குடுமியான்மலை ஒரு கலைக்கூடம்!

குடுமியான்மலை அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனாய குடுமிநாதர் திருக்கோயில் வரலாறு சிறப்புமிக்கது. இது தமிழ் மன்னர்கள் பலரின் கண்காணிப்பைப் பெற்றது. இத்திருக்கோயில் முற்காலப் பாண்டியர், சோழர், பிற்காலப் பாண்டியர் போன்ற பேரரசர்கள் வரலாற்றுடனும், முத்தரையர், இருக்குவேளிர், வானாதிராயர், பல்லவராயர், தொண்டைமான் போன்ற சிற்றரசர்கள் வரலாற்றுடனும் தொடர்புடையது. இத்தொடர்பினைக் கல்வெட்டுச் செய்திகள் உணர்த்துகின்றன.

அமைவிடம்:
குடுமியான்மலைத் திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாகத் திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் சுமார் இருபது கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அண்ணா விதைப்பண்ணை தமிழக உழவர்கள் மத்தியில் சிறப்புப்பெற்ற ஒரு மிகப்பெரிய ஆய்வு மையமாகும். இவ்வூன் கிழக்கே சுமார் பத்து கி.மீ. தொலைவில் உலகப்புகழ் பெற்று விளங்கும் ஓவியக்கலைக் கூடமான சித்தன்னவாசலும், மேற்கே இருபத்தைந்து கி.மீ. தொலைவில் வரலாற்றுச் சிறப்புடன் திகழும் கொடும்பாளூரும் அமைந்திருக்கின்றன.

இப்போது குடுமியான்மலை எனப்பெயர் பெற்று விளங்கும் இத்திருத்தலம், பண்டைக் காலத்தில் வேறுபெயர்களால் வழங்கி வந்துள்ளது. திருநலக்குன்றம், திருநிலக்குன்றம், சிகாநல்லூர், குடுமியான்மலை என்ற பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. "ஆயிரம் வேள்விகள் ஆக்கியோன்'' எனச் சின்னமனூர்ச் செப்பேட்டாலும் "கொல்யானைப் பலவோட்டி கூடா மன்னர் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதிராசன்' என வேள்ளிக்குடிச் செப்பேட்டாலும் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் வரலாற்றை அறியமுடிகிறது. இவனது இயற்பெயர் "குடுமி' என்பதாகும். அப்பெயர்க் காரணமாகவே இம்மலைக்கும் இறைவனுக்கும் இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். குன்றின் சிகரத்தை - உச்சியைக் "குடுமி' என்னும் சொல் உணர்த்தும். எனவே அக்குன்றுடைய பெருமான் "குடுமியான்' எனப்பட்டார். நாளடைவில் பழம்பெயர் மறைந்து குடுமியான்மலை என்றே ஊரும் பெயர் பெற்றது என்பர் ரா.பி. சேதுப்பிள்ளை. இன்று இப்பெயரே வழக்கில் உள்ளது. காளத்தி மலையில் கண்ணப்பர் வழிபட்ட சிவபெருமான் பெயரும் "குடுமித்தேவர்' என்பது நோக்கத்தக்கது.
இறைவன் பெயர்க்காரணம்:

இறைவன் பெயர் குடுமிநாதர் என்று அழைக்கப்படுவதற்கு வழக்கில் கதை ஒன்று கூறப்படுகிறது. "சுந்தரபாண்டியன் மதுரையில் இருந்து புறப்பட்டு, குடுமியான்மலைக் கோயிலை வந்தடைந்தான். அவன் கோயிலுக்கு வந்து சேர்ந்த நேரம் அர்த்தயாமம் ஆகும். இக்கோயிலில் பணிபுயும் குருக்கள் அரசனது வரவை வெகுநேரம் எதிர்பார்த்து வாராமை கருதி, இறைவன் மீதிருந்த மாலைகள் அனைத்தையும் எடுத்துச் சென்று தன் காதற்கிழத்தியாகிய உருத்திர கணிகைக்கு அணிவித்து இனிதிருந்தான். அத்தருணத்தில் அரசன் வரவு குருக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இறைவன் மீது மலர் மாலைகள் இல்லாதிருந்தாலும் அவனுக்கு மாலை மயாதை செய்ய மாலை இல்லாதிருந்தாலும் அரசன் கோவிப்பான் என்று எண்ணிய குருக்கள் மாலைகளைக் கோயிலுக்குத் திரும்ப எடுத்துச் சென்றான்.

குருக்கள் அரசனுக்குத் தசனம் செய்து வைத்து அவன் கழுத்தில் ஒரு மாலையையும் இட்டான். அம்மாலையில் ஒரு மயிர் இருக்கக் கண்டான் அரசன். இதைக் கண்டு திகைப்படைந்த அரசன், மாலையில் உரோமம் வரக்காரணம் என்ன? என்று கேட்டான். குருக்கள் இறைவர் சிகாநாதர் அல்லவா? என்று விடையளித்தான். இதனைக் கேட்ட அரசன் கோபமடைந்து, நாளைக் காலை சிகையைப் பார்க்க வருவோம். அதுவரை குருக்களைக் கோயிலிலேயே சிறைப்படுத்தி விடுங்கள் என்று உத்தரவிட்டான். குருக்கள் இறைவனிடம் அருள்புந்து தன் துயரினை நீக்கும்படி வேண்டினான். இறைவனும் குருக்களுக்கு மனமிரங்கி அருள் புந்தார். மறுநாள் இறைவனைக் கண்ட அரசன், தலையில் உரோமம் இருப்பதனைக் கண்டு வியப்புற்றான். அதோடு மட்டுமின்றி அந்த ரோமத்தினை இழுத்தும் பார்த்தான். அப்பொழுது இரத்தம் பீறிட்டு எழுவதனைக் கண்டு மனம் வருந்திக் குருக்களிடம் மன்னிப்புக்கேட்டான். குருக்களையும் விடுவித்தான். அன்றிலிருந்து இறைவனுக்குக் குடுமிநாதர் என்ற பெயர் உண்டாயிற்று என்பர்.

திருக்கோயில் அமைப்பு:

குடுமிநாதர் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியை உடையது. இக்கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. முதல் திருச்சுற்றில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், சபா மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் திருமண மண்டபமும், யாகசாலையும், மடைப்பள்ளியும் அகிலாண்டேசுவரி அம்மன் கோயிலும், நூற்றுக்கால் மண்டபமும் இடம்பெற்றுள்ளன. திருக்குளம், ஆயிரங்கால் மண்டபம், குடைவரைக் கோயில், சௌந்தரநாயகி அம்மன் கோயில் போன்றவை மூன்றாம் திருச்சுற்றில் காணப்படுகின்றன. குடுமிநாதர் திருக்கோயில் யாரால் கட்டப்பெற்றது என்பதற்கு நேரடியான சான்றுகள் இல்லை. தேவாரத் திருப்பதிகங்களில் இத்தலம் இடம்பெறாததால் கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றியதாக இருக்க வேண்டும்.

குடைவரைக்கோயில்:

சிகாநாதர் கோயிலுக்கு மேற்குப் புறமாக மூன்றாம் திருச்சுற்றில், கிழக்கு நோக்கியவாறு குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை "மேலைக்கோயில்' என்றும் அழைப்பர். இக்குடைவரைக் கோயிலில் கருவறை, குடைவரை மண்டபம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. கருவறை வாயிலின் இடப்புறச் சுவரில் வலம்புரி விநாயகரின் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விநாயகர் உருவத்தின் மேலாக உள்ள சுவரில் நீண்ட சதுரமாக இரட்டைக்கோடுகள் போடப்பட்டு அதில் "பரிவாதிநி'' என்று கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இசைக் கல்வெட்டோடு தொடர்பு உடையதால் "பவாதிநி'' என்னும் வீணையைக் குறிக்கிறது என்று கொள்ளப்படும். இக்கல்வெட்டு இந்திய இசை வரலாற்றில் குறிக்கத்தக்க சான்றாக அமைகிறது. இதுபோன்ற கல்வெட்டுத் திருமெய்யம் குடைவரைக்கோயிலிலும் இருக்கிறது.

இசைக் கல்வெட்டு:

குடைவரைக் கோயிலின் தென்பகுதியில் வலம்புரி விநாயகர் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளார். இவ்விநாயகருக்கு இடது புறத்தில் 13' * 14' அடிப் பரப்பளவுடைய பாறையில் இசைக் கல்வெட்டு ஒன்றும் வலது புறத்தில் தமிழ்க் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இடப்புறம் உள்ள இசைக்கல்வெட்டானது "சித்தம் நமச்சிவாய...' எனத் தொடங்கி, "எட்டிற்கும் ஏழிற்கும் உரிய' என முடிகிறது. இவ்விசைக்கல்வெட்டு முதன்முதலாக 1904-ஆம் ஆண்டு திரு. கிருஷ்ணசாஸ்திரி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் ஏழு பகுதிகளை உள்ளடக்கி மிகத் தெளிவுடன் விளங்குகின்றன.

இவ்விசைக் கல்வெட்டை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்மப் பல்லவனால் இயற்றப்பெற்றது என்ற கருத்தை வலியுறுத்தினார்கள். ஆனால் தற்போது பல ஆராய்ச்சியாளர்கள் மகேந்திரவர்மப் பல்லவனால் இயற்றப்பட்டிருக்க முடியாது என்ற கருத்தினை ஆதாரங்களுடன் மறுக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி பாண்டிய மன்னன் ஒருவனால் இயற்றப்பெற்றது என்ற கருத்து வலுத்து வருகிறது. இசைக் கல்வெட்டினைப் பற்றி விரிந்த பரப்பில் ஆராய இடமுள்ளது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தின் இசை நிலையைக் குறித்து நிற்கின்றது என இசை வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும் இக்கல்வெட்டானது, இந்தியாவிலுள்ள இசைகளுக்கெல்லாம் தோற்றுவாயாக அமைகின்றது என்பதனை உணர முடிகிறது. தற்போது இதனைப் பாதுகாக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஒரு மண்டபத்தை எழுப்பியுள்ளனர்.

சௌந்தர நாயகி அம்மன் கோயில்:

தமிழகக் கோயிற்கலை வரலாற்றில் மன்னர்களும், அரசியல் அதிகாகரிளும் மட்டுமே கோயில் எடுத்த பெருமையுடையவர்களாகத் திகழ்ந்தனர். மாறாகப் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள குடுமியான்மலையில் தேவரடியாள் ஒருத்தி, குடுமியான்மலைக் குகைக்கோயிலின் வலது புறத்தில் சௌந்தரநாயகி அம்மன் கோயில் ஒன்றை எடுப்பித்தாள். இவ்வம்மன் கோயில் அர்த்த மண்டபம், முன் மண்டபம் போன்ற அமைப்புடன் எவ்விதக் கலைச்சிறப்புமின்றி மிக எளிமையாகக் காணப்படுகிறது. இக்கோயிலைச் சடையவர்மன் வீரபாண்டியன் ஆண்ட கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இவ்வூர்த் தேவரடியார்களில் ஒருத்தியான துர்க்கையாண்டி மகள் நாச்சி என்பவள் எழுப்பித்துள்ளாள். இதனை, "இக்கோயில் மேற்றளியுடைய மகாதேவர்க்கு இவ்வூர் தேவரடியால் துர்க்கையாண்டி மகள் நாச்சி எழுந்தருளிவித்த திருக்காமக்கோட்டம்'' (பு.கோ.க.366) என்ற கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இப்போது இறைவியின் பெயர் சௌந்தரநாயகி அம்மன் என வழங்கப்பட்ட போதிலும் வீரபாண்டியனின் காலத்தில் "திருக்காமக் கோட்டத்து நாச்சியார் அருவுடை மலைமங்கையார்'' என அம்மனின் பெயர் வழங்கி இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் நிர்வாகத்தினர் சீரமைப்புக்கெனக் கோயில் நிலத்தை விற்க முற்பட்டபோது அப்பெண் 73,300 பொற்காசுகள் கொடுத்து அந்த நிலத்தை வாங்கினாள் என்ற செய்தியும் கல்வெட்டால் (பு.கோ.க.367) அறியப்படுகிறது.

இவ்விரு கல்வெட்டுகளாலும் அன்றைய சமுதாயத்தில் வாழ்ந்த தேவரடியார்கள் அரிய கலைகள் பயின்று, பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிருந்ததோடு இறைப்பணியும் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபத்து மூவர் சிற்பம்:
குடைவரைக் கோயிலின் வடக்கே மேற்புறப் பாறையில், அறுபத்து மூவர் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவர்களின் நடுவே சிவன் பார்வதி இடப வாகனத்தில் காட்சி தருகின்றனர். இதுபோன்ற அமைப்புத் தமிழகத்தில் வேறு எந்தக் கோயில்களிலும் காண இயலாது. மலையின் வடக்கிலும், தெற்கிலுமாக முறையே தம்பி கிணறு, அண்ணன் கிணறு என இரண்டு கிணறுகள் காணப்படுகின்றன. மலையின் பின்பகுதியில் உள்ள சரிவில் மூன்று சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன.
தொல்பொருள் ஆய்வுத்துறையின் பணி:
குடுமியான்மலைத் திருக்கோயில்களை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அதன் பழமை மாறாத வண்ணம் இங்குள்ள பல அரிய கலைச் செல்வங்களைக் காத்து வருகின்றனர். குடுமிநாதர் திருக்கோயிலின் இராசகோபுரம், பிரகாரக் கோபுரம், விமானம், சிதைவடைந்த பகுதிகள் போன்றவற்றைச் சுமார் 8 இலட்ச ரூபாய் செலவில் செப்பனிட்டுப் புதுப்பித்துள்ளனர். இத்திருக்கோயிலுக்கு கி.பி.1872 ஆம் ஆண்டிற்குப் பிறகு 10.2.2000 அன்று குடமுழுக்குவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.