சுகம் தரும் சுகந்தவனேசுவரர்

பாண்டிய நாட்டுச் சிவத்தலங்களில் பெரிச்சிக் கோயில் அருள்மிகு சுகந்தவனேசுவரர் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இவ்வூர் "காங்கேயன்’ என்னும் குறுநிலமன்னனுக்குத் தலைநகராக விளங்கியது. இக்கோயில் கல்வெட்டு ஒன்றில் இவன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூலுக்குக் கொடை வழங்கிய செய்தி குறிக்கப்பட்டிருக்கிறது. தென்னகக் கலை மரபிற்கு முற்றிலும் புதியவரான பைரவன் சிற்பம் இங்கு நவபாசானத்தால் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். பைரவரும், ஒற்றைச் சனீசுவரரும் வேண்டும் வரங்களைத் தரும் கற்பகத் தருவாகத் திகழ்கின்றனர்.

அமைவிடம்:

பெரிச்சிக்கோயில் சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் காரைக்குடியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், திருப்புத்தூலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூன் தெற்கே மணிமுத்தாறு பாய்கிறது.

இப்போது பெரிச்சிக்கோயில் எனப்பெயர் பெற்றுத்திகழும் இத்திருத்தலம், கல்வெட்டுகளில் சிறுபெரிச்சியூர், சிவபெரிச்சியூர், திருமட்டுக்கரை என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இறைவியின் பெயராகிய "பெரியநாச்சியார்' என்பதே நாளடைவில் மருவி ஊருக்குப் பெயராக வழங்கிவிட்டது. "மட்டு' என்ற சொல் மணிமுத்தாற்றைக் குறிக்கும். மணிமுத்தாற்றின் கரையில் இவ்வூர் அமைந்து உள்ளதால் "திருமட்டுக்கரை' என்று வழங்கப்பட்டுள்ளது.

இறைவன் - இறைவி பெயர்க்காரணம்:

இங்குள்ள இறைவன் "திருத்தியூர் முட்டத்து உடையார்' என்றும், "திருமட்டுக்கரை ஆண்ட நாயனார்' என்றும் கல்வெட்டுகளில் வழங்கப்படுகிறார். இறைவி பெரிய நாச்சியார் என அழைக்கப்படுகிறார். விஜய நகரப் பேரரசின் கீழ்த் தமிழகம் வந்தபோது நாயனார் சுகந்தவனேசுவரர் என்றும் பெரிய நாச்சியார் சௌமியவல்லி, சமீபவல்லி என்றும் புதிய பெயர் பெற்றுள்ளனர். வாசனை (சுகந்தம்) மிகுந்த மரங்களால் சூழப்பட்ட இப்பகுதியில் இலிங்கம் சுயம்பாகத் தோன்றியதால் இறைவன் சுகந்தவனேசுவரர் எனப்பெயர் பெறுகிறார்.

தலபுராண வரலாறு:

பலநூறு ஆண்டுகளுக்குமுன் சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்திய திருவிளையாடலின் ஒருபகுதி பெரிச்சியூர் என்று அழைக்கப்பட்ட இத்திருத்தலத்திலும் நிகழ்ந்தது. மதுரையைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தன் மாமனின் விருப்பப்படி மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்வதாகக் கடற்கரைப்பட்டினத்தில் இருந்து அழைத்துக்கொண்டு மதுரைநோக்கி வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் மாலைநேரம் ஆகிவிட்டதால் பெரிச்சிக்கோயில் என்ற இத்திருத்தலத்தில் இரவுப்பொழுதைக் கழிப்பதற்காகத் தங்கினான். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது நச்சுப்பாம்பு ஒன்று அவனைத் தீண்டிட உயிர் துறந்தான். அவன் மணம் செய்து கொள்ள அழைத்து வந்த மணமகள் இதனால் பெதும் துயருற்றுத் துடித்து அழுது புலம்பினாள். அந்நேரம் அவ்வழியே யாத்திரை வந்த திருஞான சம்பந்தர் அப்பெண்ணின் துயரைக்கண்டு மனமிறங்கி இத்திருத்தலத்தில்தான் சுகந்தவனேசுவரரை வணங்கி வணிகன் உயிர்பெற்று எழவேண்டும் என்று பதிகம்பாடினார்.

இத்திருத்தலத்தின் இறைவன் அருளால் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். பின்னர் ஞானசம்பந்தரே இக்கோயிலில் உள்ள வன்னிமரம், கிணறு, இலிங்கம் இவற்றைச் சாட்சியாக வைத்து வணிகனுக்கும் அவன் மாமன் மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். பின்னர் வணிகன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு மதுரை சென்றடைந்தான். அங்கே மதுரையம்பதியில் வணிகன் மனைவி இந்த இளையவளைக் கண்டவாறு பேசித் துரத்த முயன்றாள். இளையவனும், மூத்தவளின் நச்சுச்சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்புற்றுப் பொற்றாமரைக் குளத்தில் நீராடிச் சோமசுந்தரக் கடவுள் முன் முறையிட்டாள். "நான் என் கணவரை மணமுடித்துக்கொண்டது உண்மையானால் இப்பொழுதே என் திருமணம் நடந்தபோது சாட்சிகளாக இருந்த வன்னிமரமும், கிணறும், இலிங்கமும் இங்குத் தோன்றவேண்டும்; இல்லையேல் என் உயிரை இக்கணமே மாய்த்துக்கொள்வேன் என்று சத்தியம் செய்தாள். உடனே மேற்கூறிய மூன்று சாட்சிகளும் தோன்றி இவளுக்கு இவ்வணிகனுடன் திருமணம் நடந்தது உண்மை எனப் பறைசாற்றின. இதற்குத் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ஆதாரமில்லை. இப்பெருமை வாய்ந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சுகந்தவனேசுவரரை நெஞ்சுருகத் துதிப்போருக்கு வேண்டியவை வேண்டியவாறே கிடைக்கப்பெறும்.

திருக்கோயில் அமைப்பு:
அருள்மிகு சுகந்தவனேசுவரர் கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியை உடையது. கருவறையில் சுகந்தவனேசுவரர் சுயம்பு இலிங்கமாகக் காட்சி தருகிறார். கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தில் சமயகுரவர் நால்வர் வடக்கு நோக்கியவாறு வீற்றிருக்கின்றனர். பரிவார தெய்வங்களாக விநாயகர், சுப்பிரமணியர், சமீபவல்லி, பைரவர், ஒற்றைச் சனீசுவரர் ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. வன்னிமரத்து விநாயகர், மடைப்பள்ளி, தலத்தீர்த்தம், நந்தவனம் ஆகியவையும் முதல் திருச்சுற்றிலேயே இருக்கின்றன.
பைரவர் சன்னதி:
சுகந்தவனேசுவரர் சன்னதியின் இடப்புறத்தில் பைரவர் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கிறார். இங்குள்ள பைரவர் சிற்பம் நவபாசானத்தால் "போகர்' என்ற சித்தரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சித்தர் பழனிக்குச் செல்லும் வழியில் இவ்வூல் தங்கி நவபாசானத்தால் இப்பைரவரைச் செய்தார் என்று கூறப்படுகிறது. பழனியில் உள்ள நவபாசான முருகனைப் போல் அல்லாமல் இங்குள்ள நவபாசான பைரவர் நேர் மாறான விளைவுகளைத் தரக்கூடியவர். இப்பைரவருக்கு நிவேதனமாகச் சாத்தப்பெறும் வடை மாலையை யாரும் உண்பதில்லை. ஏனெனில் இங்குள்ள நவபாசான சிலையில் சாத்தும் வடைமாலையை உண்டால் வெண்குட்ட நோய் வந்துவிடுவதாக மக்கள் கருதுகின்றனர் (எறும்பு கூட இவ்வடைமாலையை உண்பதில்லை). இங்குள்ள பைரவர் மேற்கு நோக்கியவாறு அமைந்திருப்பது சிறப்புடையதாகும்.
சனீசுவரர் ஆலயம்:

இப்பகுதி மக்களால் சிறப்பாக வழிபடக்கூடிய தெய்வம் சனீசுவரன். இக்கோயிலில் சனீசுவரன் வடகிழக்கு மூலையான சனிமூலையில் தனியாகக் காணப்படுகிறார். இவ்வாறு சனீசுவரன் தனித்திருப்பது சிறப்பாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சனிப்பெயர்ச்சியின் போது இங்கு மக்கள் திரளாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

வழிபாடு:

பெரிச்சிக்கோயில் சுகந்தவனேசுவரர் திருக்கோயிலில் காரண ஆகம முறைப்படி பூசைகள் நடைபெற்று வருகின்றன. கி.பி. 1940-ஆம் ஆண்டு வரை நான்குகாலப் பூசைகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போது உச்சிக்காலப் பூசை மட்டும் நடைபெறுகிறது. திருக்கார்த்திகை, மகா சிவராத்தி, ஆருத்ராதசனம், நவராத்தி, சனிப்பெயர்ச்சி ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோயிலின் தென்புறம் அமைந்துள்ள கிணறு தலத்தீர்த்தமாகவும், வன்னிமரம் தலவிருட்சமாகவும் திகழ்கிறது.