ரோஜா முத்தையா சேகரித்த நூல்கள் பற்றிய செய்தியை அறிந்த ஆய்வாளர்கள் தம் ஆய்வு தொடர்பான
தரவுகளைத் திரட்ட கோட்டையூருக்குச் சென்றனர். அவர்கள் நூலகத்தைப் பயன்படுத்த இலவசமாக
அனுமதிக்கப்பட்டது. பிறகு ஆய்வாளர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் உதவித் தொகையில்
ஒரு சிறுதொகையைப் பெற்று அதில் மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நாட்டின் பல
பகுதிகளைச் சேர்ந்தவர்களும் நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். முத்தையா அவர்கள் நினைத்திருந்தால்
பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கலாம். ஆனால், அரிய புத்தகங்களைப் பாதுகாப்பதே தனது
தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டார். அப்பணியிடையிலும் ‘தேள்கடி’ தொடர்பான மருத்துவநூல்
ஒன்றை எழுதி வெளியிட்டார். சேகரித்த நூல்களைப் பாதுகாக்க ஒருவகைப் பூச்சி மருந்தைத்
தெளித்து வந்தார். அதனை அடிக்கடி சுவாசிக்க நேர்ந்ததால் அவருக்கு நோய் ஏற்பட்டது. இந்நிலையில்
தனது நூலகத்தைத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்குக் கொடுக்க எண்ணினார். அதற்கான
முயற்சிகளை அப்போதைய தமிழக அரசு மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சி ஏனோ வெற்றிபெறவில்லை.
சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சி.எஸ்.லட்சுமி என்பவர் தான் பயன்படுத்திய முத்தையா
நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி தன் நண்பர்களிடமும் பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் எடுத்துக்
கூறினார். பல்கலைக்கழக நிர்வாகம் முத்தையாவைத் தொடர்பு கொண்டு நூலகத்தைத் தருமாறு வேண்டியது.
ஆனால் தான் அரும்பாடுபட்டுச் சேகரித்த அறிவுப் பெட்டகத்தை வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்திற்கு
அளிக்க அவர் விரும்பவில்லை. தனது சேகரிப்புகள் தமிழகத்திற்கே பயன்பட வேண்டும் என விரும்பினார்.
விருப்பம் நிறைவேறாத நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழறிஞர்களை அவர்கள் வாழும் காலத்தில் மதிக்காத தமிழகம் ரோஜா முத்தையாவின் நூலகத்தை
அரசுடைமை ஆக்க எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட
தொகையை வழங்கி தங்கள் வசப்படுத்தியது. இருப்பினும் சிகாகோ பல்கலைக்கழகம், மொழி, பண்பாட்டு
அமைப்பான மொழி அறக்கட்டளையின் கூட்டு முயற்சியால் முத்தையா நினைவாக ‘ரோஜா முத்தையா
ஆராய்ச்சி நூலகம்’ என்ற பெயரில் சென்னை கிழக்கு முகப்பேரில் 1994 ஆம் ஆண்டு நிறுவி,
இன்று சிறப்பாகச் செயல்படுகிறது. 1995 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்குத்
திறந்துவிடப்பட்டுள்ளது.
|