பூர்வீக பூமியில் மண்வாசனை
இந்தியாவின் இதயத்துடிப்பு கிராமங்களில் தான் இருக்கிறது என்பார் காந்தியடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது அந்நாட்டின் கிராமப் பொருளாதாரமான விவசாயத் தொழிலே. எனவே தான் வள்ளுவரும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்று உழவுத் தொழிலின் மேன்மையை வலியுறுத்துகிறார். உலகம் என்னதான் கணினி மயமானாலும், உழவன் சேற்றில் கை வைத்தால்தான் மற்றவரெல்லாம் சோற்றில் கைவைக்க முடியும். இத்தகைய உழைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொங்கு வட்டார நாவல்களைப் படைப்பதில் சண்முக சுந்தரத்திற்கு அடுத்தபடியாக சூரியகாந்தனின் படைப்புகள் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துள்ளன. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உழைப்பாளிகளை மையமாகக் கொண்டு சூரியகாந்தன் படைத்துள்ள 'பூர்வீக பூமி' (1995) வட்டார நாவல் உலகில் ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
கதைக்களம்:

மனிதனுக்கும் மண்ணிற்கும் இடையே உள்ள தொடர்பு பூர்வஜென்மம் தொடர்பு. மனிதன் மண்ணிலே பிறந்து, மண்ணிலே வாழ்ந்து, மண்ணிலே வீழ்கின்றான். பூர்வீகப் பூமியின் கதைக்களமும் மண்ணிலேயே நடக்கிறது. மண் மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மண் மனித மனங்களைப் பக்குவப்படுத்தும் இயல்புடையது. சூரிய காந்தன் மண்ணையே கதைக்களமாகக் கொண்டு பூர்வீகப்பூமியைப் படைத்துக்காட்டுகிறார். ஒரு மனிதனின் வாழ்க்கையை அவன் வாழும் நிலமே தீர்மானிக்கிறது. எனவே தான் தொல்காப்பியரும் வாழ்க்கையைத் திணையாகப் பிரித்து அவற்றிற்கு முதற்பொருளையும் வகுத்துக் காட்டுகிறார். மண்ணையே மூலதனமாகக் கொண்டு வாழ்கின்ற மனிதனின் வாழ்க்கையை மற்றொரு பூதமான நீரும் தீர்மானிக்கிறது. இதுவே இக்கதையின் அடித்தளம்.

கதைச்சுருக்கம்:
கோவை மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பழனியப்பனை, அவனது அக்காள் மகன் நஞ்சப்பன் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள தரிசு நிலத்தை வாங்கி அதனைத் திருத்தி 'பன்னையம்' செய்து வாழ்வில் எளிதில் முன்னேற யோசனை கூறி கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் செல்கிறான். பழனியப்பன் தனது உழைப்பால் அதனை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றுகிறான். நஞ்சப்பன் பழனியப்பனிடம் இருந்து உழைப்பைச் சுரண்டிக் கொண்டு தனது மேலாண்மைத் திறனால் வாழ்க்கையைச் சுகமாக நடத்துகிறான். தனது பெயரில் புதிய தோட்டம் ஒன்றையும் மூலதனமாகக் கொண்டு வாழ்க்கை வாழ்கிறான். உழைப்பால் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்கு முன் அங்கு ஒரு சூறாவளி வருகிறது. இன்றைக்கும், என்றைக்கும் தமிழ்நாட்டின் தீராத முக்கியப் பிரச்சனையான காவிரி நதி நீரை கர்நாடக அரசு வழங்குவதால் அங்குள்ள விவசாயிகள், தமிழர் வாழும் பகுதிகளில் புகுந்து கலவரத்தில் ஈடுபடுகின்றனர். பழனியப்பனின் புண்ணிய பூமியும் இனக்கலவரத்தால் சூரையாடப்படுகிறது. உழைக்க வந்த குடும்பத்தை ஓட ஓட விரட்டுகிறது இனக்கலவரம். பிழைத்தால் மட்டுமே போதும் என்று தனது சொந்த மண்ணிற்கு வந்த அக்குடும்பம், கலவரம் முடிந்த பிறகு மீண்டும் கர்நாடகம் செல்கிறது. அவர்கள் வாழ்வு மீண்டும் துளிர் விடத் தொடங்குகிறது. இதுவே பூர்வீக பூமியின் கதைச்சுருக்கம்.
கதைப்பின்னல்:
வாழ்க்கைக்கே இலக்கியம் - இலக்கியம் வாழ்விலிருந்து முகிழ்கின்றது என்ற கூற்றிற்குச் சான்றாக பூர்வீக பூமி நாவல் அமைகிறது. வாழ்க்கையின் எதார்த்தத்தை (யூeழியிஷ்விது) மிக இயல்பாகக் கொண்டு செல்கிறார் நாவலாசிரியர் சூரியகாந்தன். இரு முரண்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்டு கதையை வளர்த்துச் செல்கிறார் நாவலாசிரியர். பழனியப்பன் கதைத் தலைவன். இவனைப் பற்றிச் சூரியகாந்தன், 'ஒருத்தர் கஷ்டப்படுவதைப் பார்த்தாலோ, கண்ணீர் விடுவதைப் பார்த்தாலோ மனம் தாங்காத குணம் கொண்டிருந்தான். எதற்கும் ஆண்டவன் ஒருத்தன் இருக்கிறான். அவன் போட்ட கணக்குப்படித்தான் எல்லாமே நடக்கும் எனும் உள்ளம் இவனுக்குள் இருந்தது' (பக்.17) என்று கதைத் தலைவனின் பண்பு நலனைச் சுட்டுகிறார். ஆனால் கதையின் எதிர்த் தலைவனை அறிமுகம் செய்யும் இடத்தில், 'இதுவரையிலும் பற்பல தொழில்களில் ஈடுபட்டு அவற்றிற்கெல்லாம் முழுமையாக மனம் ஒட்டுதல் இல்லாமல் நல்லதொரு இலக்கைத் தேடி அலைபவனாக நஞ்சப்பனின் கால ஓட்டம் இருந்தது. ஒருத்தரிடத்தில் சென்று மாதச்சம்பளம் என்கிற பெயரில் ஊழியம் பண்ணிக் கொண்டிருப்பதில் அவனுக்குத் துளியும் உடன்பாடு இல்லை. பலரையும் நிருவகித்து அவர்களுக்குத் தான் ஒரு தலைவனாக இருந்து சொத்து சுகத்தோடு மேலோங்கியவனாக முன்னேறிவிட வேண்டும் என்கிற துடிப்பு அவனுக்கு வாலிபப் பருவம் தொடங்கியதிலிருந்து கூடுதலாகிக் கொண்டு வந்தது. எதற்கும் சளைக்காத மனோபாவமும், இடத்திற்கும் தகுதிக்கும் ஏற்ற தோரணையோடு நடந்து கொள்ளும் சுபாவமும் அவனிடத்தில் இயல்பாகவே இருந்தன. முகத்தில் அந்தந்த குழலுக்கு ஏற்பக் கலகலப்பும் பொங்கி வரும். அதேபோல் அச்சப்படாதவர்களைக்கூட அதட்டலிலும், கோபமும் மிடுக்கும் கலந்த தொனியிலும் வழிக்குக் கொண்டு வந்து விடுவான்' என்று இரண்டு முரண்பட்ட கதைமாந்தர்களை வைத்து நாவலை நூலும், இழையுமாகப் பின்னிக் கதையை வளர்த்துச் செல்கிறார்.
நாவலின் உச்சம்:
நாவலின் உச்சமாக கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தீராத காவிரிப் பிரச்சனையை நம் கண் முன்னால் விவரிக்கிறார். ஐம்பூதங்கள் அனைவருக்கும் சொந்தமானது. அதனை ஒரு பிரிவினர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. இதனால் ஏற்படும் பிரச்சனையைக் கதையின் உச்சத்திற்குப் பயன்படுத்துகிறார் நாவலாசிரியர். இதுவரை யாரும் தொடாத பொருளை எடுத்து கதையின் உச்சத்திற்குப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. காலம் காலமாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு அதற்கு தீர்வு காண நம்மிடமே விட்டுவிடுவது ஆசிரியரின் புலமைத் திறனுக்குத்தக்க சான்றாகும். இப்பிரச்சனை குறித்து இன்றும் விவாதம் நடந்து வருகிறது. மனித மனங்கள், மொழி, இனம் இவற்றைக் கடந்து ஒன்றுபட்டால் ஒழிய இப்பிரச்சனைக்குத் தீர்வு கிட்டாது.
நாவலின் தொடக்கம்:

ஒன்றைத் தொடங்கும் போது அதனைத் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். நாவலுக்குத் தொடக்கம் மிக இன்றியமையாதது. பூர்வீக பூமி நாவலின் தொடக்கம், 'மேற்கு வானம் சிவந்து கனிந்து கொண்டிருந்தது வேலை முடித்து பழனியப்பன் கம்பெனியை விட்டுக் கிளப்பும்போது சாயங்காலமாகிவிட்டது' என்று மாலை நேரத்தில் நாவலின் தொடக்கத்தை ஆசிரியர் அமைத்திருப்பது கதையை முன்கூட்டியே ஒருவாறு ஊகிக்கக் காரணமாக அமைந்து விடுகிறது. மாலை நேரம் மயக்கத்தைத் தருவது. அந்த வேலையில் தான் கதைத் தலைவனை அறிமுகம் செய்கிறார். இதனால் அவன் வாழ்வில் ஓர் இனம் புரியாத சோகம் ஒட்டிக் கொள்வதை நாம் முன் கூட்டியே உணர முடிகிறது.

குறிப்புப் பொருள்:

படைப்பாளி தான் சொல்ல நினைத்த பொருளை அப்படியே சொல்லிவிட்டால் சுவையாக இருக்காது. வாசகன் உய்த்து உணரும் வகையிலும் படைப்பைப் படைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் படைப்பு முழுமையான வெற்றியைப் பெற இயலும். பூர்வீக பூமியில் ஆங்காங்கே இயற்கைக் காட்சிகள் பற்றிய வருணனைகள் இடம் பெறுகின்றன. தொல்காப்பியரின் 'இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்' என்ற மரபிலேயே இயற்கைக் காட்சிகள் நாவலில் இடம் பெறுகின்றன. எனினும் இயற்கைக் காட்சிகள் ஏதேனும் ஒரு கருத்தை (அ) உட்பொருளை விளக்குவனவாக உள்ளன. இதனையே தொல்காப்பியர் 'இறைச்சிப் பொருள்' என்பர். நாவலின் தொடக்கமே இந்த உண்மையைச் சொல்கிறது. இடை இடையே இயற்கையைச் சொல்லும் (பக்.29, 62, 81) நாவலாசிரியர் அதன்மூலம் ஒரு குறிப்புப் பொருளை உணர்த்துகிறார்.

நாவலின் இறுதியிலும் இயற்கை இடம் பெறுகிறது. 'கிழக்கு வானம் வெளுத்துக் கொஞ்சங் கொஞ்சமாகச் சிவக்கத் தொடங்கியது' என்று குறிப்பிடுவதால் இழந்த வாழ்க்கை மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கிறது என்ற உட்பொருளைச் சூரியனின் உதயம் நம்மை உய்த்துணர வைக்கிறது. பழனியப்பன் பொட்டல் காடாய் இருந்த கர்நாடக பூமியைப் பொன்னாக மாற்றும்போது அனுமன் சிலை ஒன்றைக் கண்டெடுக்கிறார். அனுமன் பலசாலி (பக்.46) என்ற குறிப்பு பொருளிலேயே இதனைக் கையாண்டுள்ளார்.

வாழ்வியல் உண்மைகள்:

படைப்பின் குறிக்கோள்களில் குறிப்பிடத்தக்கது வாழ்வியலின் நிதர்சனங்களைப் பிரதிபலிப்பதாகும். சூரியகாந்தனின் பூர்வீகப் பூமியிலும் வாழ்வியல் உண்மைகள் வலியுறுத்தப்பெறுகின்றன. வலிமையுள்ள உயிர்களே இந்த பூமியில் வாழும் தகுதியுடையவை. ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெற முடியும் (பக்.102, 103), பொறுத்தார் பூமியாள்வார், மனிதநேயம் போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை உணர்த்துவதாகப் பூர்வீக பூமி என்ற வட்டார நாவல் அமைந்துள்ளது.

வட்டார நாவலின் இயல்புகள்:

கோவை மாவட்டத்திற்கே உரிய கொங்கு தமிழில் நாவலைப் படைத்திருப்பது சூரியகாந்தனுக்கு கைவந்த கலையாகும். கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள் ஆகியவற்றை மிகவும் இயல்பாகக் கையாண்டுள்ளார். கோவை மாவட்டக் கொங்குத் தமிழும், கர்நாடக மாநிலத்துக் கன்னடமும் ஆங்காங்கே கொஞ்சி விளையாடுகிறது. கொங்குத் தமிழுக்கே உரிய அப்பிச்சி, அம்மிச்சி போன்ற வழக்காறுகளும் இல்லி, நோடு போன்ற கன்னட வழக்காறுகளும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. நாட்டுப்புறக் கூறுகளான கும்மிப் பாடலை நாவலின் நடுவே (பக்.75, 76) அப்படியே எடுத்தாளுகிறார்.

சூரியகாந்தன் கோவை மாவட்டத்தில் வழக்கில் உள்ள சில நாட்டுப்புற வழக்காறுகளையும் நாவலின் நடுவே சுட்டிச் செல்கிறார். கிராமங்களில் பிள்ளைகளுக்குப் பெயரிடும் போது தெய்வத்தின் பெயரை வைப்பது வழக்கம். சூரியகாந்தன் பூர்வீக பூமியில் 'தலைமுறை தலைமுறையாக அந்த தெய்வத்தின் (பொன்னாச்சியம்மன்) பெயரை வைப்பது முறையாகத் தொடர்ந்து வந்தது. அதன் இப்போதைய கிளையாகத் தங்கம்மா ஆகிய பெயரைத் தாங்கியிருந்தாள்' (பக்.42) என்று குறிப்பிடுகிறார். நாட்டுப்புற நம்பிக்கைகளில் மிக முக்கியமானது வேண்டுதலாகும். 'நஞ்சப்பனுக்கு குழந்தை பிறந்தால் ஒன்னல்லி கிருஷ்ணன் கோயிலின் முன் மண்டபத்தைத் தன் செலவிலேயே கட்டி முடித்து மின் விளக்குகள் அமைத்துத் தருவதாக வேண்டியிருந்தான். ஒரு திருவிழாவின் போது அபிஷேகமும், அன்னதானமும் செய்து பார்த்தான். ஏனோ தந்தை ஆகும் பாக்கியம் மட்டும் அவனுக்கு கிட்டவில்லை. பெரிய பூசாரிகள் மூலமாய் மந்திரச் சடங்குகளும் செய்து பார்த்தான், பயனில்லை. அருக்காணியன் இடது கையில் ஒரு வெள்ளித் தாயத்தும் நஞ்சப்பனின் இடுப்பு அண்ணாக்கயிற்றில் ஒரு தங்கத்தாயத்தும் தொங்குவது தான் அவர்கள் கண்ட பலனாய் இருந்தது' என்ற நாட்டுப்புற நம்பிக்கைகளைச் சுட்டுகிறார் நாவலாசிரியர். கொங்கு நாட்டில் தெய்வங்களைத் திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் வணங்கும் வட்டார மரபை (பக்.58)யும் எடுத்துக் காட்டுகிறார். குறிசொல்லும் மரபை,

அட நா... செல்லாண்டி மாரியாத்தா
படியளக்கப் பாடுறேண்டா...
படியளக்கப் பாடுறேண்டா...
படியயடுத்து ஆடுறேண்டா...
படியயடுத்து ஆடுறேண்டா...
பஞ்சந்தான் பொழைக்க வந்தே - அட
பஞ்சந்தான் பொழைக்க வந்தே...

என்று குறிசொல்லும் வழக்கை அப்படியே எடுத்தாளுகிறார். தலைவலி வந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்லும் பழக்கம் உள்ளது. அங்கு காத்திருத்தலே ஒரு நோயாக மாறிவிடும் சூழலும் உள்ளது. நாட்டுப்புறத்தில் வாழும் மக்கள், தங்களுக்கு உண்டாகும் நோய்களை அங்கு கிடைக்கும் இலை, தழைகளைக் கொண்டே மருத்துவம் செய்து கொள்ளுகின்றனர். நாவலில் ஒற்றைத் தலைவலி (பக். 90), காலில் உண்டான காயம், வயிற்று வலி (பக். 104) ஆகியவற்றிற்கு நாட்டு மருத்துவ முறைகளைத் தருகிறார். மாடானாலும், மனுசனானாலும் எது ஒன்னுக்கும் நம்பளெச் சுத்தி சுத்தியே மருந்துக இருக்குது மாப்பிள்ளை...! நாமதா அதுகளெ கண்டுக்காம கண்ண மூடிக்கிட்டு அதும்மேலயே நடந்து போயிக்கிட்டுருக்கோம் (பக். 104) என்று சித்த மருத்துவத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.

படைப்பாளியின் தாக்கம்:

ஒரு படைப்பாளியின் சொந்த அனுபவம் இடம் பெறுவதால் மேலும் அந்தப் படைப்பு சிறப்படைகிறது. மு.வ. தன்னுடைய நாவல்களில், வீட்டைவிட்டு ஓடிப்போகும் ஒரு கதாபாத்திரத்தைக் காட்டியிருப்பார். தி. ஜானகிராமனும் தனது நாவலில் ஓர் இசைக்கலைஞரின் பாத்திரத்தை வைத்திருப்பார். சூரியகாந்தன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் தனது படைப்புகளில் அவரின் சொந்த அனுபவங்களைப் பாத்திரத்தின் மீது ஏற்றிக்கூறுவது கதைக்கு மெருகூட்டுகிறது. சூரியகாந்தன் ஆடுவளர்ப்பு பற்றி அதிகம் அறிந்திருப்பதால் அது பற்றிய செய்தியைத் தமது படைப்புகளில் அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆட்டிற்கு ஏற்படும் நோய்கள், அதற்கான மருத்துவம், கிடை போடுதல் போன்ற செய்திகளை அதிகமாகத் தன் மற்றொரு படைப்பான கிழக்குவானத்தில் (2000) குறிப்பிடுகிறார்.

எது பூர்வீக பூமி?

பூர்வீக பூமி பற்றிய சர்ச்சை இன்றும் கேள்விக்குறியாக உள்ள சூழலில், அழகான கதைப் போக்குடைய இந்த நாவலுக்கு ஆசிரியர் 'பூர்வீக பூமி' என்று தலைப்பிட்டிருக்கிறார். இந்தத் தலைப்பை ஏன் இந்த நாவலுக்கு வைத்தார் என்ற காரணத்தை நாவலின் இறுதியில் நாவலின் தலைப்பைப் பற்றி ஆராய்கிறார். 'எல்லா மண்ணிலேயும் மனிதர்கள் தான் வாழ்கிறார்கள். இவர்களில் மனித நேயத்தோடு வாழ்பவர்கள் இருக்கிறார்கள். தேசப் பற்றோடு வாழ்பவர்கள் இருக்கிறார்கள்; இவைகள் எதுவுமே இல்லாதவர்களும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வருந்துவார்கள். காலம் அவர்களைத் திருந்த வைக்கும் என்கிற பண்பாட்டோடு நம்பிக்கை கொண்டு இவள் போய் இருக்கிறாள்' (பக். 143) என்றும் எங்கோ பிறந்து எங்கோ வாழ்ந்து கடைசியில் இதே மண்ணில் வந்து உயிரை விட்டுத் தங்களின் சந்ததி பிழைக்கும் இந்த நிலத்திற்கே உரமானது போல அவர்கள் இருவரும் சங்கமித்து விட்டிருந்தனர். தனக்கென்று இருந்த பெற்றோர்கள் என்கிற ஒரே ஆதரவும் 'கையில் அள்ளி வைத்துக்கொண்டு கண்ணீர் விடும் பிடிமண்ணாகப் போய்விட்ட சங்கதி' பொன்... ஒரு குடும்பம் பிழைப்பிற்காகத் தனது சொந்த பூமியை விட்டுப் புதிய பூமி ஒன்றில் குடியமர்கிறது. இப்போது எது அக்குடும்பத்திற்குப் பூர்வீகம் என்பர்.

ஒரு தலைமுறையின் காலம் 33 ஆண்டுகள். எனவே தான் மூன்று தலைமுறை வாழ்ந்தவனும் இல்லை. மூன்று தலைமுறை கெட்டவனும் இல்லை என்னும் வழக்கு இன்றும் உள்ளது. இவ்வாறு மக்களுக்குப் பூர்வீக பூமி எது என்று சூரியகாந்தன் அலசி ஆராய்கிறார். 'ஆடும் ஒரு உசுருதா...! மனுசரும் ஒரு உசுருதா...! இந்த ரெண்டு உசுருகளையும் படைச்சவன் ஆண்டவன். ஆனா மனுசனோ தன்னோட நாக்கு ருசிக்கும் ஒடம்பு நலத்துக்கும் வேண்டி அந்த ஆட்டை வெட்டிக் கறியாக்கிச் சோறாக்கித் தின்கிறான். ஒரு செடி இன்னொரு செடிக்கு உரமாகுது; ஒரு உசுரு இன்னொரு உசுருக்கு உணவாகுது!...ம்...இது இன்னைக்கு நேத்தா நடக்குது, எப்ப இருந்து பாத்துட்டுத்தானெ இருக்குறோம்.' என்று மனித நேயத்தை வலியுறுத்தும் சூரியகாந்தன், எவன் ஒருவன் மனித நேயத்தோடு வாழ்கிறானோ அதுவே அவனது பூர்வீக பூமி என்றும் வழிமுறையும், வாழ்க்கைச் சூழலும் இடம் பெயரப் பூர்வீக பூமியும் மாறும் இயல்புடையது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறார்.