ஒற்றுமை வளர்க்கும் ஓணம் பண்டிகை!
பண்டிகைகளும், விரதங்களும் இந்துக்களின் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன. பண்டிகைகள் ஒரு நாட்டின் சமூகப் பண்பாட்டை வளர்க்கின்றன. மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவே பண்டிகைகள் கொண்டாடப் பெறுகின்றன. மக்களை ஒன்றிணைக்கும் பண்டிகைகள் பல உண்டு. அவற்றில் ஓணம் பண்டிகையும் ஒன்று.

கேரளாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்களும் நடைபெறுகிறது. இன்று கேரளாவில் மட்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்வோணம் பண்டிகை பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டில் குறிப்பாக மதுரையில் நடைபெற்றுள்ள செய்தியை சங்க இலக்கியம் சுட்டுகிறது.

சங்க இலக்கியத்தில் ஓணம்:

தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, அங்கு திருவோணத் திருவிழா நடைபெற்ற செய்தியை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விரிவாக விளம்புகிறார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும், (மது.காஞ்சி 590), அதனை மக்கள் அனைவரும் ஒன்று கூடி விழாக் கொண்டாடியதாகவும் குறிப்பிடுகிறார். அன்று காய்கறி, கனி முதலிய உணவுப் பெருட்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்திருந்தனர். வீரர்கள் சேரிப்போர், என்னும் வீர விளையாட்டை நிகழ்த்தினர் என்றும், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பசுகளைப் பாண்டிய மன்னன் வழங்கினான் என்றும், மதுரையில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை விளக்குகிறார் மாங்குடி மருதனார். அதன் பிறகு எழுந்த இறையனார் களவியல் உரைகாரர் நக்கீரர், தமிழ்நாட்டில் நடைபெற்ற திருவிழாக்களைக் கூறுமிடத்து "மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்" என்று குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் மதுரை ஆவணி அவிட்டம், திருவோணத் திருவிழாவையே குறிப்பதாக மு.இராகவையங்கார் கருதுகிறார். மேலும் ஆவணி மாதத்தே திருவோண நட்சத்திரத்தில் வரவேண்டிய பௌர்ணமி அடுத்த அவிட்ட நாளிலும் வரக்கூடியது என்பதும் இவ்விரண்டு நட்சத்திரங்களும் சடங்கு, விழா முதலியன நடப்பதற்கு உரியவையாம்; அந்தணர் புதுப்பூனல் தரித்துப் புரியும் சிவாரணச் சடங்கு ஓணத்தை அடுத்த அவிட்ட நாளிலும் நடைபெறுவதால் பாண்டிய நாட்டெழுந்த களவியல் நக்கீரர் சுட்டும் ஆவணி அவிட்டம் திருவோணத்தையே குறிப்பதாகச் சுட்டுகிறார். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஓணம் பண்டிகையைப் பெரியாழ்வாரும் திருஞான சம்பந்தரும் குறிப்பிடுகிறார்கள்.

திருமாலுக்கு உய நாள் திருவோணம் என்ற போதிலும், சென்னை - மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திருவோண விழா நடைபெற்ற செய்தியை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தில் பண்டைக் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற ஓணம் பண்டிகை, பின்னர் ஏனோ வழக்கொழிந்து போயிற்று. ஆனால் இன்று ஓணம் பண்டிகை கேரளா முழுவதும் விழாக் கோலம் பூண்டு இன்பத் திருவிழாவாகக் கொண்டாடப் பெற்று வருகிறது.

கேரளாவில் ஓணம் பண்டிகை:

கேரளாவில் கொண்டாடப் பெறும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புராண காலத்தில் மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் வாயிற் படியிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்களைப் பெண்கள் வரைகின்றனர். கோலத்தின் நடுவில் குத்துவிளக்கேற்றி வைத்து, அதனைச் சுற்றிப் பல வகையான காய், கனிகளையும் அழகுற அடுக்கி வைக்கின்றனர். இக்கோலத்தை "அத்தப்பூக் கோலம்" என்று அழைக்கின்றனர். அன்று மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பலவிதமான காய், கனிகளையும் உணவு வகைகளையும் விருந்தினர்களுக்கு வழங்கித் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். திருமால் உறையும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

திருவிழாவின் ஒரு பகுதியாகப் பல வகை விளையாட்டுகள் நடைபெறுகின்றன "வேலக்களி" என்னும் வீர விளையாட்டு (சேரிப்போர்), ஓணப்பந்து, படகுப் போட்டி முதலிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

ஆவணிப் பௌர்ணமியில் நிகழும் இவ்வோண நன்னாள் திருமாலுக்குச் சிறப்புடையதுபோல், மார்கழிப் பௌர்ணமியில் நிகழும் திருவாதிரை நாள் சிவனுக்குச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே தான் இவ்விரண்டு பெருவிழாக்களும் சங்க நூல்களிலும், தமிழ்நாட்டிலும் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஓணம், ஆதிரை என்ற பெயருடன் 'திரு' என்று அடை சேர்த்து வழங்கப்படுகிறது.

கேரளாவில் கொண்டாடப்பெறும் திருவோணத் திருவிழா வைணவ சமயச் சார்போடு தொடர்புடையது என்ற போதிலும், ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி கிறித்துவர்கள், இசுலாமியர்கள் என அனைவரும் ஒன்று கூடித் தேசிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். மதுரைக்காஞ்சி சுட்டும் ஓணம் பண்டிகை முதலில் சைவ சமயத்தவரே கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னாட்களில் வைணவ, சைன, பௌத்த, சயத்தைச் சார்ந்தவர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுபோன்ற பிற பண்டிகைகளும் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் அமைய வேண்டும். இதனால் வேறுபட்டுக் கிடக்கும் மனிதர்கள் ஒன்றுபட்டுக் கிடக்கும் ஆலமரமாகத் தழைக்க வேண்டும்.