திருப்பம் தரும் தென்திருப்பதி!
திருப்பதி சென்றுவந்தால் திருப்பங்கள் நேரும்'' என்பது முதுமொழி. ஆனால் நாம் இன்று நினைத்தவுடன் சென்று திருப்பதி திருவேங்கடமுடையானைத் தரிசிப்பது கொடுத்து வைத்தவர்களுக்குத்தான் கிடைக்கும். நாம் அனைவரும் எளிதில் சென்று தசிக்கும் வகையில் திருப்பதி திருவேங்கடமுடையான் தென் திருப்பதியாம் அரியக்குடியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்
அமைவிடம்:
அரியக்குடி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் காரைக்குடியிலிருந்து தென்கிழக்கே ஐந்து கி.மீ. தொலைவிலும், காரைக்குடி புகைவண்டி நிலையச் சந்திப்பிலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. செட்டிநாட்டுப் பகுதியில் நகரத்தார்கள் வாழும் 96 ஊர்களில் அரியக்குடியும் ஒன்று; இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கீத மேதையான அரியக்குடி இராமானுச அய்யங்கார் இத்திருத்தலத்திலே அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அரியக்குடி எனப் பெயர்பெற்று விளங்கும் இவ்வூர் "தென்திருப்பதி' என்றும் அழைக்கப்படுகிறது. அரி என்னும் பெயர்கொண்ட திருவேங்கடமுடையான் துளப ரூபத்தில் திருவடிகள் மூலமாகக் குடிகொண்டமையால் இந்த ஊர் அரியக்குடியாயிற்று. தன் அரிய பக்தனுக்காக (சேவுகன் செட்டியார்) அரி அருளிய கோயிற்குடி அயக்குடி ஆகும்.

அரியக்குடியில் திருவேங்கடமுடையான் தானே உவந்து வந்து எழுந்து அருளியதாலும், அவருடன் தென் திசையில் திருமலையில் (திருப்பதி) உள்ளதுபோல் அலர்மேல் மங்கைத் தாயார் சன்னதி கொண்டிருப்பதாலும் தென் திருப்பதி என வழங்கப்படுகிறது. தென்திருப்பதி என்பது அரியக்குடியை மட்டுமே குறிக்கும். திருப்பதிக்குச் சென்று காணிக்கை செலுத்த இயலாத பக்தர்கள் இத்திருத்தலத்தில் வந்து திருவேங்கடமுடையானைத் தரிசித்துக் காணிக்கை செலுத்துவர்; இங்கு வந்து முடியெடுத்துக் காணிக்கை செலுத்துவர்.

தல வரலாறு:

நகரத்தார் மரபில் தோன்றிய சேவுகன் செட்டியார் அவர்கள் திருப்பதி மலைவாழும் சீனிவாசப் பெருமானை வணங்கித் தியானம் செய்து வந்தார். அவர் தியானத்தில் இருக்கும்போது அவர் மீது நாகங்கள் நர்த்தனமிடும் காட்சியைக் காணப் பக்தர்கள் திரளுவர். சேவுகன் செட்டியார் அவர்கள், நோய் நீக்கி, மக்கள் நலம் பெற அருள் வாக்குச் சொல்லி வந்தார். அவர் சொன்னது சொன்னபடி நடந்தது. இதனால் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளையும், தன் வருவாயில் பெரும் பகுதியையும் உண்டியலில் சேமித்து வைத்து ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோண தினத்தன்று அரியக்குடியில் இருந்து திருப்பதிக்குப் பாதயாத்திரையாகச் சென்று திருவேங்கடமுடையானுக்குக் காணிக்கை செலுத்தி வணங்கி வந்தார். வயதான காலத்திலும் இப்பணியைத் தொடர்ந்து செய்தார். ஒரு சமயம் உண்டியலுடன் திருமலையேறிச் செல்லும்போது களைத்து, மயங்கி விழுந்துவிட்டார்; தன் பக்தன் சோர்ந்து கீழே விழுவதைக் கண்ட எம்பெருமான் சேவுகன் செட்டியான் பக்தியை மெச்சி "திருவேங்கடவனைத் தேடி வரும் பக்தனைத் திருவேங்கடவனே தேடி வருவான்'' என்று கூறி அதற்கான இடத்தையும் அறிவுறுத்தினார். அரியக்குடியில் அந்த இடத்தில் சேவுகன் செட்டியார் திருவேங்கடமுடையானுக்கும், அலர்மேலு மங்கைத் தாயார்க்கும் சன்னதி எழுப்பினார். அன்று முதல் திருப்பதி மலையின் வேங்கடவன் உறையும் அரியக்குடி "தென் திருப்பதி' எனச் சிறப்பிக்கப்பட்டது. அரியக்குடிக் கோயிலை எழுப்பும் போது கோயில் கட்டுதற்குய இடத்தை கருடாழ்வார் வானில் வட்டமிட்டுக் காட்டினார். அதனால் இங்கு மூலக்கருடன் சன்னதி தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

திருக்கோயில் அமைப்பு:

அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியை உடையது. கருவறையில் திருவேங்கடமுடையான் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. பெருமாள் சன்னதியின் வலதுபுறத்தில் அலர்மேல்மங்கைத் தாயார் சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாள் சன்னதியும் அமைந்துள்ளன. பெருமாள் கருவறை அமைந்துள்ள சேனை முதலியார் மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் சேனை முதலியார் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். சேனை முதலியார் மண்டபத்தையடுத்து தேசிகர் எனும் நம்மாழ்வார் சன்னதி, இராமர் சன்னதி, கருடாழ்வார் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் பள்ளியறை, யாகசாலை ஆகியவையும் உள்ளன. வெளித் திருச்சுற்றில் உள்ள ஏகாதசி மண்டபம் அழகிய மரவேலைப்பாட்டுடன் மிக உயர்ந்த விதானத்துடன், கலைச்செறிவுள்ள தூண்களைக் கொண்ட பிரம்மாண்டமான ஓவியக் கலைக்கூடமாகத் திகழ்கிறது. ஏகாதசி மண்டபத்தையடுத்து, ஆலயத்தின் மேல்தளத்தில் மூலக்கருடன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் உள்ள கருடபகவான் வேண்டியவர்க்கு வேண்டுபவற்றை வேண்டியவாறு தந்தருள்கிறார்.

வழிபாடும் விழாக்களும்:
அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோயிலில் நாள்தோறும் ஆறுகாலப் பூசைகள் நிகழ்கின்றன. சிறப்பு வழிபாடாகச் சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி, வைகாசி மாதம் பிரம்மோத்சவம், ஆடி மாதம் ஆடிப்பூரம், ஆவணி மாதம் கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி மாதம் நவராத்தி கோவிந்தாப் போடுதல், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, பங்குனி மாதம் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சக்தி வாய்ந்த மூலக்கருடனிடம் வேண்டுவன கிடைத்தவுடன் விடலைத்தேங்காய் உடைப்பது சிறப்பான வழிபாடாகும். "கோவிந்தாப் போடும்' நிகழ்ச்சி வேறு வைணவக் கோயில்களில் இல்லை. சைவ அடியார்களான நாட்டுக்கோட்டைச் செட்டியார்களில் சிலர் அரியக்குடிப் பெருமாள் கோயிலால் திருமண் இட்டு வைணவர்களாகவும் விளங்குகின்றனர். ஆச்சிமார்கள் திருநாமமிட்டு வைணவர்களாகவும் வாழ்ந்தனர்.
கோவிந்தாப் போடுதல்:

அரியக்குடித் திருவேங்கடமுடையான் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும் "கோவிந்தாப் போடுதல்" என்னும் சிறப்பு வழிபாடு புகழ்பெற்றது. இவ்வூர் நகரத்தார்கள் எங்கு இருந்தாலும் புரட்டாசி மாதம் திருவோண நாளன்று அரியக்குடியில் கூடிக் கோவிந்தாப் போடுவது வழக்கம்; சேவுகன் செட்டியார் இந்த நாளில்தான் தனது திருப்பதிப் பாதயாத்திரையைத் தொடங்குவார். அன்று கோவிலின் முன்பாகக் களிமண்ணால் ஒரு பெரிய அகலைக் கட்டுவித்து, அதில் பசு நெய்வார்த்து அக்னி வளர்த்து, பேழையில் இருந்து துணிகளைத் துண்டுகளாகக் கிழித்துப் போட்டு அக்னி சுவாலை உண்டாக்கிப் பெருமாளின் திருநாமமாகிய "கோவிந்தா, கோவிந்தா'' என்று ஓங்கிக் கூறி சேவிப்பர்; அந்த விளக்கை, கைகொட்டிக்கொண்டு வலம்வருவர். இவ்வழிபாடு மூதாதையர்களின் நினைவாக (பிதுர்கடன்) நடைபெற்று வருகிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது ஒவ்வொருவரும் இத்தலம் வந்து தசிக்கவேண்டும்.

இத்திருக்கோயில் நிர்வாகம் சிவகங்கை தேவஸ்தானத்தின் கீழ் நடைபெற்றுவருகிறது. இத்திருக்கோயில் சென்ற ஆண்டிற்கான (2001-2002) "தூய்மையாகப் பராமக்கப்பட்ட கோயில்' என்ற விருதையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.