நோக்கியே பயணிக்கின்றன. வழிபடு முறையும், வாழ்த்தும் நெறியும் எத்தனையோ வகையில் மாறுபடுகின்றன என்றாலும், அனைத்தும் ஒன்றாகவே முடியும் என்பது சமய நெறியாளர்களின் கருத்து என்பது பெறப்படும். முக்தி அடைவதற்கு உரிய மார்க்கங்களை நான்காகப் பகுத்துள்ளனர் அறிஞர்கள். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவையாகும். இவை முறையே, இறைவனன்றி பிறிதொன்றும் இல்லை என்ற நிலை, மனதை ஒழுங்குபடுத்துதல், இறைவனின் உருவத்தை அமைத்து வழிபடுதல், அன்றாட சடங்குகளைச் செய்தல் என்பனவாகும். சைவ சமயத்தைச் சார்ந்த அடியவர்களே பின்பற்றும் இக்கொள்கையை ஆண்டாள் தம் பாவையில் குறிப்பிட்டிருப்பது சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தவதாக அமைகிறது. எப்பிறவியிலும் இறைவனையே சரணடைய வேண்டும் என்ற கருத்தை,

'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உணர்க நாட ஆட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்'
(திருப்பாவை. 29; 3-6)

என்ற பாடலின் வழி அறிய முடிகிறது. இறைவனையே எப்பொழுதும் நினைத்து வாழும் யோக நிலையை,

'உனறன்னோடுறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாது'
(திருப்பாவை. 28 : 5)

என்ற பாடலடியாலும், மனம், மெய், மொழி என்ற மூன்றினாலும் இறைவனை வழிபடும் கிரியை நெறியும், இறைவனை வழிபட்டால் தம் பிழைகள் யாவும் அகலும் என இறைவனை முழுமையாக அறிந்த அவர்களது ஞானநெறியும் ஒருங்கே அமைந்திருப்பதை,
'தூயோமாய் வந்து நாம் தூமலர்கள் தூய்ததெழுந்து
வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதரு வானினறனவும்
தீயனில் தூசாகும் செப்பலோரெம்பாவாய்'
(திருப்பாவை. 30)

என்ற பாடலடிகளாலும் அறிய முடிகிறது. திருப்பாவையில் உள்ள 30 பாடல்களையும் தவறாமல் ஓதுபவர்கள் திருமாலின் அருள்பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று திருப்பாவையினால் ஏற்படும் பயன்களைக் குறிப்பிடும் ஆண்டாள், இறைவன் நமக்குப் ‘பறை’ தருவான் என்ற செய்தியையும் குறிப்பிடுகின்றார். ‘பறை’ என்ற சொல் இசைக்கருவி, பரிசுப்பொருள் என்ற பொருள்களை மட்டும் தருவதாகச் சுட்டப்பெறவில்லை. ஆண்டாள் பாடல்களில் குறிப்பாகப் ‘பறை’ என்ற சொல் வீடுபேற்றைக் குறிப்பதாகவே அமைகிறது. இலக்கியத்தின் நோக்கம் அறம், பொருள், இன்பம் உணர்த்துவதாகும். அதனோடு வீடுபேற்றையும் தரும் என்ற கருத்தைத் தன் சங்கத் தமிழ்மாலையின் வாயிலாகக் குறிப்பாக உணர்த்துவதன் மூலம் அனைவராலும் போற்றிப் பின்பற்றப்படும் புனித நூலாகத் திருப்பாவை மதிக்கப்படுகிறது.