பெண்களின் முன்னேற்றத்திற்காக முதன் முதலில் குரல் எழுப்பியவர் மாயூரம் நீதிபதி வேதநாயகம்
பிள்ளை ஆவார். இவர் தாம் இயற்றிய பெரும்பாலான நூல்களில் பெண்களின் நலனுக்காகக் குரல்
கொடுக்கிறார். மேலும் இரண்டு நாவல்களிலும் பெண்களை மையப்படுத்தியே எழுதியுள்ளார். இரு
நாவல்களிலுமே கதைத் தலைவர்களைவிட, கதைத் தலைவியர்களைச் சிறந்தவர்களாகச் சித்தரித்த
விதம் பெண்களிடத்தே வேதநாயகம் கொண்ட உயர்வையும் நம்பிக்கையையும் புலப்படுத்துகிறது.
இராகத்துடன் பாடக்கூடிய அமைப்பினைக் கொண்ட சர்வ சமயக் கீர்த்தனைகளில், ஒரு பெண் எப்படி
இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். பெண்கள் தங்களைப் படிக்க வைக்கும்படித்
தந்தையை வேண்டுவதாக உள்ள பகுதி பெண்கல்வி குறித்த சிந்தனையைப் பெண்களிடத்தே தூண்டுகிறது.
ஒரு பெண்ணுக்கு இயற்கையான அழகே போதுமானது. பெண்கள் செயற்கையாக அலங்காரம் செய்ய வேண்டியதில்லை
என்பது வேதநாயகரின் கருத்து. அலங்காரம் கணவனை ஈர்ப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என
நீதிநூலில் வலியுறுத்துகிறார்.
‘கற்பு நிலை’ என்பது ஆண், பெண்
இருபாலருக்கும் பொதுவாயினும் பெண்ணடிமைச் சமுதாயத்தில் அது பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை’ எனத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. எனவே
தான் வேதநாயகர் ‘பெண்கள் கண்ணாடியைப் போன்றவர்கள்; ஆண்கள் கல்லைப் போன்றவர்கள்; கண்ணாடி
கல்லுடன் மோதினாலும், கல் கண்ணாடியுடன் மோதினாலும் ஆபத்து கண்ணாடிக்குத்தான்’ என்று
கூறுகிறார். ‘கணவன் உண்டு உறங்கிய பின்பு தான் உண்டு உறங்குதலும், கணவன் எழும்முன்
எழுந்து வேண்டுவன செய்தலும் கடனாகக் கொண்டவள் கற்புடையாள்’ என்று கற்புடைமைக்கு இலக்கணம்
வகுக்கிறார்.
ஒரு பெண் தன் கற்பை இழப்பதினால் ஏற்படும் தீமைகளை நீதிநூல் வாயிலாக விளக்குகிறார்.
கற்பிலிருந்து இழிந்தவர் யாராயினும் அவர்களைப் பரத்தையராகவே கருதுகிறார். பிற ஆடவர்களுடன்
சேர்பவள், பல பேர்களுக்குத் தீமை செய்கிறாள். அவள் தன்னையும் கெடுத்து, பிற ஆடவரையும்
கெடுக்கிறாள். சொந்தக் கணவனுக்குத் துரோகம் செய்பவளாகவும், பிற ஆடவனுடைய மனைவிக்கு
வஞ்சகியாகவும் மாறுகிறாள். இதன் விளைவாகவே உலகை உலுக்கும் பால்வினை நோய்கள் (H.IV)
போன்றவைகள் பரவுகின்றன.
கற்பு நிலை கெட்ட ஒரு பெண் தன்னுடைய கணவன், உற்றார், பெற்றோர் முதலியோர்க்கு மாறாத
பழியையும், இழிவையும் உண்டாக்குகிறாள். பெண்செய்த குற்றத்திற்காக இந்த ஒழுங்கற்ற உலகமானது
அவளுடைய கணவனையும், பிள்ளைகளையும் இழிவு படுத்திக் குற்றமற்றவர்களையும் வெறுத்து ஒதுக்குகிறது.
பிற ஆடவனால் உண்டாகின்ற கருவை அழிப்பதற்குப் பெண்கள் பலவகை மருந்துகளை உண்டு, கொலைத்
தீமைகளையும் புரிகின்றனர். எனவே, ஒருமுறை அயலவனைச் சேர்வதால் கிடைக்கும் சுகத்தால்
பல ஆடவர்களைச் சேர்ந்து அதன் மூலம் பொருள் தேடவும் துணிகிறாள். நாட்டில் நடைபெறும்
கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும், சண்டைகளுக்கும் இந்த ஒழுக்கமற்ற போக்கே காரணம் என்று
ஒரு பெண்ணின் கற்புக் கெடுவதால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடுகிறார். பெண்ணின் பெருமையைப்
பேசும் வேதநாயகம் அதே நேரத்தில் கற்பிலிருந்து தவறிய இழிமகளிரின் புன்மையையும் புலப்படுத்துவது
குறிப்பிடத்தக்கது. ஒரு பெண் தன் முழுமையான பெண்மையை அடைவது அவளது தாய்மையின் போதுதான்
என பெண்மை போற்றும் தாய்மையின் மேன்மையையும் விளக்குகிறார்.
|