புறநானூற்றில் கடைநிலை

கடைநிலைத் துறையில் புறநானூற்றில் அமைந்த பாடல்கள் பதினொன்று. இவற்றில் புறம் 127ஆவது பாடல் தவிர ஏனைய பாடல்கள் அனைத்தும் புறநானூற்றின் இறுதியில் (புறம். 382, 383, 384, 391, 392, 393, 394, 395, 396, 398) தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன :

 
வ. எண். பாடல் எண். புலவர் பெயர் பாடப்பட்டோன்
1 127 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன்
2 382 கோவூர்கிழார் சோழன்நலங்கிள்ளி
3 383 மாறோக்கத்து நப்பசலையார் அவியன்
4 384 புறத்திணை நன்னாகனார் கரும்பனூர்கிழான்
5 391 கல்லாடனார் பொறையாற்றுக் கிழான்
6 392 ஒளவையார் அதியமான் பொகுட்டெழினி
7 393 நல்லிறையனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
8 394 கோனாட்டு எறிச்சலூர் மதுரைக்குமரனார் சோழிய ஏனாதி மாடலன் திருக்குட்டுவன்
9 395 மதுரை நக்கீரர் சோழநாட்டுப் பிடவூர் மகன் பெருஞ்சாத்தன்
10 396 மாங்குடிக் கிழார் வட்டாற்றெழினி யாதன்
11 398 திருத்தாமனார் சேரமான் வஞ்சன்
 
புறநானூற்றில் கடைநிலை:
 
ஆய் அண்டிரனது அரண்மனையில் மங்கல அணி தவிர வேறு ஏதும் அணியாத மகளிரும், களிறுகளின்றிக் காணப்படும் கட்டுத்தறிகளும் உள்ளன. பொலிவிழந்த அரண்மனையாகக் காட்சியளிக்கிறது என்று அண்டிரனின் அரண்மனையை உறையூர் ஏணிச்சேரி முடிமோசியார் சிறப்பிக்கிறார் (புறம்.127). இப்பாடலின் துறை கடைநிலை எனக் குறிக்கப்படுகிறது. எனினும் இப்பாடலில் ஆய் அண்டிரனின் கொடைத்தன்மை மட்டுமே சுட்டப்படுகிறது. இப்பாடலில் மோசியார் வாயில் காவலனிடம் கூறியதாகவோ, வாயிலில் நின்றதாகவோ குறிப்பு இல்லை. அவ்வாறு இருக்க இதற்குக் கடைநிலை என்று கொண்டதன் பொருத்தம் புலனாகவில்லை. இப்பாடலில் அண்டிரனின் அரண்மனைவாயில் இடம் பெறுவதால் கடைநிலை என்று குறித்தனர் போலும்.

சோழன் நலங்கிள்ளியின் மறம்பாடும் பொருநர் கூட்டத்தைச் சந்தித்த கோவூர்கிழார் கிணைப் பொருநன் கூற்றில் சோழன் நலங்கிள்ளியின் வண்மையைப் புகழ்ந்து (புறம்.382) பாடுகிறார். நான் சந்தித்த பொருநர், 'உன்னைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டோம்' என்று கூறி என்னை உன்னிடம் ஆற்றுப்படுத்தினர். நான் முன்பு பரிசு பெற்ற சிறாருடன் உனைக் காண வந்துள்ளேன். பாம்பு போலத் தொடர்ந்து வரும் வறுமை நீக்கி அருள்வாயாக! என்று கோவூர் கிழார் வினவுகிறார். புலவர் இவ்வாறு மன்னனிடம் தான் வேண்டும் பரிசிலை வேண்டுவது பரிசில் துறையாகும். இப்புறப்பாடலில் ஆற்றுப்படையின் அமைப்பும் அமைந்து கிடக்கிறது. ஆனால் இப்புறப்பாட்டு 'கடைநிலை'யில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாட்டைத் தொல்காப்பியர் கூறும் 'கடைநிலை' என்று கொள்வதைவிடப் 'பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலை' என்று கொள்வதே பொருத்தமாக உள்ளது.

கோவூர்கிழார் பாடல் புறவாயிலில் புலவன் நிற்பதாகக் கூறவில்லை. பாடலில் பயிலுகின்ற 'நின் பொருநர், விடுதி அத்தை, நினவே' என்று வருகின்ற சொற்கள் கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளியை நேருக்கு நேர் பார்த்துப் பாடுவதாகவே பாடியிருக்கிறார். இப்பாடலில் புலவர் தன்னுடைய வறுமை நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆதலின் கடைநிலை என்பது புலவர் (அ) கலைஞர்களின் வறுமை நிலையை, வாழ்க்கையின் கடை நிலையைக் கூறுவதாகப் பொருள் செயின் இது துறைக்குப் பொருத்தமாக அமையும். முற்றக்கற்ற உரையாசிரியர்கள் இவ்வாறு பொருள் கொண்டனர். இப்பாடலுக்கு உரையயழுதிய ஒளவை, சு.துரைசாமிப்பிள்ளை தொல்காப்பியர் கடை நிலையையும், பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையையும் ஒன்று என்று கொண்டு இங்கு விளக்கம் தந்துள்ளார். ஆனால் பரிசில் கடைக்கூட்டு நிலை என்னும் இத்துறையை இரண்டாகக் கொண்டு இது பரிசில் கேட்பதாகப் பாடலில் வருவதால் பரிசில் கடைஇயநிலை என்று துறையாக வகுப்பதும் பொருத்தமாக உள்ளது.

பாண்டிய நாட்டுப் புலவர் நப்பசலையார் அவியன் என்ற குறுநில மன்னனைப் பாடிய பாட்டு (புறம்.383) கிணைப் பொருநன் கூற்றில் அமைந்துள்ளது. இப்பாடலில்,

'நுண்கோற் சிறு கிணை சிலம்பவெற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
தன் புக ழேத்தினெ னாக...'
(புறம்.383;3-5)

என்ற அடிகளில் 'நெடுங்கடை' நின்று என்று வருவது கடைநிலைத் துறைக்குப் பொருத்தமாக வருகிறது. இங்கும் புலவர் அவியனையன்றிப் பிறரைப் பாடமாட்டேன் என்று குறிப்பிடுகிறார். புலவரின் வறுமைநிலை பாடலில் பேசப்படவில்லை. நன்னாகனார் பாடலும் கிணைப் பொருநன் கூற்றாக அமைந்துள்ளது. 'எக்காலத்தும் தம்மைப் பொருள் கொடுத்துப் புரப்பான்' என்று புலவர் பாடுகிறார். வறுமைக் குறிப்பு இல்லையயன்றாலும் வள்ளல் தங்களுக்குச் செய்வதைக் கூறித் தன் பரிசில் வேட்கையைக் குறிப்பிடுகிறார்.

கல்லாடனார் பாடலிலும், தன்னைக் கிணைப் பொருநனாகவே பாடுகிறார். வேங்கடப் பகுதியிலிருந்த வறட்சி காரணமாகச் சோழ நாட்டிற்கு வந்ததாகப் பாடுகிறார். கரும்பனூர் கிழானிடத்தே கல்லாடனார் பரிசில் வேண்டி நிற்கிறாரே தவிர வேறுவொன்றும் வேண்டி இல்லை. அரண்மனை வாயிற்காவலனிடத்தே பாடிய குறிப்பும் இல்லை. பரிசில் வேண்டும் நிலையே இங்கு சுட்டப்படுகிறது.

அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஒளவையார் கடைநிலைத்துறைபட (புறம்.392) ஒரு புறப்பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலும் கிணைப்பொருநன் கூற்றில் அமைந்துள்ளது. பொருநன் ஒருவன், எழினியின் பெருமையினை முற்றத்தில் விடியற்பொழுதில் நின்று பறையறைந்தவாறு சிறப்பிக்கிறான். 'எம் மன்னவனிடம் பணிந்து வரி செலுத்தாத பகை மன்னர் அரண்களை அழித்து அவர்களைக்கொன்று, கழுதை ஏர்பூட்டி உழுது எள், கொள், வரகு முதலியவற்றை விதைக்கும் வீரமுடைய மன்னா நீ வாழ்வாயாக' என்று பகர்கிறான். இந்தப் பாடலில் கிணைப் பொருநன் பொகுட்டெழினியின் அரண்மனை முற்றத்தில் நின்று பாடுவதாகக் குறிப்பு உள்ளது. நெடுங்கடை நின்றியான் என்ற குறிப்பினைக் கொண்டு இப்பாடலைக் கடை நிலைத்துறை என்பது பொருந்தும். இப்பாட்டில் ஒளவையார் ஒரு பகுதியில் எழினியை வாழ்த்துகிறார். மற்றொரு பகுதியில் அவன் கொடை நலத்தைப் பாடுகிறார். கடைநிலைத் துறையில் வாழ்த்து எவ்வாறு பொருந்தும் என்பது தெரியவில்லை. இப்பாடலுக்கு வாழ்த்தியல் என்றும் துறை வகுக்க இயலும். இங்கு கடைநிலைத் துறை வாழ்த்தோடு கலந்து புதிய பொருண்மை பெறுகிறது. இப்பாடலில் கடைநிலை என்ற சொல்லோ வேறு குறிப்போ இல்லை. புலவன் வாழ்க்கையின் கடைநிலையில் நிற்கிறான். அவனுடைய வறுமையும் உண்டியற்ற அவலமுமே பாடலில் புனையப்படுகின்றன.

பல நாட்கள் உணவின்றி வறுமையில் வாடிய ஒருவன் தன்னைக் காக்க ஒருவருமின்றி இறுதியில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம், நிணம் கலந்த சோறும், மலர் போன்ற மெல்லிய ஆடையும் தந்து தம்மை ஆதரிக்கு முகமாகக் கிணைப் பொருநன் கூற்றில் அமைந்த பாடலை (புறம்.393) நல்லிறையனார் பாடியுள்ளார். இந்தப் பாடலில் தன்னை யாரும் ஆதரிக்காத நிலையில் இறுதியாகச் சோழன் ஆதரிக்க வேண்டும் என்று பாடுகிறார்.

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், சோழிய வேனாதி திருக்குட்டுவனைப் புகழ்ந்து பாடும் பாடல் (புறம்.394) ஒன்று உள்ளது. இதில் வறுமையுற்ற புலவரைத் திருக்குட்டுவன் சில நாட்கள் ஆதரித்தான். ஒரு நாள் புலவன் விடைபெற வேண்டி மன்னனிடம் அனுமதி கேட்டான். மன்னனும் யானையுடன் பொருளும் உடன்வரக் குமரனார்க்குப் பரிசில் நல்கினான். யானையினைக் கண்டு அஞ்சிய புலவர் அதனைத் திருப்பி அனுப்பினார். ஏனெனில் அது போரில் ஈடுபட்ட மறக்களிறு. மன்னன் திரும்பி வந்த யானைப்பரிசில் சிறியது எனப் புலவர் எண்ணினாரோ என்று நாணி மற்றொரு யானையையும் பரிசாக அனுப்பி வைத்தான். அதனை வியந்து கிணைப் பொருநன் பாடுவதாகப் புலவர் பாடியிருக்கிறார். இப்பாடலிலும் மன்னனை அரண்மனையில் விடியற்காலையில் புகழ்ந்து பாடுவதால் கடைநிலையாயிற்று.

மதுரை நக்கீரர் சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனின் அரண்மனை வாயிலில் நின்று தான் வந்த செய்தியை அறிவித்ததின் பயனாக, நீ என்னை அழைத்து, உன் மனைவியிடம் காட்டி என்னைப்போல இப்புலவரையும் பேணுக! என்று அமைந்த புறப்பாடலொன்றைப் (புறம்.395) பாடியுள்ளார். இப்பாடலில் புலவர் தம்மைக் கிணைப் பொருநனாக வைத்து, மன்னனின் வாயிலில் தன் வரவை அறிவித்த செய்தியை, 'தன்கடைத் தோன்றி யயன்னுற விசைத்தலிற்' (புறம்.395:24) என்ற பாடலடி சுட்டும். இந்தப் பாடலில் கடைநிலை மிகத் தெளிவாகச் சுட்டப்படுகிறது. இப்பாடலில் தொல்காப்பியர் சுட்டும் 'சேய்வரல் வருத்தம்' பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இங்கு புலவர் பெருஞ்சாத்தன் மனைவியையும் தொடர்பு படுத்திப்பாடுவது நக்கீரனின் புதுமை படைக்கும் திறத்தைக் காட்டுகிறது. இப்பாட்டிலும் பாடல் முடியும் பொழுது வாழ்த்தாக முடிகிறது.

முடிவுரை:

கடைநிலை என்ற கருத்துக்குப் பொருத்தமாகச் சில பாடல்களில் (புறம். 392, 393, 394, 395) வாயில் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது. எல்லாவற்றிலும் பாடுவோரின் வறுமைக் குறிப்போ அல்லது பிரிவில் பெற்ற குறிப்போ இடம் பெறுகிறது. கடைநிலைத் துறையில் அமைந்த பாடல்களில், பெரும்பாலானவற்றில் பரிசில் பெற்ற கலைஞன் பெறாதவனுக்கு, தான் பெற்ற பெருவளத்தை விளக்கிக் கூறுவதாகவே அமைந்துள்து. இஃது ஆற்றுப்படையின் தன்மையது. எனவே, இப்பாடலின் வளர்ச்சியாகவே பொருநராற்றுப்படை அமைந்துள்ளது. எனவே ஆற்றுப்படைத் துறையிலிருந்து வளர்ந்த ஒரு கிளையாகவே இப்பாடல்கள் உள. இவற்றை அடக்கும் துறைகள் வேறின்மையின் இத்துறையுள் அடக்கிக்கூறினர் என்ற ந.வி. செயராமனின் கருத்து இவண் நோக்கத்தக்கது.

இளம்பூரணர் உரையில் குறிப்பிடுவது போல எந்தப் பாட்டிலும் வாயிற்காவல் பற்றிய குறிப்பு இல்லை. கடைநிலை என்பதற்குப் பொருத்தமாக எல்லாப் பாடல்களிலும் கடைநிலை பற்றிய குறிப்பு இல்லை. இதனை நோக்கும்பொழுது தொல்காப்பியர் கூறிய கடைநிலைத் துறையின் கருத்து வளர்ச்சி பெற்ற நிலையையே புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன

கடைநிலைத்துறை நயமும் சுவையும் மிக்க ஒரு துறையாகும்; புரவலனின் அன்பையும், புலவனின் பெருமிதத்தையும் விளக்கும் துறையாகும். ஆதலின் அதனைப் பல்வேறு வகையில் புனைதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால் பன்னிரு பாட்டியல் கடைநிலையை ஒரு சிற்றிலக்கியமாகக் கொண்டு இலக்கணம் வகுத்து, ஓர் இலக்கிய வகையாக உருவாக்கிவிட்டது