பெருங்கதையில் பாலைப்புனைவு

தமிழ் இலக்கியங்களில் கொங்குநாட்டுப் பெருங்கதை குறிப்பிடத்தக்கது. பெருங்காப்பியத்தின் இயல்புகளை ஒருங்கே பெற்றுத்திகழும் பெருங்கதையில் நானிலவருணனையில் பாலை பெறும் இடத்தை இக்கட்டுரை மதிப்பிடுகிறது.

காப்பியங்களில் வருணனை:
பெருங்காப்பியத்தின் பண்புகளில் சிறப்பிடம் பெறுவது வருணனைகளே. எப்பொருளின் இனிமையும், சுவையும், பொருத்தமான பின்னணியில் ஏற்றம் பெறுவதும், பெருமையடைவதும் உண்டு. தமிழ் இலக்கியங்களில் இயற்கை வருணனைகள் தனித்துப் புனையப்படுவதில்லை. இயற்கையைக் கவிஞன் தான் கூறவந்த பொருளோடு இணைத்துப் புனைவதால் அவ்விலக்கியம் சிறப்புறுகிறது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையே தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன. நெடிய கதைப் போக்குடைய காப்பியங்களில் இயற்கை பற்றிய வருணனை இடம் பெறுகிறது. மலை, கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர்த்தோற்றம் பற்றிய வருணனைகள் இடம்பெற வேண்டும் என்பது காப்பியமரபு. ஆனால் இவை அனைத்தும் காப்பியங்களில் இடம்பெற வேண்டும் என்பதில்லை. இவற்றுள் குறைந்தும் இடம் பெறலாம். தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் மலை, கடல், நகர், நாடு பற்றிய வருணனைகளைத் தனியாகச் சிறப்பித்துக் காட்டவில்லை. ஆனால் பிற்காலத்தில் தோன்றிய காப்பியங்கள் நாடு, மலை, நகர், கடல், பற்றிய வருணனைகளைத் தனியாகப் புனைகின்றன. கம்பராமாயணத்தில் நாட்டுப்படலம், நகரப்படலம் என்ற பகுதியும் திருத்தொண்டர் புராணத்தில் திருமலைச் சருக்கம் என்ற பகுதியும் இதற்குச் சான்றாகும்.

முற்காலத்தில் தோன்றிய காப்பியங்களில் இயற்கை பற்றிய வருணனைகள் கதையோட்டத்திற்கு ஏற்ப ஆங்காங்கே இயைந்து சுட்டப் பெறுவதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் என்றே இலக்கணம் செய்கிறார். பெருங்கதையில் இயற்கை நிகழ்ச்சிகளாக எதையும் குறிப்பிட முடியவில்லை.

நானில வருணனை:

தமிழ்க் காப்பியங்களில் நிலங்கள் பற்றிய வருணனை பின்புலமாகப் புனையப்படுகிறது. கதைத் தலைவர் முதலானோர் மேற்கொள்ளும் பெரும்பயணத்தின்போது நிலங்கள் பற்றிய வருணனை இடம் பெறுகிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் புகார் நகரத்திலிருந்து மதுரைக்குச் செல்லும்போது நில வருணனை அமைகிறது. இதனைப் பற்றிப் பின்தோன்றிய வடநாட்டில் நடந்த வரலாற்றினைப் பொருளாகக் கொண்ட காப்பியங்களிலும் நிலங்கள் பற்றிய வருணனையைத் தமிழ் மரபோடு புனைந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் நானிலம் பற்றிய கொள்கையையே அகத்திணையியலில் முன்னிறுத்துகிறார் (தொல்.அக.சூ.2). ஆனால், சங்க அகப்பாடல்களில் பாலைத்திணை பற்றிய பாடல்களே மிகுதியாக இடம் பெறுகின்றன. சிலப்பதிகாரம் பாலையை,

'முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருருத்துப்
பாலை யயன்பதோர் படிவங் கொள்ளும்'
(சிலம்பு.11 : 64 - 66)

என்று விளக்குகிறது. வடநாட்டுப் பாலை போன்றதன்று தமிழ்ப்பாலை. இவ்வாறு குறிஞ்சியும், முல்லையும் தன்னியல்பிலிருந்து திரிந்து, பாலை என்னும் இயல்பை அடைவதாகும். குறிஞ்சி நிலம் மட்டும் தனியே பாலையாகத் திரிந்த செய்தியை அகநானூறும் (113), முல்லை நிலம் தனியே பாலையாகத் திரிந்த செய்தியைக் கலித்தொகையும் (2) சுட்டும். எனவே, பாலை என்பது குறிஞ்சி அல்லது முல்லை நிலம் வானம் வறப்பதால் ஏற்படுவதாகும். சிலப்பதிகாரத்தில் ஐந்நிலப் புனைவு முழுமையாகச் சுட்டப்பெறுகிறது. ஆனால் சீவக சிந்தாமணியில் பாலை நிலம் பற்றிய புனைவு மிகுதியாக இல்லை (1186 - 89, 2106). பெருங்கதையில் பாலை நிலம் பற்றிய புனைவு இடம் பெற்ற போதிலும், நெய்தல் நிலம் பற்றிய புனைவு இடம் பெறவில்லை. சிலப்பதிகாரம் முழுமையும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. எனவே, இளங்கோவடிகள் ஐந்நில வருணனைகளைத் தமிழ் இலக்கிய மரபு பிறழாமல் வடிக்கிறார். ஆனால் பிற பெருங்காப்பியங்களான சீவக சிந்தாமணி, பெருங்கதை போன்றவை வடநாட்டு நிகழ்ச்சிகளைப் புனைகின்றன. எனவே, காப்பிய ஆசிரியர்கள் தங்கள் கதையோட்டத்திற்கு ஏற்ப இயற்கை வருணனையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெருங்கதையில் வருணனை:
கொங்குவேளிர் இயற்கைப் புனைவுகளை மாக்கதை முழுவதிலும் புனைகிறார். ஆனால் நானில வருணனையை உஞ்சைக் காண்டத்தின் பிற்பகுதியில் படைத்துக் காட்டுகிறார். உதயண மன்னன் பிரச்சோதனன் மகளான வாசவதத்தையை உஞ்சை மாநகரினின்று கைப்பற்றிக் கொண்டு சயந்தி நகர் நோக்கிச் செல்கின்றான். இவ்வாறு உதயணன் வாசவதத்தையோடு உஞ்சை நகரத்திலிருந்து ஐந்நூறு காவதம் கடந்து செல்லும் போது நானிலங்களான மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை பற்றிய புனைவுகளை நயமாக எடுத்துரைக்கிறார். கொங்குவேள் தம் மாக்கதையில் நாடு, நகர் வளத்தைக் காப்பியத்தின் தொடக்கத்தில் பாடவில்லை. எனவே உதயணன் மேற்கொள்ளும் பயணத்தின்போது எதிர்ப்படும் நிலங்கள் பற்றிய புனைவுகளைப் புனைகிறார். காப்பிய இலக்கண மரபைப் பின்பற்றிக் காப்பியம் செய்ய இப்பயணத்தையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
இயற்கை ஓவியம்:

உதயணன் தந்தையுடன் உஞ்சை மாநகரை விட்டு, பிடியின் மீது அமர்ந்து பயணம் செய்கிறான். உடன் காஞ்சனமாலையும் செல்கிறாள். உஞ்சை மாநகரிலிருந்து இரண்டு காவதந் தொலைவு சென்றதும் மருதநிலம் எதிர்ப்படுகிறது. வளம் மிக்க வயல்களில் நீர்ப்பூக்கள் பூத்துக் கிடந்தன. பாத்திகளில் கரும்புகள் உயர்ந்து வளர்ந்திருந்தன. உழவர் ஒலியும், களத்தில் வேலை செய்வோர் ஒலியும் களையயடுக்கும் ஒலியும், தண்ணுமை முழக்கமும், தடாரி முழக்கமும், மடைகளைத் திறக்கும் மள்ளர் ஆர்ப்பும் இயைந்து பெருமுழக்கமாய் ஒலிந்தன. இவ்வாறு மருத நிலத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கற்பனையுடன் பாடுகிறார் கொங்குவேளிர். பன்னிரெண்டு காவதம் தொலைவுடைய மருத நிலத்தைக் கடந்ததும் முல்லை நிலம் தென்படுகிறது. முல்லை நில வருணனையாகக் கார்காலம் புனையப்படுகிறது. முல்லை நிலத்தைத் தலைவியாகவும், கார் காலத்தைத் தலைவனாகவும் உருவகித்துக் கொங்குவேளிர் வருணிக்கிறார். முல்லைத் தலைவியைக் கார்காலத் தலைவன் பிரிந்து நிற்கிறான். தலைவன் திரைகடல் ஓடித் திரவியம் தேடி, மேகக் கடலில் படிந்து, நீரைப் பருகி வானத்தே உயர்ந்து எழுந்து மழையாய்ப் பொழிகிறான். பொருளீட்டச் சென்ற தலைவனைத் தழுவிய தலைவியின் இடை மகிழ்ச்சியால் பருத்தது போல முல்லைக் கொடிகள் தழைத்து வளர்ந்தன என்று அழகிய சொல்லோவியமாகக் கார்காலப் புனைவைத் தீட்டுகிறார். இதனை,

'பொருள் வயிற் பொங்கல வெறுக்கையோடு
இருள்வயின் வந்த இன்னுயிர்க் காதலன்
மார்பகம் மணந்த நேரிழை மடந்தையர்
மருங்குல் போலப் பெருங்கவின் எய்திய'
(பெருங்கதை.1:49 : 92 - 95)

என்ற பகுதி உணர்த்தும் பெருங்கதையில் முல்லை நிலம் தொடர்ந்து குறிஞ்சி நிலப் புனைவு சுட்டப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலமான மலையும், மலைசார்ந்த பகுதிகளும் வருணனையில் இடம் பெறுகின்றன. குறிஞ்சித் திணைக்குரிய தினைப்புனக் காவல், கருப்பொருட்களான, யானை, பலா, குரங்கு ஆகியவற்றின் புனைவைச் சுட்டுகிறார்.

பாலையின் இயல்பு:

கொங்குவேளிர் தம்மாக்கதையில் நானிலம் பற்றிய வருணனையில் பாலை நிலத்திற்கும் பிற நிலங்களை ஒத்த முதன்மையைக் கொடுக்கிறார். சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் மாங்காட்டு மறையோன் வாயிலாகப் பாலை நிலத்தின் தன்மையை உணர்த்துவார் இளங்கோவடிகள். கொங்குவேளிரும் பெருங்கதையில் பாலைத்திணையின் புனைவை மிக அழகாக வடித்துக் காட்டுகிறார்.

பாலை நிலத்தின் தன்மையை நச்சினார்க்கினியர், ‘காலையும், மாலையும், நண்பகலன்ன கடுமை கூர்ச் சோலை தேம்க கூவல் மாறி, நீரும் நிழலும், இன்றி, நிலம் பயன் துறந்து புள்ளும், மாவும், புலம்பற்று இன்பமின்றித் துன்பம் பெறுவது’ என்று விளக்குவார். பாலை நிலத்தில் உள்ள கற்கள் வாள் அரத்தின் நுனியைப் போன்று கூர்மையாக இருந்தன. அங்கு வாழ்ந்த பாலைநில மக்கள், கொற்றவைக்குச் சிவந்த தசையையும், குருதியையும், பசிய நிணமுடைய கொழுவிய குடரையும் பலியாகக் கொடுத்தனர். பாலை நிலத்தின் வழியே செல்லும் வணிகர் கூட்டத்தை வழிமறித்து, அவர்களிடமிருந்து ஆக்களைக் கவர்ந்து துளையுடைய கற்றூண் கொட்டில்களில் அடைத்தனர். ஆறலைத்தலின் போது பிணங்களைக் குழிகளில் போட்டு நிரப்பினர். தலைகளை மரப் பொந்துகளில் திணித்து மறைத்து வைத்தனர். வெய்யிலின் கொடுமையால் ஓமை, உழிஞ்சல், உகாய், உலவல், ககடு, தான்றி, தொடர், நாகம், அரசு, ஆரம், ஆத்தி, இரவு, இரண்டு, குரா, கோங்கம், கள்ளி, கடம்பு, முள்ளி, முள்ளெருக்கு, கணக்கு, இலவம், நெல்லி, வாருக போன்ற மரங்கள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. சிவந்த கால்களையும் வெள்ளிய சிறகுகளையும், உடைய சேவற்புறா பருக்கைக் கற்களை உண்டு வயிற்றை நிறைத்துக் கொண்டு, தன் பெடையோடு கூடி விளையாட எண்ணி, முட்கள் நிறைந்த கள்ளி மரத்தின் மீது ஏறிக் கூவி அழைத்தது. பெண் பன்றிகளின் முலைகள் வற்றிப்போய் இருந்தன. அவை உணவு கிடைக்காது வற்றிய மரலை உண்டுவிட்டு, நீரின் வேட்கையால் மெலிந்து காணப்பட்டன. மூங்கிலிலிருந்து வெடித்து உதிர்ந்த முத்துக்களை மழைத்துளிகள் என்று நினைத்து காட்டுச் சேவர்கள் அவற்றைக் கொத்திக் கொத்தித் தளர்ந்து நின்றன. இவ்வாறு பாலை பற்றிய வருணனை, கொற்றவை குறித்த வருணனை பிற்காலத்தில் ஓர் இலக்கிய வகையாகத் தோன்றக் காரணமாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. பரணி இலக்கியத்தில் இடம் பெறும் காடு பாடியது, தேவி பாடியது போன்ற பகுதிகளைப் பெருங்கதையைத் தழுவிக் கலிங்கத்துப் பரணியில் ஆசிரியர் கையாள்கிறார்.

தமிழ் மரபு:

பெருங்கதையில் கொங்குவேளிர் நானில வருணனைகளைப் புனையும்போது பாலைத் திணையை மட்டுமே முழுமையாகத் தமிழ் மரபைப் பின்பற்றிப் படைத்துக் காட்டுகிறார். மற்ற நிலப் புனைவுகளில் அந்நிலத்திற்குரிய கருப்பொருள் வருணனைகள் இடம் பெற்ற போதிலும், உரிப்பொருளால் அது பொருந்தவில்லை. ஏனெனில், மற்ற நிலப் புனைவுகள் கதையில் பொருளுக்கு ஏற்றவாறு இல்லை. பெருங்கதை ஆசிரியர் தமிழ் இலக்கண மரபை நன்கு அறிந்தவர். அவர் உடன்போக்கு என்பது பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் என்பதை உணர்ந்தவர். அதனால் அவர் உடன்போக்கு நிகழ்ச்சிகள் பாலை நிலத்தில் நடப்பதாகவே காட்டுகிறார். தொல்காப்பிய மரபில் தலைவனும், தலைவியும் மட்டுமே உடன்போக்காக வருவர். இது காப்பியக் கதையாதலின் தோழியாகிய காஞ்சனமாலையும் உடன் வருவதாகப் புதுமை செய்கிறார். பத்திராபதி யானையில் வரும் இவர்கள் யானைக்குக் காலமேகம் என்ற நோய் வருவதால் அந்த யானை இறந்துபோக அவர்கள் அங்கே ஒரு மறைவிடத்திலே ஒளிந்து கொள்கின்றனர். ஆறலைக் கள்வரால் அவர்கள் துன்புறுகின்றனர். சவார், புளிஞர் என்னும் ஆறலைக்கள்வரின் தொல்லையால் இவர்கள் படும் அல்லல் அளப்பெரிது. வயந்தகன், இடவகன் துணையால் அவர்களை வென்று சயந்தி நகரத்தைச் சென்றடைகின்றனர். வாசவதத்தை திறத்தாரின் தொல்லையிலிருந்து தப்பும் உதயணனும் வாசவதத்தையும் பாலை வழியில் பேரவலம் அடைகின்றனர். கொங்குவேளிர் காப்பியக் கதையைப் பழைய மரபு தழுவி அமைப்பதற்கும், பத்திராபதி என்னும் யானைக்குச் சிறப்புக் கொடுத்தற்கும் பாலை நிலத்தைப் புனைகிறார். மருதம், குறிஞ்சி நிலங்களை யானை கடந்தாலும் அது சாவதும், சமாதியாவதும் பாலைத் திணையில் தான். இவ்வாறு பாலை நிலப்புனைவு தொன்மை மரபைத் தழுவிக் காப்பியம் அமைவதை வெளிப்படுத்துகிறது.

இயற்கைப் புனைவைப் புனையும்போது மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை என்ற முறைவைப்பில் பாடுகிறார். இறுதியில் பாலைத் திணையைப் பாடுவதற்குக் காரணம் என்ன? மற்ற நிலங்கள் பற்றிய வருணனை நூலில் இடம் பெற்றாலும், பாலைத் திணை பற்றிய வருணனையே படிப்போர் உள்ளத்தில் ஓவியமாகப் பதிகிறது. ஏனெனில் தமிழ் அக இலக்கண மரபைப் பின்பற்றிப் பாலைத் திணையில் முதல், கரு, உரிப்பொருள்கள் அனைத்தும் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளது.மற்ற நிலப் புனைவில் முதற்பொருளான சிறு பொழுது முறையாகப் புனையப்படவில்லை. கருப்பொருள்களில் தெய்வம் சுட்டப்பெறவில்லை. காப்பியங்களில் நிலம் பற்றிய புனைவு இடம் பெறவேண்டும் என்ற நோக்கில் மற்ற நிலப் புனைவை அமைத்திருக்கிறார் கொங்குவேளிர் மற்ற நிலப் புனைவுகளை முதலில் பாடிவிட்டு இறுதியாகப் பாலையைப் பாடுவதால் கொண்டுதலைப் பிரிதல் எனும் தமிழ் அக இலக்கண மரபின் அடிப்படையில் பாலை நிலப்புனைவு மிகவும் பொருத்தமான புனைவாக உள்ளது. பெருங்கதையில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. வடநாட்டில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அமையும் பெருங்கதையில் நெய்தல் நிலத்தின் முதற்பொருளான கடலும், கடல் சார்ந்த பகுதிகளும் இல்லை. எனவே அவற்றைப் பாடக் கொங்குவேளிருக்கு வாய்ப்பில்லை. இதற்காகக் கொங்குவேளிர் ஒரு புதுமை செய்கிறார். கடல் பகுதியில் உதயணன் பயணம் செய்ய இயலாது. எனவே கதையின் ஓட்டத்திற்கு ஆறு பற்றிய வருணனைகளை வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார். ‘நருமதை கடந்தது’ எனும் பகுதியில் நருமதை ஆற்றின் இயல்பைப் புனைந்து நெய்தல் நிலப்புனைவு இல்லாத குறையைப் போக்குகிறார். ‘நருமதை கடந்தது’ எனும் பகுதியை மருத நிலம் கடந்தது. முல்லை நிலம் கடந்தது, குறிஞ்சி நிலம் கடந்தது என்ற பகுதிகளுக்குப் பிறகு அமைப்பதால் நெய்தல் நிலப்புனைவு இல்லாத குறையைப் போக்குகிறார்.

உதயண மன்னன் கடந்து செல்லும் பெருவழியின் பெரும்பகுதி பாலை நிலத்திலேயே அமைகிறது. உதயணன் உஞ்சை மாநகரை விட்டு ஐந்நூறு காவதம் தொலைவு கடந்து வந்ததைக் குறிப்பிடும் கொங்குவேளிர், பாலை நிலத்தின் பரப்பாக 336 காவதத்தைக் காட்டுகிறார். இதிலிருந்து பாலை நிலத்தை அதிகமாகக் காட்டுகிறார் என்பது புலனாகிறது. கொங்குவேளிர் தம் பெருங்கதையில் நானிலம் பற்றிய புனைவில் பாலைத் திணைக்கே முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ் அக இலக்கண மரபுடன் படைத்துக் காட்டுவது அவரது புலமைத் திறனை வெளிக்காட்டுகிறது.