இணையத் தமிழ்

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தால் பல புதிய கண்டுபிடிப்புகள், மனித சமுதாயம் மேம்பட முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றன. இந்தப் புதிய கண்டுபிடிப்புகளால் மனிதன் தன் இலக்கை எளிதாக அடைகிறான். மனிதனின் இலக்கை மிகவும் எளிதாக்க இன்று கிடைத்திருக்கும் ஓர் அரிய சாதனம் "இணையம்" (INTERNET) ஆகும். இது ஓர் ஈடு இணையற்ற கண்டுபிடிப்பாகத் திகழ்கிறது. "இணையம்" சிலருக்கு மட்டும் கிட்டும் கனியாக இருந்த நிலை மாறி, இன்று அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் கருவியாகத் திகழ்கிறது. அன்று இமயத்தில் கொடியை நட்டான் தமிழன்; ஆனால் இன்று இணையத்தில் தமிழை வைத்து, அதனை எட்டாத உயரத்திற்கு ஏற்றிவிட்டான். இன்று இணையத்தில் தமிழன் இடத்தை மதிப்பீடு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மேலும் இணையத்தில் தமிழ் வளர மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

இணையம் – விளக்கம்:
இணையம், சமுதாயம், இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு, ஆன்மீகம், பொழுதுபோக்கு, தகவல் தொழில் நுட்பம், இப்படி எந்த விடயத்தைப்பற்றி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானலும் தொடர்பு கொண்டு பெறக்கூடிய வகையில் மனித சமுதாயத்தை இணைக்கும் மாபெரும் பணியைச் செய்து வருகிறது. ஜாதி, மத, இன, மொழி பிரச்சினைகளைக் கடந்து அனைத்துப் பிரிவு மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயல்படுகிறது. விரல் நுனியில் விரியும் விவரக் களஞ்சியமாக இணையம் திகழ்கிறது.
இணையத்தில் தமிழ்:
நாகரிகத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பகுத்து வைத்தனர். மலையும் மலை சார்ந்த இடமும் "குறிஞ்சி" என்றும், காடும் காடு சார்ந்த இடமும் 'முல்லை' என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் "மருதம்" என்றும், கடலும், கடல் சார்ந்த இடமும் "நெய்தல்" என்றும், மணலும், மணல் சார்ந்த இடமும் "பாலை"என்றும் நிலத்தை ஐந்து திணைகளாகப் பிரித்தனர். இயல், இசை நாடகம் என்னும் மூன்று பிரிவுகளாகத் தமிழர் தங்கள் இலக்கியங்களை, கலைகளை, பண்பாட்டை வெளிப்படுத்தினர். இன்று அறிவியல் தமிழ் என்றொரு புதிய துறை உருவாகி வருகிறது. அத்துடன் கணினித் தமிழை, இணையத் தமிழுடன் சேர்ப்பதா? அல்லது 'இணையத்தமிழ்' என்றே புதியதொரு தமிழ் அறிமுகம் செய்வதா? என்பது காலமும், கணினியும் தீர்மானிக்கும் வளர்ச்சி நிலையை எட்டும் நிலைக்குத் தமிழ் வளர்ந்துள்ளது. இணையத் தமிழுக்கு இடமாக விண் இருப்பதால் அதனையும் ஒரு திணையாகக் கணக்கிற் கொண்டு "ஆறாம் திணை" என்றொரு தமிழ் இணையத்தளம் செயல்படும் அளவிற்கு இணையத் தமிழ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று வரும் துறையாக மலர்ந்து வருகிறது. இணையப் பயன்பாட்டில் தமிழகம் இந்தியாவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆங்கில இணைய தளத்திற்கு இணையாகத் தமிழ் இணைய தளங்கள் நாளுக்கு நாள் முளைத்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் துணையாக நிற்கின்றன. இணையத்தில் தமிழை அதிக அளவில் புகுத்துவதை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு, மாவட்ட (சான்று: திருவாரூர் மாவட்டம் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது) நிருவாகத்தையும் இணையத்தில் கொண்டு வந்துள்ளது. தமிழகமெங்கும் உள்ள கிராமப்புற மக்களும் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாநிலம் முழுவதும் 1500 சமுதாய இணைய மையங்களை (Social Internet Center) நிறுவி உள்ளது. இணையத்தில் தமிழ் மொழியின் ஆதிக்கத்தை விளக்கும் முகமாக "தமிழ்நெட் 99" என்ற இணைய மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்மொழி இணையத்தில் இருப்பதோடு மட்டுமின்றி மக்களின் நேரடிப் பயன்பாட்டிற்கும் இணையம் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைப்பது. இதன் விளைவாகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சென்னையில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுச் சிறப்பாக இயங்கி வருகிறது.
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இணையம் வழியாகப் பல்லூடக (Multimedia) முறையில், தமிழ்க்கல்வி அளிப்பதே இப்பல்கலைக்கழகத்தின் தலையாய நோக்கமாகும். இதன் அடுத்த கட்டமாகத் தமிழ் மொழியில் சான்றிதழ், பட்டயம், பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு இணையத்தின் வழியாகவே தேர்வுகள் நடத்தி, பட்டங்கள் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்காகத் தொடக்க நிலையிலிருந்து பாடங்கள் தயாரிக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றன.

தமிழ் நூல்கள் அடங்கிய 'இணைய நூலகம்' (E-Library) ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதில் பாடம் கற்போர் புதிதாகத் தங்கள் பெயரைப் பதிவு செய்து இந்நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும். இணையத்தை மக்கள் பயன்படுத்த மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் 'தமிழ் இணையம் 2000', 'கணினித் தமிழ்ச் சங்கம்' போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 'தமிழ் இணையம் 2000' சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாய்வரங்கில் கலந்து கொண்ட ஆய்வாளர்கள், 60 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். மாநாட்டின் கண்காட்சிப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தமிழ் சார்ந்த கணினி மென்பொருட்கள் (Tamil Softwere), தமிழ் இணையத் தளங்கள் (Tamil Website) இடம் பெற்றன.

மாநாட்டின் முடிவுகள் உடனுக்குடன் உலகளவில் இணையத்தின் மூலம் செயல்படுத்த (INFITT- Indernational fourm for information Technology in Tamil) அமைக்கப்பட்டது. மாநாட்டில் இணைய செயலாக்கங்கள் விரைந்து செயல்படுத்த ஐந்து பன்னாட்டுப் பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தக்கது இரண்டு. அவற்றில் ஒன்று கலைச் சொல்லாக்கம்; மற்றொன்று எழுத்துத்தர மதிப்பீடு. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் தமிழ் இணையம் 2001 மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கலைச் சொல்லாக்கம்:
கணிப்பொறி மற்றும் இணையம் சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க்கலைச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிங்கப்பூர் இணைய மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவைச் செயல்படுத்தும் வகையில் www.tc.words.com என்ற இணைய தளம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் கணிப்பொறியிலும், இணையத்திலும் பயன்படும் முக்கிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இத்தளத்தைப் பார்வை இடுவோர் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் சொல்லைக் குறிப்பதோடு, பட்டியலில் இருக்கும் சொற்களைவிட பொருத்தமானது என்று அவர்கள் கருதும் புதிய சொல்லையும் குறிப்பிடலாம். இந்நிலையில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொள்ளும் தொழில் நுட்பச் சொற்கள் (Technical Words), கொண்ட ஒரு பட்டியல் ஆங்கில அகர வரிசைப்படி தயாரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆறாம் திணை இணையத்தளத்தில் "தமிழ்ச்சொல் அறிவோம்" என்ற பகுதியில் கலைச்சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்று வரும் பணி குறிப்பிடத்தக்கது.

கணினி தமிழ்ச் சங்கம் நடத்தும் கண்காட்சிகளில் சிறந்த தமிழ் விசைப் பலகைகள் (Tamil Keyboards), தமிழ் இணைய தளங்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இதனால் தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்கள் (Fonds), தமிழ் விசைப் பலகைகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் தமிழ் மென்பொருள் நிறுவனங்கள் மேலும் பல புதிய முயற்சிகளில் ஈடுபட ஊக்கமளிக்கிறது. இதனால் தமிழில் தட்டச்சு செய்யும் பொழுது எழுத்துப்பிழைகள் அல்லது ஒற்றுப்பிழைகளைத் தானாகவே திருத்தும் தமிழ் மென்பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் இணையத்தில் தமிழ்மொழி வளர்ச்சி பெற அதிக வாய்ப்புள்ளது.

இணையம் ஓர் ஆவணக் காப்பகம்:
இணையத்தில் உள்ள அனைத்துத் தகவல்களும் இரண்டு வகைக் கோப்பகங்களாகவே (HTML,ASP) வடிவமைக்கப்படு கின்றன. இதனால் நமக்கு வேண்டிய தகவல்களை உலகின் எந்த மூலையில் இருந்தும், எந்த நேரத்திலும் தெரிந்து கொள்ள முடிகிறது. இன்று அனைத்து நாளிதழ்களும் இணைய இதழ்களாகவும் செயல்பட்டு வருகின்றன. எனவே, குறிப்பிட்ட நாளில் வெளிவந்த ஒரு செய்தியை அல்லது தகவலைப் பெற பழைய நாளிழ்களைத் தேடிச்செல்ல வேண்டாம். இதனால் வேலைப்பளு அதிகரிப்பதும், நேரம் வீணாவதுமே மிச்சம். ஆனால் நாம் அந்த இணையத் தளத்திற்குச் சென்று குறிப்பிட்ட நாளில் வந்த அந்தச் செய்தியையோ (அ) தகவலையோ இருந்த இடத்திலிருந்தே பெற முடியும். இதனால் வேலைப்பளுவும், கால விரையமும் குறைகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. எனவே, இன்று இணையத்தில் பதியும் செய்திகள் அனைத்தும் நாளைய வரலாறாகவும், ஆவணமாகவும் மாறுகிறது. மேலும் நாம் வைத்திருக்கும் ஆவணங்களின் ஆயுட்காலம் குறைவு. அவை எளிதில் சேதமடைய வாய்ப்புள்ளது. ஆனால் இணையத்தில் உள்ள ஆவணங்கள் (Archiv's) நீண்ட காலம் நிலைத்து நிற்கும் இயல்புடையன. இணையத்தின் இந்த வசதியை நன்கு உணர்ந்த சிகாகோ பல்கலைக்கழகம், கோட்டையூரில் வாழ்ந்த ரோஜா முத்தையா அவர்கள், தம் வாழ்நாளில் சேகரித்த பல அரிய நூல்கள் அடங்கிய (இலட்சத்திற்கும் மேல்) நூலகத்தை வாங்கி, அதிலுள்ள நூல்கள் அனைத்தையும் நுண்படமாக (Microfilim) மாற்றி அதனை அனைவரும் பார்த்துப் பயனடையும் வகையில் முதன் முதலாக 'நடமாடும் நூலகமாக' (Mobile Library) அமைத்தனர். இதன் பயனாக இன்று நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள எந்த நூல்களின் விவரங்களையும் http://www.lib.unchiago.edu/e/su/southasia/rmrl.html என்ற முகவரியில் சென்று, பார்த்துப் பயன்பெற முடியும். இங்கு நூல்களும், ஆவணங்களும் நவீன? அறிவியல் முறைப்படி ஆவணக்காப்பு நுண்படமாக (னிஷ்உrலிக்ஷூஷ்யிது) எடுக்கப்பட்டு அதனைக் குறுந்தட்டு (ளீலிதுஸ்ரீழிஉமி ம்ஷ்விவ) வடிவிலும் வெளியிட்டுப் பாதுகாத்து வருகின்றனர்.

இதைத்தவிர இன்தாம் (www.intamm.com) இணைய தளத்தில், தமிழ் நூல்கள் வெளியிட்ட பதிப்பகங்களின் அகர வரிசையில் அவை வெளியிட்டுள்ள நூல்களையும் தமிழிலேயே தேடும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இதில் பதிப்பகத்தின் முகவரியும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடப்பட்டுள்ளதால் அவற்றுடன் தொடர்பு கொண்டு நமக்கு வேண்டிய நூல்களை வாங்கிப் பயன்பெறலாம்.

பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வேட்டை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் பல புகழ்பெற்ற நாவல்கள் இணையத்தில் பணம் செலுத்திப் படிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நமக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தும் இணையத்தில் 'நடப்பில்' (online) இருப்பதால் எந்த நேரத்திலும் அதனைப் பார்த்துப் பயன்பெற முடிகிறது.

ஆய்வு மூலங்களின் இருப்பிடம் இணையம்:
இணையம் ஆய்வாளர்களுக்கு வேண்டிய செய்திகளை அள்ளித்தரும் பெட்டகமாகத் திகழ்கிறது. ஓர் ஆய்வாளருக்குத் தேவையான தகவல்களை இணையத்தில் உள்ள தேடுபொறிகளில் (Search engine) மூலம் பெறலாம். நமக்குத் தேவையான சரியான, முறையான தகவல்களைப்பெற முதன்மைச் சொற்களை உள்ளிடுவதன் வாயிலாக நமக்குத் தேவையான தகவல் தளங்களின் இணைப்புப்பக்கங்கள் (Link pages) பட்டியலில் இடம் பெறும். அவற்றை ஒவ்வொன்றாகச் சென்று நமக்குத் தேவையான செய்திகளையும், தரவுகளையும் பெற்றுக் கொள்ளலாம். தேடும்பொறிகள் வையவிரிவு வலையில் (Wold Wide Web) உள்ள எல்லாத் தளங்களையும் வருடிப் (Scan) பார்த்து நுண்ணாய்வு செய்யும் திறன் வாய்ந்தவை. நாம் தரும் முதன்மைச் சொல்லின் வாயிலாக நமக்குத் தேவையான தகவல்களைப் பட்டியலிடும் கணினி நிரல்களின் (Programes) அடிப்படையில் செயல்படும். பெரும்பாலும் எல்லா வலை தளங்களும் பதிவு செய்யப் பட்டுள்ளதால் பொருளற்ற, தாறுமாறான கூளத்தளங்களைப் பட்டியலில் இடம் பெறுவது தவிர்க்கப்படுகிறது

கூகூல் (www.google.com), லைகாஸ் (www.lycos.com), எக்சைட் (www.excite.com), சிஃபி (www.sify.com), ஆல்டா விஸ்ட்டா (www.altavista.com) இந்தியா இன்போ (indiainfo.com) எம்.எஸ்.என். (msn.com) ஆகியன தேடும் பொறிகளுக்கான சிறந்த தளங்களாகும்.

நமக்கு எந்தக் குறிப்பு (அ) தகவல் தேவை என்பதை உறுதி செய்து கொண்டு அதற்கேற்ப முதன்மைச் சொற்களை வழங்கினால் தேவையான தகவல்களை விரைந்து பெற முடியும். மேலும் சிறப்பாகத் தகவல்களைத் தேடுவதற்கு நேர்த்தியான, நுட்பமான வழிமுறையாக விளங்குவது பூலியன் (Bolean) சொற்களான and, or, not, near போன்றவற்றைப் பயன்படுத்துவதாகும். தமிழில் 'இலக்கியக் கொள்கைகள்' பற்றி இணையத்தில் தேட விரும்பினால், தேடுதல் பொறியில் சென்று 'Tamil Literary Theories' என்று முதன்மைச் சொல்லை உள்ளீடு செய்தால் மேற்கூறிய இரு சொற்கள் எங்கெங்கு உள்ளனவோ அவைபற்றிய விவரங்கள் எல்லாம் நம் பார்வைக்குப் பட்டியலாக வரும். அவற்றுள் தேவையான வற்றையும், சரியானவற்றையும் சலித்து எடுக்க வேண்டும். இது கூழாங்கற்களிடையே ஓரிரண்டு வைரக் கல்லைத் தேர்ந்தெடுப்பதற்குச் சமமாகும். ஒரே முதன்மைச் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தேடும் பொறிகளில் வலைப் பக்கங்களைக் கொணர்ந்து, தகுதியானதைப் பார்வையிடுவதே சிறந்த பலனை அளிக்கும். கூகூல் நிறுவனம் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழியிலேயே தேடுபொறிகளை நிறுவியுள்ளன.

தமிழ் மின் இதழ்கள்:
தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழ் மின் இதழ்களின் பங்கு அளப்பெரிது. தமிழ் மொழியிலேயே இன்று பல இணைய தளங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஆறாம் திணை, இன்தாம், தமிழ், நெட்ஜால், வெப் உலகம், தமிழ் நெட் போன்ற தமிழ் மின் இதழ்கள் குறிப்பிடத்தக்கன. தமிழ் இணையத்தை ஆறாம் திணையாகக் கருதி செயல்பட்டு வரும் ஆறாம் திணை இணையத்தளம், சிறப்புப் பார்வை, சமயம், கவிதை, சிறுகதை, குழந்தை இலக்கியம், கல்வி, புதுவரவு (நூல்கள்), விடுகதை, பழமொழி, தமிழ் அறிவோம், சொல்லாட்டம், நேர்காணல், வெண்பா மேடை, சென்னைச் சுவடுகள், குறுந்தொடர், சிற்றிதழ் பக்கம், தலையங்கம் என தமிழின் அனைத்து இலக்கிய வகைகளைச் சிறப்பாக வெளியிட்டு வருகின்றது. இளம் கவிஞர்கள், எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற தரம் வாய்ந்த படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறது. வெண்பா மேடைப் பகுதியில், வெண்பாவின் ஈற்று சொல்லைக் கொடுத்து இளம் கவிதையாளர்களை உருவாக்குதல், சுவடுகள் பகுதியில் தரம் வாய்ந்த இலக்கிய மின் இதழ்கள் பற்றிய விபரங்களைத் தருதல், சிறப்புக் கட்டுரைகள், தலையங்கம் பகுதியில் இலக்கியம், அரசியல், சமயம், தொடர்பான செய்திகளையும் ஆறாம் திணை இலக்கிய மின் இதழ் தருகிறது. இப்பகுதியில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் எழுதிய படைப்புக்களும் இடம் பெறுகின்றன. ஆனால் தற்போது புதிய பொலிவுடன் சமூக வரலாறு, கலை, இலக்கியம், மொழி, சினிமா, தோழி போன்ற பிரிவுகளின் கீழ் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இலக்கியம் பகுதியில் வாய்மொழி இலக்கியம், சிறுகதை, நூல் விமர்சனம் போன்ற பகுதிகள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாகத் திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாகவே பல தமிழ் இணையத்தளங்களும் செய்திகள், ஆன்மீகம், வேலைவாய்ப்பு, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா, வரலாறு, ஜோதிடம், மகளிர் பக்கம், கோயில்கள், பண்டிகைகள் போன்ற பிரிவுகளில் பல முக்கியமான தகவல்களைத் தருகின்றன.

மின் மடல்கள்:
இணையத்தில் வலம் வர மொழி ஒரு தடையாகவே உள்ளது உண்மைதான். நம் தகவல்களை நம் தாய் மொழிகளில் பரிமாறிக் கொள்ள ஓர் இணையத் தளத்தில் சென்று மின் அஞ்சல் செய்வதற்கு, அதில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியைப்பெற முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்பு நம் நண்பர்களுக்கு நாம் வரையும் மடல்களைத் தமிழிலேயே அஞ்சல் செய்ய முடியும். தற்போது பல முன்னணி இணைய தளங்கள் தமிழில் மின் அஞ்சல் செய்யும் வசதியைச் செய்துள்ளது. இவ்வசதியை இபத்ரா, மெயில்ஜால், ரிடிஃப், லங்கூ, ஜக்ரான், அம்பலம், தமிழ் ஈழம் போன்ற இணையத் தளங்களில் சென்று தமிழில் தட்டச்சு செய்து நம் மடல்களை அனுப்ப முடியும். இதற்காக எழுத்துரு (Fonts) உதவிப் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. சான்றாக 'VANAKKAM' என்ற ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சு செய்தால் தமிழில் அழகாக 'வணக்கம்' என்ற சொல் வந்துவிடுகிறது. இதற்காக முரசு அஞ்சல் 2000, போன்ற எழுத்துருக்கள் கொண்ட தமிழ் மென் பொருட்கள் உள்ளன. இவற்றை நமது கணினியில் பதிவிறக்கம் (Download) செய்து கொண்டு, பெரிய கோப்புகளாகவும் நமது மடல்களை மின்னஞ்சல் செய்யமுடியும். மின்னஞ்சல் மூலமாகப் புகைப்படங்கள், கோப்பகங்கள், வாழ்த்து அட்டைகள், கட்டுரைகள் போன்றவற்றைப் பின் இணைப்புகளாகப் பொருத்தி (Attachments) அனுப்பமுடியும். புகைப்படங்கள் (Photos), அழைப்பிதழ்கள் (Invitations) போன்றவற்றை வருடி (Scan), அவற்றை கோப்புகளாக மாற்றி மின்னஞ்சலில் இணைத்து அனுப்பலாம் (எ.கா.) வெளிநாட்டில் இருக்கும் நம் உறவினருக்கு நம் வீட்டில் விரைவில் நடக்கவிருக்கும் விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அனுப்பினால் கிடைப்பதற்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும். ஆனால் இணையத்தின் வழியாக அவ்வழைப்பிதழை மின்னஞ்சல் செய்வதால், அவர் அடுத்த நிமிடமே அதைப் பற்றித் தெரிந்து கொள்ளமுடிகிறது.
வாழ்த்து அட்டைகள்:
இணையத்தின் வழியாக நமது நண்பர்களுக்குப் பண்டிகைகள், பிறந்தநாள் வாழ்த்துகள் போன்றவற்றை மின் அஞ்சல் மூலமாகவே அனுப்பமுடிகிறது. பலவிதமான வண்ணங்கள் அடங்கிய மின்னும் வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். நாம் அனுப்பும் வாழ்த்து அட்டைகளில் நமது தாய் மொழியிலேயே வாழ்த்து வாசகங்களைத் தட்டச்சு செய்து,அதனை இசையுடன் கூடிய சங்கேத ஒலிகளுடன் இணைந்த வாழ்த்தாகவும் அனுப்ப இயலும். இதனால் நாம் இருந்த இடத்திலிருந்தே பலவண்ண ஒளிரும் (Flash) வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுத்து, இசையுடன் சேர்த்துக் குறிப்பிட்ட நாளில் அனுப்ப முடிகிறது. ஒரு நண்பரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்ப எண்ணி, அன்றாட அலுவல்களின் காரணமாக அதனை அனுப்ப மறந்துவிடுகிறோம். ஆனால் இணையத்தின் வழி மின் அஞ்சல் மூலமாக நாம் வாழ்த்து அனுப்பும் தேதியை முன்னரே குறிப்பிட்டு, அஞ்சல் செய்தால் அது அந்த நாளிலேயே கிடைத்துவிடும். இந்த சேவைகளைத் தமிழில் நெட்ஜால், குமுதம், வைப் உலகம், இன்தாம் போன்ற இணைய தளங்கள் தருகின்றன.
உடனுக்குடன்...
பல்வேறு தமிழ் இணைய நாளிதழ்களும், இணைய இதழ்களும் செய்திகளை உடனுக்குடன் (Flash News) என்ற தலைப்பில் தருகிறது. உடனுக்குடன் நமது தகவல்களைப் பிறருடன் பரிமாறிக் கொள்ள இணையத்தில் 'Messengers' பயன்படுகின்றது. நாம் ஒரு விடயம் தொடர்பாக நண்பர்களுடன் பேச தொலைபேசி பயன்படுகிறது. ஆனால் தொலைதூரங்களில் உள்ளவர்களிடம் (வெளிநாடுகளில்) தொலைபேசி மூலம் பேசுவதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு செலவாகிறது. ஆனால் இணையத்தின் மூலம் கலந்துரையாடல் (Chatting) முறையில் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதால் செலவு பன்மடங்கு குறைகிறது. இச்சேவையைப்பெற குறிப்பிட்ட இணைய தளத்தில் மின்னஞ்சல் முகவரியை இருவரும் பெற்றிருக்க வேண்டும். இருவருமே இணையத்தில் நடப்பில் (Online) இருந்தால் மட்டுமே இச்சேவையைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் யாஹூ (Yahoo Messenger) எம்.எஸ்.என். (MSN Messenger) ஜீ டால்க் (G Talk) போன்ற முன்னணி இணைய தளங்கள் இச்சேவையைச் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றன.
பிற சேவைகள்:
இணையத்தில் 'வாக்காளர் பட்டியல்' வெளியிடப் படுவதால் குடிமக்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ள இணையம் மிகவும் பயன்படுகிறது. புதுடெல்லியில் முதன் முதலாக வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது. படிப்படியாகப் பிறமாநிலங்களிலும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்ற வழக்கு மாறி தற்போது இணையத்தில் நிச்சயிக்கப்படுகின்றன எனும் அளவிற்கு இணையத்தில் வரன்களை அறிமுகப்படுத்தும் மணமேடைப்பகுதி உள்ளது. இதில் மணமகன், மணமகள் பற்றிய விவரங்களும், புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. தேவையானவர்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்ய உதவியாக இருக்கிறது. இதில் மணமகன் அல்லது மணமகள் குறித்த விவரங்கள் மேலும் அறிய அவர்களது விருப்பம் கேட்ட பின்னரே தரப்படுகிறது. இதனால் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படுகின்றன.

மாணவர்கள், தேர்வு முடிவுகளை விரைவில் தெரிந்து கொள்ளவும் இணையம் பயன்படுகிறது. இதனால் மாணவர்கள் விரைவாகத் தங்களது தேர்வு முடிவுகளையும், மதிப்பெண்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.

சில சிக்கல்களும், தீர்வுகளும்:

  1. ஒவ்வொரு தமிழ் இணைய தளங்களும் ஒவ்வொரு விதமான எழுதுத்துருக்களைக் கொண்டு வடிவமைக்கப் படுவதால் அத்தளங்கள் திரைக்கு வரும்போது காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் எழுத்துக்கள் தாறுமாறாக (Junk) வருகின்றன. இதனால் பயனாளியின் நேரமும், பணமும் வீணாகிறது. இதனைத் தவிர்க்க எளிதில் பதிவிறக்கம் செய்யக்கூடிய எழுத்துருக்கள் அல்லது தானாகவே பதிவிறக்கம் செய்யும் வகையில் (Auto Program) அமைப்பதால் திரையில் விரைவாகவும், சரியாகவும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

  2. பல தமிழ் இணையதளங்களின் பகுதிகள் பெரும்பாலும் அவ்வப்போது புதுப்பிக்கப் படுவதில்லை. இதனால் பயனாளியைச் (User) சலிப்படையச் செய்கிறது. குறைந்தது மாதத்திற்கு இருமுறையாவது தளங்களில் உள்ள தகவல்களைப் புதுப்பிப்பதால், தளங்களைப் பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

  3. தகவல்களை முந்தித்தருவதை நோக்கமாகக் கொண்ட பெரும்பாலான இணையதளங்கள் அச்சுப்பிழையுடன் தகவல்களை வெளியிடுகின்றன. இதனைத் தவிர்க்க சாதாரண இதழ்களில் பிழை திருத்துவோரைக் கொண்டு பிழை திருத்தி வெளியிடுவது போன்று இணையத்திலும் தனியாகப் பிழைகளைத் திருத்தும் பணியாளர்களை நியமித்து பிழையின்றி இணையத்தில் செலுத்தினால் (Lanch) சிறப்பாக இருக்கும்.

  4. இணையத்தில் நாம் பயன்படுத்திய மின் அஞ்சல்களைப் பிறர் பார்த்து அதனைத் தவறாகப் பயன்படுத்தவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அதைத் தடுக்கும் வகையில் பல புதிய மென்பொருட்களைப் பயன்படுத்தி அதைத் தடுக்க முடியும்.

  5. இணையத்திற்காக ஒருவர் எழுதி அனுப்பும் படைப்புகளைப் பிறர் பெயரில் வெளியிட்டு விடுகின்றனர். இதனைத் தடுக்க இணையத்தில் சட்டம் இல்லை. எனவே இதுபோன்ற தவறுகளைத் தடுக்க போதிய சட்டம் விரைவில் கொண்டு வரவேண்டும். தகவல்களை நம்பகத் தன்மையுடன் வெளியிட அனைத்துத் தமிழ் இணைய தளங்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இணையத்தில் தமிழ் மென்மேலும் வளர மேற்கூறிய முயற்சிகள் விரைவாக நடைபெற்றால் தமிழ் இணையத்தில் வெற்றிக்கொடி கட்டும் என்பதில் ஐயமில்லை.