ஆலமரம் சுற்ற பட்டமங்கலம் வாங்க!

பாண்டிய நாட்டுத் திருத்தலங்களில் பட்டமங்கலம் ஒன்று; இங்குள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளார். இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் தெட்சிணாமூர்த்தி வாழ்க்கைக்கு வேண்டிய செல்வமும் சீரும் தந்து, பெண்கள் போற்றும் பெருமானாய்த் திகழ்கிறார்.

அமைவிடம்:

பட்டமங்கலம் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இவ்வூருக்கும், சிவாலயத்திற்கும் இடையே மணிமுத்தாறு பாய்கிறது. ஆற்றின் தெற்கே சிவாலயமும், வடக்கே ஊரும் இருக்கின்றன. காரைக்குடியிலிருந்து பதினெட்டு கி.மீ. தொலைவிலும், திருப்புத்தூரிலிருந்து எட்டு கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. இத்தலத்தின் மேற்கே மூன்று கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற வைணவ திவ்ய தேசமான திருக்கோட்டியூர் விளங்குகிறது.

இப்போதைய பட்டமங்கலம், பண்டு "பட்டமங்கை" என்ற பெயரால் வழங்கியது. மாணிக்கவாசகர் "பட்டமங்கையிற் பாங்காய் இருந்தாங்கு' என்றே குறிப்பிடுகிறார். பட்டமங்கலம் தீர்த்தச் சிறப்பு மிக்க திருத்தலமாகும். "பட்ட' என்ற சொல் "தீர்த்தம்' என்ற பொருளை உணர்த்தும். மங்கலம் என்றால் "நலம் உண்டாகும்' என்பதாகும். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வழிபடுகின்றனர். எனவே, தீர்த்தச் சிறப்பால் இப்பெயர் பெற்றிருக்கிறது.

சிவனிடம் சாபம் பெற்ற கார்த்திகைப் பெண்கள், பிறகு பட்டம் பெற்றமையால் பட்டமங்கை என்றாயிற்று என்ற வழக்கு நிலவுவது, புராண மரபுகளுடன் இத்தலத்திற்கு இருந்த தொடர்பைக் காட்டுகிறது. குன்றக்குடி அடிகளார், அட்டமாசித்தி பெற்ற இயக்க மாதர் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி, பட்ட - அனுபவித்து, மங்கலம் - நன்மையாதல் என்று இக்காலத்திற்கேற்பப் பொருள் கொண்டு விளக்குகிறார்.

பட்டமங்கலம் புராண வரலாறு:

மதுரை சோமசுந்தரக் கடவுளாகிய சொக்கநாதர் கார்த்திகைப் பெண்களுக்குச் சாபம் போக்கி அவர்களுக்கு அட்டமாசித்திகள் அருளிய திருவிளையாடலை நிகழ்த்திய பெருமை இச்சிவதலத்திற்கே உரியதாகும். திருக்கைலாய மலையில் வீற்றிருந்த சிவபெருமான், உமாதேவியரின் முன்னிலையில் முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் தோன்றி, தமக்கு அட்டமாசித்திகளை உபதேசிக்க வேண்டினார்கள். சிவபெருமான், உமாதேவியிடம் அணிமா முதலான அட்டமாசித்திகளும் பணிந்து குற்றேவல் புரியும். எனவே அவளை வழிபட்டால் அட்டமாசித்திகளைத் தந்தருள்வாள் என உபதேசித்தார். கார்த்திகைப் பெண்கள் உமாதேவியை வழிபடாமல் சிவபெருமான் வழங்கிய அட்டமாசித்திகளை மறந்து விட்டனர். இதனை உணர்ந்த சிவபெருமான், கார்த்திகைப் பெண்கள் அறுவரையும் பட்டமங்கையில் ஆயிரம் ஆண்டுகள் கற்பாறையாய் இருக்கச் சாபம் கொடுத்தார். தங்களது தவற்றை உணர்ந்த கார்த்திகைப் பெண்கள் இறைவனிடம் சாபவிமோசனம் வேண்ட, சிவபெருமான் அப்பெண்களிடம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உங்கள் சாபத்தைப் போக்கிக் குருவடிவில் காட்சியளித்துப் பழைய வடிவத்தையும் கொடுத்து அட்டமாசித்திகளையும் காட்டுவோம் என்று கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் மதுரையில் உள்ள சுந்தரேசுவரர் பட்டமங்கையில் குருவடிவில் (தெட்சிணாமூர்த்தி) காட்சியளித்து கார்த்திகைப் பெண்களின் சாபத்தைப் போக்கி அட்டமாசித்திகளை அருளினார்.

இறைவன் - இறைவி பெயர்க்காரணம்:

மதுரைச் சொக்கநாதர் பெயரை மூலமாகக் கொண்ட மூலவருக்கு "மீனாட்சி சுந்தரேசுவரர்' என்ற பெயர் வழங்கப்படுகிறது. மதுரைத் திருவிளையாடல் (33) நடைபெற்றமையாலும், மதுரைச் சொக்கலிங்கக் கடவுள் இங்கு எழுந்தருளிக் கார்த்திகைப் பெண்களுக்குச் சாபம் நீக்கி அருளினமையாலும் இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் இப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.

திருக்கோயில் அமைப்பு:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியை உடையது. இக்கோயிலில் இரண்டு திருச்சுற்றுகள் உள்ளன. முதல் திருச்சுற்றில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், நடராசர் சபை, அம்மன் சன்னதி, நவக்கிரகம் ஆகியவை உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில், சித்தி விநாயகர் ஆலயம், பொற்றாமரைக் குளம், ஆலமரம், அட்டமாசித்தி அருள்மிகு தெட்சிணாமூர்த்தி ஆலயம், நந்தவனம், கீழ ராசகோபுரம் ஆகியவை அமைந்துள்ளன. திருக்கோயிலின் மேற்கே தெப்பக்குளமும், தென்மேற்கே அடைக்கப்பச் செட்டியான் பள்ளிப்படைக் கோயிலும், தென்கிழக்கே கார்த்திகைப் பெண்களின் கற்பாறை வடிவமும் காணப்படுகின்றன.

அட்டமாசித்தி அருள்மிகு தெட்சிணாமூர்த்தி ஆலயம்:

மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் போன்று அட்டமாசித்தி தெட்சிணாமூர்த்திக்கும் தனியாக ஆலயம் உள்ளது. இவ்வாலயமும் கிழக்குநோக்கிய சன்னதியை உடையது. இதன் பின்புறம் தலவிருட்சமான ஆலமரமும், முன்புறம் நந்தவனமும் அமைந்துள்ளன. எல்லா ஆலயங்களிலும் தெட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கிக் காட்சி தருவார். ஆனால் இங்கு தெட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கிக் காட்சி தருவது இத்தலத்தின் தனித்தன்மையாகும். சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமாசித்தி அருள் புரிந்ததாலும், சிவனுக்கு உகந்த சன்னதி கிழக்கு நோக்கியது என்பதாலும் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறார்.

வழிபாடும் விழாக்களும்:

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காமிக ஆகமத்தின் அடிப்படையில் ஆறுகாலப் பூசை நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடாக ஆடி, தை அமாவாசை நாள்களில் சந்திரசேகரர் அலங்காரச் சிறப்புடன் அட்டமாசித்திப் பொய்கைக்கு எழுந்தருளித் தீர்த்தம் அளிக்கும் "தீர்த்தவாரி' விழாவும், ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகரின் திருவீதியுலாவும், நவராத்தியின் இறுதி நாளில் மகர்நோன்பு விழாவும், திருக்கார்த்திகை அன்று தீபோற்சவ விழாவில் சுப்பிரமணியர் வீதிவலம்வரும் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மார்கழி மாதத்தில் நடராசப் பெருமான் ஆருத்திரா தசன விழாவும் மிகச் சிறப்புடன் நடைபெறுகின்றது.

இத்தலத்தில் பிரம்மோத்சவத் திருவிழா (பத்து நாள்) நடைபெறுவதில்லை. இதற்குப் பதிலாகக் குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு அபிடேக ஆராதனை நடைபெறுகிறது. குருப்பெயர்ச்சி அன்று பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு குருவருள் பெற்றுச் செல்கின்றனர்.

நிருவாகம்:

கி.பி.1947 -ஆம் ஆண்டு "அ.வீர.அ." என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி அடைக்கப்பச் செட்டியார் அவர்களின் குடும்பத்தார்கள் சீரிய முறையில் நிருவாகம் செய்து வருகின்றனர். கோயிலுக்குரிய நிலங்களினின்று வரும் வருவாயைக் கொண்டு வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. பக்தர்கள் மனமுவந்து தரும் வழிபாட்டுப் பொருட்களை மட்டும் அன்புடன் ஏற்றுக் கொள்ளுகின்றனர். வேறு எந்த வகையிலும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பெறுவதில்லை.

தலத்தீர்த்தம், தலவிருட்சம்:

இக்கோயிலுக்குப் பொற்றாமரைக்குளம், தெப்பக்குளம் ஆகிய இரண்டும் தலத்தீர்த்தமாகும். தெட்சிணாமூர்த்தி திருக்கோயிலின் பின்புறம் உள்ள ஆலமரமே தலவிருட்சம். மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில் "இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி" என்று பாடுகிறார். இவ்வாலமரத்தின் அடியில்தான் கார்த்திகைப் பெண்கள் அறுவரும் சிவபெருமான் சாபத்தால் கற்பாறையாக ஆயிரமாண்டுகள் கிடந்து பின்பு சாபம் நீங்கிப் பழைய உருவம் அடைந்தனர். ஆதலால், இவ்வாலமரம் "அட்டமாசித்தி ஆலமரம்' எனப் பெயர் பெற்றது.

தலத்தின் தனிச்சிறப்புகள்:

இந்தத் தலத்தில் ஞான உபதேசமூர்த்தியாக விளங்கும் தெட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைதோறும் வந்து வழிபடும் அன்பர்கள் நல்வாழ்வை அடைவர்.

பூப்படையாத பெண்கள் பூப்படையவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் நடைபெறவும், புத்திரப்பேறு கிட்டாதவர்களுக்குப் புத்திரப் பேறு கிட்டவும் வணிக வளர்ச்சி, நோய் நீங்குதல் போன்ற அரிய சித்திகளும் இத்திருத்தல் வழிபாட்டால் கிட்டும்.

தெட்சிணாமூர்த்தியின் பின்புறம் உள்ள ஆலமரத்தை 108 முறை சுற்றிவந்தால் நினைத்த காயம் நிறைவேறும்.

அட்டமாசித்தி ஆலமரத்தில் குழந்தை வேண்டித் தொட்டில் கட்டினால் அடுத்த ஆண்டு குழந்தைப் பேறு கிட்டும்.

வெகுநாள்களாகியும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் தொடர்ந்து மூன்று வியாழக்கிழமை பொற்றாமரைக் குளத்தில் குளித்து ஆலமரத்தை 108 முறை வலம் வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

அருளாற்றல் பொங்கிப் பிரவகிக்கும் புகழ்பெற்ற சன்னதியாம் பட்டமங்கலத்தில் தெட்சிணாமூர்த்தி, திருவருள் வழங்கும் மூர்த்தமாகத் திகழ்ந்து வருகிறார்.