ஒரு பெண் விபச்சாரியாக மாற அக்குடும்பத்தில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையே காரணமாக
அமைகிறது. இக்கதையின் தலைவியும் வறுமையின் கரணமாகக் குடும்பத்தின் சுமையைத் தாங்க,
விபச்சாரியாக மாறுகிறாள். கவிஞர் 'அப்பா இரயில் விபத்தில் இறந்த போது தன் பள்ளிப்படிப்பிற்கு
முற்றுப்புள்ளி விழுந்தது. குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய வாகனம் போல் வறுமை பாதாள
விளிம்பில் நின்றது. அம்மா நகைகளை விற்றாள். அப்புறம் காய்கறி விற்றாள். தலையில் சுமந்து
விறகு விற்றாள். பிறகு கற்பை விற்றாள்! எங்களுக்குக் கால் வயிறு நிரம்பியது..... எனக்கு
இரட்டைச் சடைபோட்டு ரோஜாப்பூ வைத்துப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தவள் தானே, ஒற்றைச்சடை
பின்னி கனகாம்பரம் வைத்து இரவுப் பள்ளிக்குப் போகத் தொடங்கினாள்' என்ற காரணத்தை விவரிக்கிறார்.
இந்தியத் திருநாட்டில் 'வறுமை' தலைவிரித்து ஆடுகிறது. உலக நாடுகளில் இந்தியாவில் தான்
பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு தான் பட்டினிச்சாவுகள் அதிகம்
நடக்கின்றன. 'ஈ மொய்க்கும் ஓர் ஈயக் குவளை நீட்டிப் பிச்சை கேட்கிறது ஒரு கரம்' என்று
இந்தியாவின் வறுமை நிலைக்காக வருத்தப்படுகிறார்.நம் நாட்டிற்கு உரிய இந்தச் சாபக்கேட்டை
அகற்றும் முகமாகக் கவிஞரின் சிந்தனை கவிதைகளில் தெரிகிறது. 'திரும்பத் திரும்ப நான்
பார்க்கவும், கேட்கவும் அறவே விரும்பாதவை இரண்டு. ஒன்று என் வளநாட்டின் தீரா வறுமை
மற்றொன்று வேலையில்லாத் திண்டாட்டம்' என்று குறிப்பிடுவதன் மூலம் கவிஞரின் தேசப்பற்று
தெரிகிறது.கதைத் தலைவனின் தோழன் ஓர் இயக்கத்தினைச் சார்ந்து பல போராட்டங்களை நடத்துகிறான்,
'தீபங்களைத் தூக்கியபடி உச்சக் குரலில் வேலை கொடு! எங்களை வாழ விடு' என்று தோழர் அதன்
முன்னிலையில் இருந்து குரல் கொடுப்பதாகக் காட்டுகிறார்.
பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிஞர்கள் வரிசையில் சிற்பி பாலசுப்பிரமணியன்
குறிப்பிடத்தக்கவர். 'பூக்களுக்கு முதுகெலும்பும் இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பும்
இல்லை'. எனவே தேடிப்போன ஒவ்வொரு மாளிகையும் விதவிதமான காமவெறிக் கானகமாய்க் காட்சியளிக்கிறது.
ஒரு நாள் கூலி வேலைக்குப்போய் இருட்டுச் சந்தில் திரும்பியவளை ஒரு குடிகாரன் வழி மறித்து
கற்பழிக்கிறான். அப்போது அவளைக் காப்பாற்ற எந்தப் 'பேடியும்' வரவில்லை என்று கவிஞர்
பாலியல் கொடுமைகள் நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறார்.
விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் இயல்பாக, 'ஊருக்கொரு பெயர், நாளுக்கொரு பெயர்,
ஆளுக்கொரு பெயர், நொடிக்கொரு மதம் மாறுவோம், அடிக்கடி மனம் மாறுவோம்' என்றும், 'குவிந்து
விரியும் இரப்பர் உதடுகள்' என்றும் குறிப்பிடுகிறார். விபச்சாரத் தொழிலில் ஈடுபடும்
அவளை ஒருமுறை பார்க்கச் செல்லும் பொழுது 'தெரு முனையில் ஒரு பையன் அவன் கையில் ஒரு
காகிதம் திணித்தான்... போலீஸ் முற்றுகையில் இடமாற்றம். 17, இராமர் கோவில் தெரு, என்று
முரண்தொடையாகக் குறிப்பிடுவதன் மூலம் ஆசிரியரின் புலப்பாட்டு உத்தி புலனாகிறது.
கவிஞர் இந்திய நாட்டின் மீது கொண்ட நாட்டுப்பற்றை அவர்தம் கவிதைகளில் காணமுடிகிறது.
'அன்று குடியரசு நாள், கொடிகள் கம்பத்தின் உச்சியில் படபடத்துத் துடிதுடித்துக் கொண்டிருந்தன.
பத்திரிக்கைப் பக்கங்களில் இளம் நடிகைகள் சுதந்திர மகிமையை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தனர்'
என்று குறிப்பிடுகிறார். இன்றும் கூடச் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில்
தொலைக்காட்சிப் பெட்டிகளில் நடிகர், நடிகைகளின் பேட்டிகள் அதிகம் இடம் பெறுவதைக் காணமுடிகிறது.
தேசியக் கொடியைத் தலைகீழாக ஏற்றும் அதிகாரிகள், அரசியல் வாதிகள் இருக்கும் பட்சத்தில்
கவிஞரின் தேசப்பற்றுப் போற்றுதற்குரியது. நம்பிக்கையோடு தொடங்கப்படுகிற ஒவ்வொரு பயணமும்
நச்சு அழிக்கின்ற யாகங்கள் தொடங்க வேண்டும் என்ற குறிப்புப் பொருள்பட 'சர்ப்பயாகம்'
என்ற படைப்பையும், இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்காகப் படைத்துள்ள பாங்கினையும்
அறிய முடிகிறது.
|