முதல்வன்

எடுத்த காரியம் எளிதாக - வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது. சங்க இலக்கியங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் இல்லை. "உரையாசிரியர்' என்று அழைக்கப்படும் இளம்பூரணர் செய்யுளியல் உரையில் "தன்தோள் நான்கில்' என்ற அகவலை எடுத்தாள்கிறார். விநாயகர் வழிபாட்டில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாடு உலகெங்கும் பரவியுள்ளது.

அமைவிடம்:
பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலைக் காரைக்குடியிலிருந்து குன்றக்குடி வழியாகத் திருப்புத்தூர் செல்லும் சாலையில் சுமார் பதினாறு கி.மீ. தொலைவு சென்றால் வழிபடலாம். இத்தலத்தின் கிழக்கே மூன்று கி.மீ. தொலைவில் குன்றக்குடியும், வடமேற்கே ஒரு கி.மீ தொலைவில் வயிரவன்பட்டியும் இருக்கின்றன. பிராமி மொழிக்கல்வெட்டுள்ள குடைவரையான பிள்ளையார்பட்டி, மருதங்குடி, திருவீங்கைக்குடி, எருக்காட்டூர், இராசநாராயணபுரம் என்ற பெயர்களால் கல்வெட்டுகளில் ஆளப்பட்டுள்ளது. கற்பக விநாயகரின் திருவுருவத்தைச் செதுக்கிய தச்சனின் பெயர் "எருக்காட்டூர் கோன் பெருபரணன்' எனச் சுட்டப்பெறுகிறது. இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் ஒன்பது நகரக்கோயில்களில் ஒன்றாகும்.

இங்குள்ள பிள்ளையார் உலக மக்களின் நன்மைக்காகச் சிவலிங்கத்தைக் கையில் வைத்துத் தவம் புரியும் முகமாக வீற்றிருப்பதால் இவ்வூர் பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகிறது.

 
இறைவன் – பெயர்க்காரணம்:
இங்குள்ள விநாயகர், கற்பக மரம் போலக் கேட்ட வரம் அனைத்தும் நல்குவதால் கற்பக விநாயகராகிறார். ஆனால் கல்வெட்டுகளில் இவர், "தேசிவிநாயகப் பிள்ளையார்' என்றே சுட்டப்படுகிறார்.
தலத்தின் தொன்மை:
உலகில் காணப்படும் விநாயகர் சிற்பங்களுள் காலத்தால் முந்தியதாகவும், உலகத்தின் முதல் பிள்ளையாராகவும் அமைந்திருப்பது பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகரின் சிற்பமேயாகும். இங்குள்ள விநாயகர் இரண்டு கைகளுடன் காணப்படுகிறார். இதனை அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகர் இரண்டு கைகளுடன் திகழ்கிறார். இரண்டு கைகளுடன் உள்ள விநாயகரை வேறு எங்கும் காண இயலாது. தமிழகத்தில் விநாயகர் வழிபாடு கி.பி. ஏழாம் நூற்றாண்டில், வாதாபி கொண்ட போரில் சிறுத்தொண்டர் கொண்டு வந்த விநாயகரின் உருவத்திற்குப் பின்னரே தோன்றியது என்ற கருத்துப் பரவலாக உள்ளது. ஆனால் இக்கருத்து ஏற்புடையதன்று. சாளுக்கியரின் விநாயகர் வழிபாடு வடதமிழகம் வழியாகப் பாண்டிய நாட்டில் பரவியது; பாண்டியர் குடைவரைகளில் விநாயகர் இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
திருக்கோயில் அமைப்பு:
கற்பக விநாயகர் கோயில், வடக்கு நோக்கிய சன்னதியை உடையது. மலையைக் குடைந்து இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறையில் விநாயகர், ஆறடி உயரத்தில் அமைந்திருக்கிறார். மருந்தீசர் திருக்கோயில் கிழக்கு நோக்கியது. இறைவன் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. மகா மண்டபத்திற்கு முன்பாக இறைவி வாடா மலர் மங்கை, தெற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறாள். இறைவி சன்னதிக்குப் பின்புறம் தலவிருட்சமான மருதமரம் உள்ளது. கற்பக விநாயகப் பெருமான் ஆலயத் திருவாயில் முன்பு திருக்குளம் அமைந்துள்ளது.
நாள் வழிபாடு:

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் நாள்தோறும் ஐந்து காலப் பூசைகள் நிகழ்கின்றன. திருஅனந்தல் காலை 6.00 மணி முதல் 6.30 மணி வரையிலும், காலைச் சந்தி காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், உச்சிக்காலம் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், சாயரட்சை மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரையிலும், அர்த்த யாமம் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் நடைபெறுகின்றன.

திருவிழாக்கள்:

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகருக்கு அபிடேக ஆராதனை நடைபெறும். இரவு, வெள்ளி மூஞ்சுறு வாகனம் வலம் வரும் நிகழ்ச்சி உள்பிரகாரத்தில் நடைபெறும். திருக்கார்த்திகை மற்றும் திருவாதிரைத் திருநாளன்று விநாயகருக்கும், மருந்தீசருக்கும், நடராசருக்கும் சிறப்புப் பூசைகளும், அபிடேக ஆராதனைகளும் நிகழும்.

விநாயகர் சதுர்த்தி:

பிள்ளையார்பட்டியில் இத்திருவிழா பத்து நாள்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. விநாயகர் சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாகக் காப்புக்கட்டிக் கொடியேற்றித் திருவிழா தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் இரவிலும் விநாயகருக்கு மூஞ்சுறு, சிம்மம், பூதம், கமலம், இடபம், யானை, பெருச்சாளி, மயில், குதிரை வாகனங்களில் திருவீதியுலா நடைபெறும். கற்பக விநாயகருக்கு, சதுர்த்தியன்று 18 படி அரிசிமாவினால் செய்யப்படும் கொழுக்கட்டை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்சத்தில் வருகிற சதுர்த்தியன்று, விடியற்காலையில் எழுந்து நீராடி, பட்டாடை உடுத்தி, ரத்னகலச ஸ்தாபனம் செய்து, கும்பத்தில் விநாயகரை வணங்கி, கரும்பு, விளா பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபட வேண்டும். பகலில் ஒருவேளை உண்டு இரவில் பால் (அ) பழம் மட்டும் உண்டு விரதம் இருத்தல் வேண்டும். அன்று இரவில் சந்திரனைப் பார்க்கக்கூடாது. சதுர்த்தியன்று விரதம் இருந்து வரும் பக்தர்கள் அதனை நிறைவு செய்யப் பிள்ளையார்பட்டி வருவர். ஓராண்டுச் சதுர்த்தி நோன்பு விரதத்தை இங்கு நிறைவு செய்பவர்களுக்குக் கேட்ட வரம் கிடைக்கின்றது என்பது நடைமுறையில் கண்ட உண்மையாகும்.

விநாயகர் சதுர்த்தி என்றதும் கொண்டாட்ட உணர்வு வருவதற்குப் பதில் இப்போதெல்லாம் வன்முறை ஏற்பட்டுவிடுமோ என்ற பயமே மேலோங்குகிறது.

ஆயிரக்கணக்கான பிள்ளையார்களை கிணறுகளிலும், ஏரிகளிலும், குளங்களிலும், கடலிலும் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் அதிகத்து வருகிறது. முன்பெல்லாம் களிமண்ணில் மட்டும் தான் பிள்ளையார் உருவங்களைச் செய்தனர். தற்பொழுது பிளாஸ்ட்ரோ பாரீஸில் செய்த நச்சுத்தன்மையுள்ள வண்ணங்கள், வார்னிசுகள் பூசப்பட்ட பிள்ளையார்கள் அதிகத்துவிட்டன. இதனால் நீர் மாசுபடுவதுடன், நீர் வாழ் உயிரினங்கள் அழியும் சூழல் ஏற்படுகிறது. உற்சவ மூர்த்திகள் வலம் வருதல் சக உயிர்களை அழிக்கஅல்ல; மகிழ்விப்பதற்கே என்பதை மக்கள் உணரவேண்டும்.

தலவிருட்சம், தலத்தீர்த்தம்:
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலின் தல விருட்சமாக, மருதமரம் திகழ்கிறது. இங்குள்ள சிவபெருமானின் திருப்பெயரோடு தலவிருட்சம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டியின் பழமையான பெயர்களில் மருதங்குடி என்பது ஈண்டு குறிக்கத்தக்கது. தலத்தீர்த்தமாகக் கற்பக விநாயகரின் ஆலயத் திருவாயில் முன்புள்ள திருக்குளம் திகழ்கிறது.
தலத்தின் தனித்தன்மைகள்:

குடைவரைக் கோயிலிலுள்ள விநாயகரின் சிற்ப அமைதியையும், பழமையான கல்வெட்டினையும் கொண்டு உலகின் முதன்மையான விநாயகர் கோயிலாகப் பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் கோயில் திகழ்கிறது. வடக்கு நோக்கியவாறு தனது வலது கரத்தில் இலிங்கத்தை வைத்து அமர்ந்த நிலையில் உலக நன்மைக்காகத் தவம் புரியும் விநாயகர் திருக்கோலத்தை வேறு எங்கும் காணஇயலாது. விநாயகரின் தும்பிக்கை வலப்புறமாக "ஓம்' எனும் பிரணவத்தைப் போல அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். விநாயகரின் திருமுகத்துடன் கூடிய வலதுபுறத் தும்பிக்கை, ஓங்காரத்தை வலியுறுத்துகிறது.

மடைப்பள்ளி அருகில் உள்ள சுனை சார்ந்த அரசமர வேர்களுக்கு இடையே ஒரு இலிங்கம் முளைத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைப் பக்தர்கள் கூட்டமாகச் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்த அரசமரத்தடியில் உள்ள நாகலிங்கத்தை வழிபட்டால் நீண்ட நாள்களாகத் தடைப்பட்டு வந்த திருமணம், பிள்ளைப்பேறின்மை ஆகியவை நீங்கும். இதனை அவ்வரசமரத்தில் கட்டப்பெற்ற மஞ்சள் கயிறுகளும், தொட்டில்களும் உறுதிசெய்கின்றன.

இங்குள்ள நடராசன் செப்புத் திருமேனியில் உள்ள டமாரத்தைத் தட்டினால், உண்மையான டமார ஒலி கேட்கிறது.

அலங்கார மண்டபத்தில் உள்ள விநாயகர் ஓவியம் எங்கு நின்று பார்த்தாலும் நம்மைப் பார்ப்பதுபோல அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.பிள்ளையார்பட்டியில், வேத, ஆகமங்களைக் கற்பிக்கும் வேத ஆகமப் பாடசாலையும், சிவநெறிக்கழகமும் இருப்பதால், எந்நேரமும் வேத ஆகமங்களின் ஒலி ஒலிக்கிறது. ஆகையால் இறைவனின் சக்தி பெருகிக் கொண்டே வருகிறது. இதனால் தினசரி வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் மிகுந்து பிள்ளையார்பட்டி தெய்வீகச் சுற்றலா மையமாகத் திகழ்கிறது.