பாவாணர் தனக்கு முன்னே தமிழ்ச் சொற்களை ஆராய்ந்திருந்த மாகறல் கார்த்திகேய முதலியார்,
யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் ஆகியோரது மொழிநூல் மரபைப் பின்பற்றினார். இதன்மூலம் பாவாணரின்
சொல்லாராய்ச்சி நெறி ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் எந்த ஒன்றின் அடிப்படையாகப் பிறந்தது
என்பதைக் கண்டு வெளிப்படுத்திய ஆய்வாக அமைந்தது. இவருடைய அறிவுத்திறம், சொல்லாராய்ச்சி
மரபு தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதி தோன்றுவதற்கு வித்தாயிற்று. அதனை முழுமையாக முடிக்காமல்
அவர் நமனுலகம் சென்றது தமிழுக்கு இழப்பே! அன்றுத் தமிழரும், தமிழக அரசும் இந்த அறிஞருக்கு
உரிய காலத்தில் உரிய வாய்ப்பைத் தாராமை வருந்தற்பாலது.
தமிழ் உலகத்தில் பாவாணரின் பெருமையையும், அருமையையும் உணராதவர்களே பலர். அன்றைய ஆட்சியாளராக
விளங்கியவர்கள் பிறமொழிச் சார்பிலேயே தமிழும், தமிழ்நாடும் வளர்ந்தது என்றும், வாழ்ந்தது
என்றும் கருதினர். இதன் காரணமாகவே பாவாணர் அரசு சட்ட விதிகளுக்கும், பல்கலைக்கழக நடைமுறைச்
சட்டங்களுக்கும் தாக்குப் பிடிக்க முடியாதவராயினார். அவர் அறிவு, உணர்வு அனைத்தும்
தமிழின் முதன்மையையும், மேன்மையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.
தமிழ்ச் சொற்கள் ஒன்றின் அடிப்படையிலிருந்து ஒன்றாகக் காலந்தோறும் பொருள் பெருக்கம்
பெற்றதைப் பாவாணர் பல்வேறு இலக்கியத்தைக் கொண்டும் மக்கள் வழக்கைக் கொண்டும் நிறுவினார்.
அவர் சொல்லை ஆராய்ந்து பொருளை வெளிப்படுத்திக் காட்டுவது சிறப்புடைய பகுதியாகும். இவருடையமுறைகளைப்
பின்பற்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பல தமிழ்ச் சொற்களைத் தமிழ் மரபின் அடிப்படையில்
பிறந்தது என்று ஆராய்ந்து எழுதலானார். தமிழ் மக்களிடையே சொல்லாராய்ச்சித் துறையை வளப்படுத்தியவர்,
பரப்பியவர் பாவாணரே. தமிழக அரசு மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களைத் தொன்றுதொட்டு
ஆதரித்து வருகிறது. திராவிட இயக்கம் பாவாணரை ஆதரித்து வந்தது. அவர் வாழ்ந்த காலத்தில்
அவருக்குக் கிட்டிய பொருட்பயன் குறைவு என்றாலும், அவர் தமிழ் உலகில் விதைத்து விட்டுப்போன
ஆய்வு விதைகள் என்றும் மறையாதவையாய் வாழும்; பெருகும். அவருடைய நூல்களை மக்கள் உடைமையாக்கித்
தமிழக அரசு பாவாணர் கருத்துக்களை உலகெங்கும் வாழ வைக்கச் செய்தது நல்லவழியாகும்.
|