பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் குழந்தை வரம் வேண்டி சோதிடர்களின் ஆலோசனைப்படி இக்கோயிலில்
வந்து வழிபாடு செய்து வருகின்றனர். கோயில் நடை காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணி
வரை திறந்திருக்கும். தினமும் நான்கு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.
குழந்தை வரம் வேண்டிவரும் தம்பதியர்கள் சுத்தமான நெய், எலுமிச்சை, மஞ்சள் (ஏழு உருண்டை),
அருச்சனைப் பொருட்கள் முதலியவற்றை வாங்கிவரவேண்டும். பக்தர்களின் பொருளாதார வசதிக்கேற்ப
புனுகுசட்டம், சாம்பிரானி தைலக்காப்பு போன்ற அபிடேகப் பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.
முதலில் அகிலாண்டேசுவரி அம்மன் சன்னதியின் படியை நெய்யால் மெழுகி பின் கோலமிட்டு முழு
நம்பிக்கையுடன் வழிபடவேண்டும்.
மஞ்சள் உருண்டை அம்மனின் பாதத்தில் வைக்கப்பெற்று பக்தர்களிடமே வழங்கப்படுகிறது. இந்த
மஞ்சள் உருண்டைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று மகப்பேறு வேண்டிய பெண்மணி தினமும் குளிக்கும்போது
உடம்பில் பூசிக்கொள்ளவேண்டும். அம்மனின் அருள் கிடைத்ததின் பயனாக சில பெண்கள் நான்காவது
மஞ்சள் உருண்டை தேய்த்துக் குளிக்கும் காலத்திலேயே தாங்கள் கருவுற்ற செய்தியை கோயிலில்
வந்து சொல்லி விடுகின்றனர். அம்மனின் திருமேனி சுயம்பாகத் தோன்றியதால் அபிடேக ஆராதனை
கிடையாது.
அகிலாண்டேசுவரி அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கலும், அகத்தீசுவரருக்கு வெண் பொங்கலும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
|