குமரன் குடிகொள்ளும் குன்றக்குடி

தமிழகத்தில் ஆறுமுகப் பெருமான் குடிகொள்ளும் குன்றங்கள் பல உண்டு. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். குன்றக்குடி என்னும் இத்திருத்தலம் செட்டிநாட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது. குன்றக்குடிமலை, ஊரின் மையப் பகுதியில், வடக்கே முகமும், தெற்கே தோகையும் கொண்டு நிற்கும் மயிலின் வடிவாக அமைந்துள்ளது. எனவே இம்மலை "சிகண்டிமலை' எனப்படும்.

அமைவிடம்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி - மதுரை பிரதான சாலையில் காரைக்குடியிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் குன்றக்குடி உள்ளது. இத்திருத்தலத்தின் மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் உலகப்புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிக கற்பக விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. "குன்றக்குடி' என்றும், "குன்னக்குடி' என்றும் மக்களால் வழங்கப்பெறும் இத்திருத்தலம் புராணங்களில் "மயூரகிரி' என்று வழங்கப்படுகிறது. இத்தலத்தில் முருகப்பெருமானின் வாகனமாகிய மயில் குன்று உருவில் நின்று வழிபட்டதால் (மயூர்-மயில்; கிரி-மலை) "மயூரகிரி' என்றாயிற்று.
புராண வரலாறு:
சூரனும், பதுமனும் முருகப்பெருமானது மயிலாகவும், கோழிக் கொடியாகவும் மாறத் தவம் புரிந்தனர். அவ்வாறே சிங்கனும், தாரகனும் தவம் செய்தனர். இவர்கள் நால்வரும் தவம் செய்வதன் நோக்கத்தை உணர்ந்த மயில், சிவனிடம் பூதகணங்களாக அவர்கள் மாறித் தொண்டு புரிய வேண்டும் என்று வேண்டியது; அவ்வாறே நால்வரும் மாறினர். தங்கள் நோக்கம் நிறைவேறாததற்கு மயில்தான் காரணம் என்றும், அதற்கு உதவியாக இருந்தவை கருடனும், அன்னமும் தான் எனவும் உணர்ந்த அந்நால்வரும் அவற்றின் மீது பகை கொண்டு இருந்தனர். கருடனும், அன்னமும் மயிலிடம் சென்று தங்களைப் பெருமையாக நினைத்துக்கொண்டு, மயிலை இழிந்ததாகக் கூறின. உண்மையை உணராத மயில், கருடனையும், அன்னத்தையும் துன்புறுத்தியது. துன்பத்தைப் பொறுக்க இயலாத அன்னமும், கருடனும் முருகனிடம் முறையிட்டன. தன்னை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமான் தன்னைத் தண்டிக்க மாட்டார் என்ற செருக்குடன் இருந்தது மயில். ஆனால் முருகப்பெருமான் மயிலைக் குன்றாகுமாறு சபித்தார். தன் தவற்றை உணர்ந்த மயில் முருகனிடம் வேண்ட, முருகனும் முன்பு அரசவனமாக விளங்கிய குன்றக்குடியில் குன்றுருவில் இருக்குமாறும், சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகப் பெருமானாகத் தோன்றி அசுரர்களை வதைத்த பின்னர் வந்து சாபவிமோசனம் வழங்குவதாகவும் அருள்புந்தார். சூரசம்காரம் முடிந்த பின்னர் முருகப்பெருமான் குன்றக்குடிக்கு வந்து மயிலினது சாபத்தை நிவர்த்தி செய்து, அதை இருகூறாக்கி, ஒரு பாகத்தைச் சாருப்ய பதவி அடையுமாறும், மற்றொரு பாகத்தை மலையாக இருக்குமாறும் அருள் புந்தார் என்று மயூரகிரிப் புராணம் கூறுகின்றது. இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் குன்றக்குடியில் உள்ள குன்றம் நிமிர்ந்து நிற்கும் மயிலின் தோற்றமாகக் காட்சியளிக்கிறது.

திருக்கோயில் அமைப்பு:

குன்றக்குடி மலை இரண்டு பகுதிகளாகத் திகழ்கின்றது. ஒன்று மலைக்கோயில்; மற்றொன்று கீழைக்கோயில். கீழைக்கோயிலின் பெரும்பகுதிகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. இங்குத் தேனாற்று நாதரும் அழகம்மையும் கிழக்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ளனர். அருகில் கிழக்கு மேற்காகச் சுந்தரேசுவரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்தீசர், சண்டேசர் ஆகிய நால்வரது குடைவரைக்கோயில்கள் அமைந்துள்ளன. இக்குடைவரைக் கோயில்களில் 23 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குன்றின் மேற்கே ஞானியார் மலை உள்ளது.

மலையடிவாரத்தில் தோகையடி விநாயகர் கோயில் உள்ளது. மலையின் நுழைவாயில் தோகை வடிவமாதலால் அதனருகில் வீற்றிருக்கும் விநாயகருக்குத் தோகையடி விநாயகர் என்று பெயர் வந்தது. இக்கோயிலின் மேற்கே தண்டாயுதபாணி சுவாமி கோயிலும், முருகனின் வேலால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கையும் அமைந்துள்ளன. பக்தர்கள் தோகையடி விநாயகரை வழிபட்ட பின்னரே மலைக்குச் செல்லுதல் வழக்கம். மலைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் இடையிடையே மண்டபங்கள் இடம்பெற்றுள்ளன. படிக்கட்டின் உச்சியில் வல்லப விநாயகர் சன்னதியும், இடும்பன் சன்னதியும் உள்ளன. தெற்கு நோக்கியுள்ள பிரதான வாயிலை இராசகோபுரம் அழகு செய்கிறது. இக்கோயில் ஒரே பிரகாரத்தைக் கொண்டு விளங்குகிறது. இப்பிரகாரத்தில் அலங்கார மண்டபம், விசாலாட்சி சன்னதி, சோமாஸ்கந்தர் சன்னதி, ஆறுமுகப்பெருமான் சன்னதி ஆகியவை உள்ளன.

இப்பிரகாரத்தின் தென்பகுதியில் சமய குரவர் நால்வருக்கும், சொர்ணகணபதிக்கும், வடபகுதியில் குழந்தை வடிவேலன், நடராசர் முதலியோருக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. அலங்கார மண்டபத்தின் தூண்களில் மருது சகோதரர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

கருவறையில் சண்முகநாதர் ஆறு திருமுகங்களுடனும், பன்னிருகைகளுடனும் மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். வலப்பக்கத்தில் வள்ளியம்மையும், இடப்பக்கத்தில் தெய்வானையும் தனித் தனி மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். இத்திருக்கோலத்தை வேறு எங்கும் காண இயலாது. இது கண்கொள்ளாக் காட்சியாகும்.

விழாக்கள்:

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாகம், ஐப்பசி சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். தைப்பூசத்தின் போது பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்துச் சண்முகநாதனுக்குச் செலுத்துவார்கள். பங்குனி உத்திரத்தின் போது சிறப்பு அபிடேக ஆராதனைகள் நடைபெறும். கோயிலைச் சுற்றியுள்ள அன்னதான மண்டபங்களில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து அன்பர்கள், பக்தர்களுக்குச் சோறு வடித்துப் போடுவர். குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயிலின் தலத்தீர்த்தங்களாக மலையைச் சுற்றியுள்ள, சரவணப் பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாண்டவர் தீர்த்தம், சண்முகநதி ஆகியவை திகழ்கின்றன.

நிருவாகம்:

குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட ஐந்து கோயில்களில் ஒன்றாகச் சண்முகநாதர் திருக்கோயில் விளங்குகிறது. ஆதீனத்தின் 46-ஆவது தர்ம கர்த்தாவாகவுள்ள மகாசந்நிதானம் அருள்திரு பொன்னம்பல தேசிக சுவாமிகள் சிறப்பாக நிருவகித்து வருகிறார்.