தமிழில் மின்புத்தகம் தயாரிப்பதில் ஏற்படும் சிக்கல்களும், தீர்வுகளும்

'புத்தகங்கள் இல்லாத இல்லம் சன்னல்கள் இல்லாத வீட்டைப்போன்றது' என்பது ஆங்கிலத்தில் புகழ்பெற்ற பழமொழி. இன்று கணினி இல்லாத இல்லம் விளக்கில்லாத வீட்டைப் போன்றது எனலாம். அந்த அளவிற்கு வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி மிக இன்றியமையாத கருவியாக மாறிவருகிறது. தமிழன் பழங்காலத்தில் இமய மலையில் கொடியை நட்டான். ஆனால் இன்று கணினியுடன் நெருங்கிய தொடர்புடைய இணையத்தில் தமிழைப்புகுத்தி அதனை எட்டாத உயரத்தில் ஏற்றிவிட்டான். இணையப் பயன்பாட்டில் தமிழ்மொழி இரண்டாவது இடத்தைப் பெற்று வளர்ந்து வருகிறது. ஆங்கில மொழி இணையதளங்களுக்கு இணையாகத் தமிழ்மொழி இணைய தளங்களும் நாளுக்குநாள் தோன்றி தழைத்து வளர்ந்து வருகின்றன. நான் எழுதி 'முதல்வன்' என்ற நூலை மின்நூலாக மாற்றும் பொழுது ஏற்பட்ட இடர்பாடுகளையும், அதற்கான தீர்வுகளையும் மையமிட்டு இக்கட்டுரையை அமைத்துள்ளேன்.

முதல்வன் உறந்தை தமிழ் வளம் உள்வழி
மின்புத்தகங்கள்

நாம் இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள் தாளில் அச்சிட்டு, கட்டுமானம் (Binding) செய்து தயாரிக்கப் பட்டு வருகின்றன. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்திகளைக் கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் வெளியிடுவதே'மின் புத்தகங்கள்' (E-Book) என்று அழைக்கப்படுகின்றன. இதனைப் பதிவிறக்கம் (Download) செய்து குறுந்தட்டு (Compact Disk) வடிவில் சேமித்து வைப்பதையும் மின்புத்தகங்கள் என அழைக்கப்படுகின்றன.

மின்நூல்கள் தயாரிப்பது எப்படி?
நாம் வெளியிட விரும்பும் ஆழ்ந்த, உட்பொதிந்த கருத்துக்கள் அடங்கிய பொருட்கூறுகளை (அ) பகுதிகளைக் (Contant) கணினி தமிழ் எழுத்துருக்களைப் (Tamil Font) பயன்படுத்தி தட்டச்சு செய்து கொள்ள வேண்டும். தட்டச்சு செய்து கொண்ட பகுதிகளை (Documant) ஒரு கோப்பாகச் (File) சேமித்து வைக்க வேண்டும். நாம் தட்டச்சு செய்து கொண்ட கோப்பு எந்த மென்பொருளைப் பயன்படுத்தித் தயார் செய்தோமோ அந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் பயன்படுத்தும் வகையில் HTML (or) ASP, JSP, PHP கோப்புகளாகப் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும். இணையத்தில் உள்ள அனைத்துத் தகவல்களும் இரண்டு வகைக் கோப்பகங்களாகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவை, 1. HTML 2. ASP முதலில் குறிப்பிட்ட வகை கோப்பு நாம் எவ்வாறு தயார் செய்து ஏற்றுமதி செய்தோமோ அவ்வாறே இணையத்தில் ஏற்றுமதி செய்யமுடியும். இரண்டாவதாக குறிப்பிடும் முறை, நாம் தயார் செய்து ஏற்றுமதி செய்த கோப்புகள் இணையத்தின் சேமிப்புக் கிடங்கில் (Server) சென்று தேங்கிக் கிடக்கும். பிறகு நாம் அந்தக் கோப்பை பயன்படுத்த முயற்சிக்கும்போது சேமிப்புக் கிடங்கில் உள்ள அந்தக் குறிப்பிட்ட கோப்பு செயல்படும் பக்கங்களாக (Active Page) மாறி கண்முன்னே தோன்றும். ஒவ்வொரு நாளும் ஏற்றுமதி செய்யப்படும் கோப்புகள் இணை சேமிப்புக் கிடங்கில் ஆவணமாக (Archives) பாதுகாக்கப்படும். இவ்வாறு வெளியிடப்படும் மின் புத்தகங்களை இணையத்தின் உதவியோடு மென்தட்டுகள் (CD) மூலம் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்த முடியும். இவ்வாறு இணையத்தில் நமது நூல்களை வெளியிட்ட பிறகும் இணைய சேமிப்புக் கிடங்கை முறையாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இணைப் பக்கத்திற்கு ஒதுக்கிய இடத்தை (Web Space (Or) Web Server Space) ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் வெளியிட்ட மின் புத்தகங்கள் காலாவதியாகிவிடும்.
சிக்கல்களும், தீர்வுகளும்

இணையப்பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள தமிழ்மொழியில் பல்வேறு வகையான எழுத்துருக்கள் (Font) உள்ளன. ஒவ்வொரு இணையதளமும் ஒவ்வொரு தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு அமைந்துள்ளது. எனவே, நாம் வெளியிடும் இணைய தளத்தில் உள்ள எழுத்துருக்களைக் கொண்டே நமது நூல் உள்ளடக்கங்களைக் கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். இல்லையேல் நமது நூற்பகுதிகள் இணையப்பக்கத்தில் தாறுமாறாக (Junk) தெரியும். ஆங்கில மொழியில் இந்தச் சிக்கல் இல்லை. எந்தவகை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு மின்நூல் தயாரித்தாலும் அவை இணைப் பக்கங்களாக ஏற்றுமதி செய்யும் பொழுது தெளிவாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் ஆங்கில மொழியில் அமைந்த விசைப்பலகைகள் (English Key Boards) ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டவை. எனவே, ஒவ்வொரு வகை ஆங்கில எழுத்துருக்களும் மற்ற வகை ஆங்கில எழுத்துருக்களுடன் இயைந்து கொள்ளும் வகையில் ஒன்றை ஒன்று சார்ந்தும், ஒன்றையயான்று துணை செய்வதுமாக (Supporting) வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியின் எழுத்துருக்கள் பலவிதமான விசைப்பலகைகள் கொண்டு வடிவமைக்கப்படுவதால் தமிழில் மின்நூல்கள் தயாரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கோப்புகளாக உள்ள தகவல்களை மின்நூல்களாக மாற்றுவதற்குப் பல்வேறு மென்பொருட்கள் பயன்படுகின்றன. அவற்றில் சில 1. Internet Explorer – Browser Tool, 2. Acrobat Reader (PDF). 3. Xml. 4. Flash.

Explorer என்ற மென்பொருளைப் பயன்படுத்தி தமிழ் மின்நூல்கள் தயாரிக்கும் சில இடர்பாடுகள் தோன்றுகின்றன. தட்டச்சு செய்து சேமித்து வைத்த கோப்பை HTML கோப்புகளாக மாற்றி Explorer -ல் வெளியிடும்போது தமிழ் எழுத்துக்கள் சில தவறி (Miss) விடுகின்றன. இதனால் இந்த வகை மென்பொருளைப் பயன்படுத்தி முழுமையாக ஒரு மின் புத்தகத்தை உருவாக்க முடியாது. இந்த முறையில் அமைந்த இணையபக்கம் www.ariyakudithenthiruppathi.com என்பதாகும். இந்த இணையபக்கம் IDS என்ற தமிழ் எழுத்துருவைக் கொண்டு உருவாக்கப்பட்டது. எனினும் இந்த இணைய பக்கத்தில் உள்ள அனைத்துத் தகவல் பகுதிகளிலும் ‘ல்’ என்ற எழுத்து மட்டும் மறைந்து காணப்படும். இதனால் மின்புத்தகம் தவறான செய்திகளை உள்ளடக்கியதாக மாறிவிடுகிறது. ஆனால் தற்போது இந்த இணையதளம் திருத்தி அமைக்கப்பட்டுவிட்டது. இந்தச் சிக்களைத் தீர்க்க நாம் தட்டச்சு செய்யும் தமிழ் எழுத்துருவைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து மூலப்பிரதியை (Original Copy) வாங்கி உபயோகிப்பதன் மூலம் எழுத்துக்கள் தவறவிடுவதைத் தவிர்க்க முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்துத் தமிழ் எழுத்துருக்களும் திருட்டுமுறையில் பதிவு செய்த (Bywrited CD) மென்பொருட்களாகவே உள்ளன. இதனால் சில கோப்புகள் (.ef), (.edf) முழுமையாக பதிவு செய்யப்படுவதில்லை. எனவே மூல மென்பொருளை மட்டும் பயன்படுத்தி முழுமையான மின் புத்தகத்தை உருவாக்க முடியும். இருப்பினும் மூல எழுத்துருக்களை வாங்க அதிகப்பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இரண்டாவது மென்பொருளான ‘PDF-ஐ பயன்படுத்தி மின் புத்தகம் தயாரிக்க முடியும். இந்த முறையில் உருவாக்கப்படும் மின் புத்தகங்கள் அதிக இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதால் இவ்வகை மின்புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயனாளிகள் சலிப்படைந்து விடுகின்றனர். மேலும் இவ்வகையில் தயாரிக்கப்படும் மின்புத்தகத்தில் இயங்கும் புகைப்படங்களையோ, பக்கங்களையோ (Animation Photos& Pages) சேர்த்து வெளியிட முடியாது. நாம் தட்டச்சு செய்யும் பகுதிகள் படமாக (Images) மாற்றப்படுவதால் இந்த வகை மின்புத்தகங்கள் அதிக இடத்தைப் பிடிக்கிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் மின் புத்தகங்களிலும் சில தமிழ் எழுத்துக்கள் மட்டும் தோன்றுவதில்லை. இம்முறையில் தயாரிக்கப்பட்ட மின்நூல்களை Printout எடுத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் அமைந்தஇணைதளம் www.omshakthionline.com ஆகும்.

மூன்றாவது மென்பொருளான XTML-ஐ பயன்படுத்தி ஆங்கிலத்தில் உள்ள பகுதிகளை எளிதில் மின்நூலாக ஏற்றுமதி செய்ய முடியும். தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு முழுமையாக மின்நூல்களைத் தயாரிக்க இயலாது.

Flash என்ற மென்பொருளைப் பயன்படுத்தி தமிழ்மொழியில் அமைந்த எந்த ஒரு கோப்பையும் மின் நூலாக எளிதில் மாற்ற முடியும். இந்த வகையில் தமிழ்மொழியில் வெளிவந்த முதல் மின்நூல் முதல்வன் என்ற பெருமையை பெறுகிறது. மிகவும் எளிமையான முறையில், Flash என்ற வகை மென்பொருளில் அமைந்த மின்நூலைப் படிக்கமுடியும். இந்த நூல் ஓர் இணையதளம் போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகை தமிழ் எழுத்துருக்களைக் கொண்டமைந்த ஒரு கோப்பையும் மின்நூலாக மாற்ற இந்த வகை மென்பொருள் பெரிதும் துணையாக அமைகிறது. இதன் மூலம் 1000 பக்கங்கள் கொண்ட தகவல்கள் அடங்கிய நூலை Flash என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கையடக்க வடிவில் அமைந்த குறுந்தட்டில் பதிவு செய்து பயன்படுத்த முடியும். பல ஒளிரும், இயங்கும் வண்ணப் புகைப்படங்களைச் சேர்த்து மின் புத்தகத்தை உருவாக்க முடியும்.

மின்நூல்களின் பயன்பாடுகள்

அதிகப் பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளைக் கையடக்க வடிவில் சுருக்கிவிட முடியும். எளிதில் எங்கும் எடுத்துச்சென்று பயன்படுத்த முடியும். கட்டுமான நூல்களில் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அதிகப் பக்கங்களை இணைக்க முடியாது. ஏனெனில் அதிக பொருட்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின்நூல்களில் அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களை இணைத்து வெளியிடமுடியும். மின்நூல்களில் உள்ள பக்கங்களைத் தேவைக்கு ஏற்ப பெரிதாக்கி அதனைப் பயன்படுத்த முடியும். ஆனால் சாராதண நூல்களை இவ்வாறு பயன்படுத்த முடியாது.

எந்த நேரத்திலும் நமக்குத் தேவையான பகுதிகளை இணையத்தில் தேடுபொறிகளைக் கொண்டு எளிதாகத் தேடிப் பார்த்துப் பயன்படுத்த முடியும். இருந்த இடத்தில் இருந்தே நமக்குத் தேவையான மின்நூல்களை மின்வணிகம் (E-Commerce) மூலம் வாங்கிப் பயன்படுத்த முடியும்.

சாதாரண நூல்கள் அச்சுப் பிரதிகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் நூல்களைத் தேவையான நேரங்களில் உடனே பதிவு செய்ய (Write) முடியும். மின்நூல்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்த முடியும். சாதாரண நூல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிதைந்து விடுகின்றன. ஆனால் மின்நூல்களின் ஆயுள் காலம் பன்மடங்கு நீடிக்கக்கூடியது.

தமிழில் அதிக அளவில் மின்நூல்கள் வெளிவருவதற்குத் தரப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொதுமைப்படுத்தி அதிகப் பயன்பாடுகளுடன் தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.