மலர், மாலை, நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றிலேயே
படைக்கப்பெறும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் திருவுருவங்கட்கு எண்ணெய் சார்த்தித் திருநீராட்டுச்
செய்யப்பெறும்.
மூர்த்திகட்குத் திருநீராட்டுச் செய்யும் போது அதற்கென அன்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே
நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண்கலன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. (திருக்குட
நீராட்டு விழா போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப் பெறும்.)
தமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருவங்கட்கு ஆடை, அணி, மாலை முதலியவை அணிதல் கூடாது.
ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும். மா, வாழை, பலா, இளநீர்,
தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் படைக்கப்படுகின்றன.
கோயில் பொது வழிபாடு நிறைவேறியதும் தேங்காய், பழம், மலர் முதலியன நிறைந்த படையல் தாம்பாளத்தை
வந்திருக்கும் பெருமக்களில் வயது, அனுபவம் முதலியவற்றால் மூத்த ஒருவருக்கு (சாதி-மத
பேதமின்றி) வழங்கிய பின் யாவர்க்கும் சந்தனம், மலர், சர்க்கரை ஆகியவை அருட்பொருளாய்
(பிரசாதம்) வழங்கப்பெறும்.
மூர்த்திகட்கு நீராட்டுவதும், ஆண்டு பன்னிரண்டுக்குமேல் போகாமல் வரையறை செய்துவிட வேண்டும்.
எண்ணெய், பால், தயிர், இளநீர், பழச்சாறுகள், நறுமணநீர், கங்கை, மந்திரக் கலயநீர், பன்னீர்
போன்றவை திருநீராட்டுக் காலத்தில் பயன்படுத்தப்பெறும்.
மந்திரக் கலயநீரை புனிதநீராக ஆக்குவதற்கு மூன்று, ஆறு, பன்னிருவர் இருந்து தமிழ்ப்
பாசுரங்கள் பாடிப் பாராயணம் செய்யவேண்டும். 16, 24, 32, 64, 96, 108 முறை மாறி மாறிப்
பாசுரங்கள் ஓதப்படும். அத்துடன் போற்றி வணக்கம் ஓதி மலரும் பச்சிலையும் தூவப்படும்.
இந்த மந்திரக் கலயநீரை மேளவாத்தியம், தீவட்டி முதலிய மயாதையுடன் எடுத்துச்சென்று திருநீராட்டுச்
செய்யப்படும்.
தமிழ்த்தாய் மீது மரபுக்கேற்றவாறு புலவர் பெருமக்களைக் கொண்டு பாடல்கள் யாத்துத் "தமிழ்த்தாய்ப்
பிரபந்தம்' எனத் தமிழ்த்தாய்க் கோயில் திறப்புவிழாவின் போது போற்றி நூல் வெளியிடப்பெற்றது.
அப்பிரபந்தப் பாடல்களை நாள்தோறும் கோயிலில் ஓதுவார் இசைக்க, வழிபாடு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் எங்குமில்லாத தமிழ்த்தாய்க் கோயிலை, திரு. வெங்கா அவர்களின் தலைமையிலான
"கம்பன் அறநிலை' செவ்வனே நிருவாகம் செய்து வருகிறது; இந்தக்கோயில் தமிழுக்கும், தமிழகத்துக்கும்
என்றும் சீரும், சிறப்பும் தருவதாக அமைந்துள்ளது.
|