|
|
|
|
|
நாகங்களால் ஒரு வேள்வி!
|
"பாம்பென்றால் படையும் நடுங்கும்" என்பது பழமொழி. பண்டைக் காலத்தில் படைகள் தங்குவதற்குக்
கோயில்கள் பயன்பட்டன. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூல் ஒரு பாம்புப் படையே குடிகொண்டுள்ள
செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. குழந்தைப்பேறு கிட்டாதவர்களும், நாகதோசம்
உடையவர்களும் இங்குவந்து வழிபட்டு தமது குறைகள் நிறைவேறுதலின் பயனாகக் கல்லால் ஆன நாகங்களை
இக்கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வருவதால் இக்கோயிலின் மதிற்சுவரெங்கும் நாகச்சிலைகள்
காணப்படுகின்றன. நாகதோசத்தால் ஏற்படும் திருமணத் தடைகளை நிவர்த்தி செய்வதில் திருக்காளத்தியை
(காளகஸ்தி) அடுத்து பேரையூர் நாகநாதர் திருக்கோயில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது.
|
அமைவிடம்:
|
|
நகரத்தார்கள் வசிக்கும் 96 ஊர்களில் ஒன்றான பேரையூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து நமண சமுத்திரம் வழியாகப் பொன்னமராவதி செல்லும் பிரதான சாலையில்
சுமார் பத்து கி.மீ. தொலைவில் நச்சாந்துப்பட்டி என்னும் ஊர் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே
இரண்டு கி.மீ. தொலைவில் பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருத்தலத்திற்கு
நமணசமுத்திரத்திலிருந்து சிற்றுந்து (Mini Bus) இயக்கப்படுகிறது. இப்போது பேரையூர்
எனப் பெயர்பெற்று விளங்கும் இத்திருத்தலம் பண்டைக் காலத்தில் வேறு பெயர்களாலும் வழங்கி
வந்துள்ளது. நாகீசுவரம், திருப்பேரையூர், திருப்பேரை, பேரை என்ற பெயர்கள் கல்வெட்டுகளில்
காணப்படுகின்றன.
|
|
இறைவன் - இறைவி பெயர்க்காரணம்:
|
|
இங்குள்ள இறைவன் "நாகீசுவரமுடையார்' எனக் கல்வெட்டுக்களில் வழங்கப்பெறுகிறார். தமிழில்
"நாகநாதர்' எனப்பெயர் கொண்டு விளங்குகிறார். ஆதிசேடன், நாககன்னிகள் உள்ளிட்ட நாகர்கள்
இங்குள்ள இறைவனை வழிபட்டதால் இறைவன் நாகநாதர் எனப் பெயர் பெறுகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க
பேரையூர் சோழர், பாண்டியர், விசய நகர மன்னர்கள், பல்லவராயர், தொண்டைமான் போன்ற சிற்றரசர்கள்
வரலாற்றுடனும் தொடர்புடையதை இங்குள்ள கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. இப்போது பெரியநாயகி,
பிரகதாம்பாள் எனப் பெயர்பெற்று விளங்கும் அம்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளில்
"திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார்' என்றே குறிக்கப்பெறுகிறாள். சிவனுடன் அமர்ந்த
அம்மையைப் "பெரியநாயகி' என்றும், புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இட்ட
தெய்வமாக "பிரகதாம்பாள்' விளங்கியதாலும் அம்மைக்கு இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கவேண்டும்.
|
|
தலபுராண வரலாறு:
|
பேரையூர் நாகநாதர் திருக்கோயில் முன்பு ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் தென்கோடியின்
வழியாக நாகலோகத்திலிருந்து நாக கன்னிகள் நாகநாதரை வழிபடுவது வழக்கம். குமுதன் என்ற
நாக அரசன் நாகநாதரை வழிபட விரும்பி, "சூலினி' என்ற நாகலோகப் பணிப்பெண்ணை அழைக்க, அப்பெண்
தனக்கு அந்த அதிகாரம் இல்லை என்று மறுத்துவிடுகிறாள். ஆதிசேடனின் உதவியுடன் நாகலோக
அரசன் நாகநாதரை வழிபட்டு, "தான் மீண்டும் நாகலோகம் சென்று சிவபூசை செய்யும்போது ஈசன்
அங்கு நடனம் ஆட, தேவர்கள் வந்து துந்துபியுடன் முழக்கம் செய்யவேண்டும்'' என்ற வரத்தை
வேண்டினான். சிவனும் அவ்வரத்தை வழங்கியதாகப் பேரையூர் புராணம் பகர்கிறது. இவ்வாறு சிவன்
நாகலோகத்தில் நடனம் புரிகையில் தேவர்கள் துந்துபியுடன் மங்கள வாத்தியங்களை முழங்கினர்.
இன்றளவும், இந்த இசை முழக்க ஒலி இங்குள்ள சுனையில், ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தின்
குறிப்பிட்ட நாளில் ஒலிப்பதாகக் கூறப்படுகிறது. நீர்மட்டம் ஒரு சூலக்குறியின் குறிப்பிட்ட
அளவை எட்டும் பொழுது இவ்வொலி இசைப்பதாகக் கூறப்படுகிறது.
|
திருக்கோயில் அமைப்பு:
|
நாகநாதர் திருக்கோயில் கிழக்குநோக்கிய சன்னதியை உடையது. கருவறையில் இறைவன் இலிங்க வடிவில்
காட்சி தருகிறார். கருவறையை அடுத்த முகமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நடராசர் சன்னதி
உள்ளது. கருவறையின் தேவகோட்டங்களில் தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா ஆகியோர்
வீற்றிருக்கின்றனர். கருவறையின் வலது புறத்தில் விநாயகர் சன்னதியும், காட்சி கொடுத்த
நாதர் சன்னதியும் அமைந்துள்ளன. இதன் முன்னே கோயில் தலத்தீர்த்தமான "பொன்முக' சுனை உள்ளது.
நாகநாதர் கருவறையின் இடது புறத்தில் அம்மன் கருவறை உள்ளது. அம்மன் கருவறையை அடுத்த
அர்த்த மண்டபத்தில் பள்ளியறையும், மகா மண்டபத்தில் நவக்கிரகமும் உள்ளது. இறைவன், இறைவி
கருவறைகளுக்கு இடையே சண்முகநாதன் சன்னதி அமைந்துள்ளது. இதுபோன்ற அமைப்பு வேறெங்கும்
காண இயலாது. இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் திருவுருவ அமைதியை நினைவுபடுத்துவதாக உள்ளது.
நாகநாதர் திருக்கோயிலின் பரிவார தெய்வங்களாக விநாயகர், காசிவிசுவநாதர் விசாலாட்சி,
தண்டாயுதபாணி, கெசலட்சுமி ஆகியோர் திகழ்கின்றனர்.
|
வழிபாடும், விழாவும்:
|
|
பேரையூர் அருள்மிகு நாகநாதர் திருக்கோயிலில் நாள்தோறும் நான்கு காலப் பூசைகள் நிகழ்கின்றன.
இது தவிர பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் பிரதோச வழிபாடு சிறப்பிற்குயது. அன்று
இறைவனுக்கு சிறப்பு அபிடேக ஆராதனை நிகழ்த்தப்பெறுகிறது. இந்தப் பிரதோச வழிபாட்டின்போது
காளை வாகனத்தில் காட்சிதரும் காட்சி கொடுத்த நாதரை வழிபட்டால் காரியம் வெற்றிபெறும்;
இடையூறுகள் நீங்கும்; செல்வச் செழிப்பு, ஞானம் போன்ற நற்பலன்கள் கிட்டும். பங்குனி
மாதம் பத்துநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது. பத்தாம் நாளன்று திருத்தேரில்
இறைவன் திருவீதியுலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தேர்த்திருவிழாவில் தேக்காட்டூர்,
பிலிவலம், இலன்பக்குடி, கோட்டூர், விராச்சிலை ஆகிய ஐந்து ஊர் நாட்டார்களும், நகரத்தார்களும்
சேர்ந்து தேர் வடம் பிடிப்பது தனிச்சிறப்பாகும்.
|
|
நாகவழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும்:
|
|
நாகம் என்ற சொல்லுக்கு நல்ல பாம்பு, ஆகாயம், யானை, நாகலோகம், மலை, குரங்கு, புன்னை,
நாவல் மரம் போன்ற பல பொருட்ளை அகராதிகள் தருகின்றன. எனினும் நாகம் என்றவுடன் நம் நினைவிற்கு
வருவது பாம்பு மட்டுமே. இன்று மக்களிடையே பரவியுள்ள விலங்கு வழிபாட்டில் (Animal worship)
நாக வழிபாடு சிறப்பிடம் பெற்றுள்ளது. நாக வழிபாடு இனக்குழுக்குறி வழிபாட்டினின்று தோன்றியது
என்றும், இயற்கை வழிபாட்டினின்றும் தோன்றியது என்றும் அச்சத்தால் தோன்றியது என்றும்
பல கருத்துகள் நிலவுகின்றன.
நாகர்களுடைய ஒழுக்கமே பிற்காலத்தில் நாகரீகம் (நாகர் + இகம்) என்று வழங்கப்பட்டது என்றும்,
அவர்களுடைய எழுத்து முறையே "நாகரி' என வழங்கப்பட்டது என்றும் கூறுவர். மருதமர நிழலிலுள்ள
பாம்புக்குப் பலி கொடுத்தமையைப் பெரும்பாணாற்றுப்படை (232-33) குறிப்பிடுகிறது. மரத்தை
வழிபட்ட மக்கள் அதன் அடியில் உறையும் பாம்பையும் வழிபட்டிருக்கவேண்டும்.
திராவிட மக்களிடம் சிறப்பிடம் பெற்றிருந்த நாக வழிபாடு ஆரியர்களின் வருகைக்குப் பின்
அனைத்து மதங்களுடனும் தொடர்புபடுத்தப்படுவதைப் பாம்பாட்டிச் சித்தர் பாடல் வழி அறியமுடிகிறது.
தத்துவ நிலையிலும் குண்டலினி சக்தியை சுருண்ட பாம்பைப் போல் உள்ளதாக விளக்குவர். நாக
வழிபாடு தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா, பீகார், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஒசா போன்ற
பிறமாநிலங்களிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் புனிதமாகக்கருதி வழிபடும் பாம்பைக் கிறித்தவர்கள் வெறுக்கிறார்கள்.
இறைவனிடமிருந்து சாபம் பெற்ற முதல் உயிர் பாம்பு என்று விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகளில் பாம்பு வந்தால் தீய சகுனமாகப் பழம்பாடல் என்று குறிப்பிடுகிறது. வீடுகளில்
பாம்பு வராமல் இருக்கத் திருவாடாணை அருகில் உள்ள திருவெற்றியூர் பாகம்பியாள் திருக்கோவிலுக்குச்
சென்று வருவது இன்றும் வழக்கமாக உள்ளது.
|
நாகதோசம் - வழிபாட்டு நெறிமுறைகள்:
|
|
நாகத்தின் (ராகு) பார்வையால் மனிதர்களுக்கு ஏற்படும் தோசத்தை நாகதோசம் என்பர். நாகத்தின்
பார்வையால் திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை போன்ற தடைகள் ஏற்படுகின்றன. இதனால் நாகதோசம்
உடையவர்கள் சோதிடர்களின் அறிவுரைப்படி நாகநாதர் திருக்கோயிலில் நாகதோச நிவர்த்தி அடைய
சிறப்புப் பூசைகள் செய்கின்றனர். நாகதோசம் உடையவர்கள் நாகநாதர் திருக்கோயில் முன்புள்ள
திருக்குளத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குச் சென்று ராகுகாலத்தில் சிறப்புப் பூசைகள்
நிகழ்த்த வேண்டும். பக்தர்கள் காணிக்கையாகக் கொண்டு வரும் நாகம், உளுந்து, எள் முதலிய
பொருட்களைக் கொண்டு கருவறையின் முன் உள்ள மகாமண்டபத்தில் சிறப்புக் கிரியைகள் நடைபெறுகிறது.
பிறகு காட்சி கொடுத்த நாதருக்கும், விநாயகருக்கும் இடையே உள்ள நாகலிங்கத்திற்கு, சிறப்பு
அபிடேக ஆராதனை நிகழ்த்தப்பெறுகிறது. பக்தர்களின் வசதிக்கேற்ப (கல், வெள்ளி, தங்கம்)
ஐந்து தலையுடன் கூடிய நாகத்தைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவ்வாறு காணிக்கை
செலுத்திய நாகங்கள் இக்கோயில் முழுவதும் காணக்கிடக்கின்றன.
|
|
|
|
|