அறுபத்து மூவரின் ஆட்சி

தமிழகத்திலே சைவத்தையும், தமிழையும் வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களாவர். திருக்கோயில் வழிபாட்டிற்கும், சைவத்திற்கும் அடித்தளமான அருந்தமிழ் நூல்களை ஆக்கியவர்கள் சமய குரவர் நால்வரே. இவர்களையன்றிப் பெண்பாலல் போற்றத்தக்க பெருமை உடையவர் காரைக்கால் அம்மையாராவர். ஏனைய நாயன்மார்கள் இறைவனைப் பாடல்களால் பாடிப்பணியாது தம் வழிபாட்டால் மக்களுக்கு வழிகாட்டிகளாக இலங்கினர். இவர் தம் சமயப்பணித் தமிழ்ப்பணியோடு இயைந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் ஒரு முழுமை கொடுத்தவர் சுந்தரமூர்த்தியாவார். அவருடைய திருத்தொண்டத் தொகையை அடியொற்றிச் சைவமும், தமிழும் தழைத்தன. திருத்தொண்டத் தொகையை அடியொற்றி விரியாக அமைந்தது நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டத் திருவந்தாதி ஆகும். இவ்விரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு விரிவாகவும். முழுமையாகவும் திருத்தொண்டர் வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் உருவாக்கினார். சைவ சமய வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் திருத்தொண்டர் புராணம் குறிப்பிடத்தக்கது.

பிற்காலத்தவர்கள் திருத்தொண்டர் புராணத்திலுள்ள ஒவ்வொரு பகுதியையும் தனித்தனிக் கதையாக, நூலாக வித்தோதினர். இக்கட்டுரை தமிழகக் கோயில்களில் நாயன்மார் வழிபாடு தோன்றிய வரலாற்றை எடுத்து இயம்புகிறது.

நாயன்மார் வரலாறும், வழிபாடின்மையும்
சிவன் கோயில்களில் திருத்தொண்டர் வரலாறு இடம் பெற்றபோது அறுபத்துமூவர் வரலாறும் மக்கள் மனத்தில் ஆழப்பதிந்து வழிபாட்டை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாயன்மாரும் நின்ற கோலத்தில் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முதற்கண் உருவாகிய அறுபத்து மூவர் வடிவங்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேசுவரர் திருக்கோயிலில் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் அஞ்சலட்டை ஒளிப்படம் (Post Card) போல அழகுற வடிக்கப்பட்டிருக்கின்றன; பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் நாயன்மார் சிற்பங்கள் அனைத்தும் திருத்தொண்டர் புராணத்தின் பழமையையும், பெருமையையும் காட்டுகின்றன. ஈண்டு நாயன்மார்களின் உன்னத வாழ்க்கை நிகழ்ச்சிகள் வடிக்கப்பட்ட சொல்லோவியம் கல்லோவியமாக இந்தப் புடைப்புச் சிற்பங்கள் காட்சி தருகின்றன. இவை வழிபாட்டில் இல்லை; வரலாற்றை மட்டுமே விளக்குகின்றன.
தாராசுரத்தில் உள்ள அறுபத்துமூவர் சிற்பங்கள் திருச்சுற்று மண்டபத்தின் உள்பக்கப் பகுதியில் அடித்தளத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றன. கோயில் திருச்சுற்று முழுவதும் இவை அமைந்துள்ளன. அனைத்தும் ஒரே அளவின. இத்தகைய சிற்பங்களைப் பிற்காலக் கோயில் கட்டிடக்கலையில் காணமுடியவில்லை.
 
நாயன்மார் வழிபாடு
நகரத்தார்கள் திருக்கோயில் திருப்பணி செய்யத் தொடங்கிய காலத்தில் திருத்தொண்டர் புராணத்தில் ஈடுபட்டுச் சிவனடியார்களிடத்தே பக்தி வைத்து அடியார்களது வடிவங்களைத் திருக்கோயில்களில் நிறுவினர். கி.மு.1860-ஆம் ஆண்டிற்குப் பின்னர் நகரத்தார்கள் எழுப்பிய கோயில்கள் அனைத்திலும் அறுபத்து மூவர்க்கும் திருவுருவங்கள் அமைக்கப்பட்டன. நடராசர் சன்னதிக்கு எதிரில் உள்சுற்றில் வரிசையாக அறுபத்து மூவரை அமைத்து வழிபட்டனர். இவர்கள் நடராசரை வணங்கியவாறு இருக்கவேண்டும் என்பதற்காகவும், ஞானப் பகுதியாக அமையும் கன்னிமூலை என்பதற்காகவும் இவ்வாறு அமைத்திருக்கின்றனர். செட்டிநாட்டில் உள்ள பல ஊர்களில் இச்சிற்பங்களைக் காண முடியும். சில ஊர்களில் சமய குரவர் நால்வரை மட்டும் நிறுவியிருப்பர். தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் சேக்கிழார்க்குத் தனிக் கருவறை அமைத்துச் சிறப்புத் தரப்பெற்றிருக்கிறது. வன்தொண்டர் நாராயணன் செட்டியார் அவர்களின் முயற்சியால் சேக்கிழார் இவ்வூல் தனிக்கருவறையில் வைத்துக் கொண்டாடப் பெறுகிறார். இவ்வாறு செட்டிநாட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் கொண்டாடப் பெறுகின்றனர்.

செட்டிநாட்டு ஊர்கள் சிலவற்றில் நாயன்மார் திருவுருவங்களுக்குப் பதிலாக ஓவியங்கள் வசையாக வரையப்பட்டிருக்கின்றன. காரைக்குடிக்கு அருகில் உள்ள சிவன்கோயில்களில் இதனைக் காணலாம். செட்டிநாட்டில் முதலில் கட்டப்பெற்ற சிவன்கோயில் கோவிலூர்ச் சிவன்கோயில் ஆகையால் இங்கு நாயன்மார் வடிவங்களை ஓவியமாக வரைந்திருக்கின்றனர். ஓவியமாக வரைவதால் நாள்தோறும் திருமஞ்சனம் ஆட்ட வேண்டியதில்லை; ஆடை, பூச்சூட்ட வேண்டியதில்லை. இதனால் திருக்கோயில் பணியாளர்களுக்குப் பணி கூடுவதில்லை. இதனால்தான் பல ஊர்களில் அறுபத்து மூவர்க்குச் சிலை அமைக்காது ஓவியங்களாக வரைந்திருக்கின்றனர்.

காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் அறுபத்து மூவர் மேற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு நிறுவப்பட்டிருக்கின்றனர். இங்குக் கற்சிலைகளாகவும் செப்புச் சிலைகளாகவும் நாயன்மார் வடிவங்கள் உள்ளன. திருவிழா நடத்துவதற்கு உரியவை செப்புச்சிலைகளே. ஆனால் இங்கு அறுபத்து மூவர்க்குத் திருவிழா நடை பெறுவதில்லை.

நாயன்மார்கள் அனைவரும் இடப வாகனத்தில் உமா மகேசுவரனைத் தசித்தவர்கள். இவர்கள் அனைவரும் காட்சி கொடுத்த நாதர் திருவருள் பெற்றவர்கள். அதனால் அறுபத்துமூன்று நாயன்மார்களை வரிசையாக அமைத்து அவ்வசையின் இறுதியில் ஒருபுறம் விநாயகரையும், மற்றொருபுறம் உமாமகேசுவரரையும் நிறுவியிருக்கின்றனர். இவர்களுடன் சப்த மாதர்களையும், விநாயகரையும் அமைப்பர். இக்காலத்தில் இந்த வசையில் சரசுவதியையும் நிறுவுகின்றனர்.

அறுபத்து மூவர் விழா

சைவத்தில் தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற மூன்றும் சிறப்புடையது. அதுபோல ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் புராண வரலாறும், சிறப்பும் தனித்தனியே உண்டு. தெய்வத்திற்கும் தலத்திற்கும் தொடர்புடைய லீலா வினோதங்கள் உண்டு. சில விழாக்கள் அனைத்துத் தலங்களிலும் கொண்டாடப்பட்டாலும் சில குறித்த தலத்திற்கு அது சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை - மயிலாப்பூரில் மட்டுமே "அறுபத்து மூவர் விழா" சிறப்பாக நிகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் நடைபெறும் இப்பெருவிழா குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறுபத்து மூவர்களுக்கென ஒரு விழா வேறு எந்த ஊலும் சிறப்பாக நடைபெறுவதில்லை.

அறுபத்து மூவன் ஆட்சி
குடுமியான்மலையில் காட்சிகொடுத்த நாதரை மையப்படுத்தி, இரண்டு பக்கங்களிலும் நாயன்மார்களின் வடிவம் நிறுவப்பட்டிருக்கிறது. குடைவரைக் கோயிலின் வடக்கே, மேற்குப்புறப் பாறையில் அறுபத்து மூவர் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவர்களின் நடுவே உமா மகேசுவரர் இடப வாகனத்தில் காட்சிதருகின்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களும் நின்ற கோலத்தில் வணங்கியவாறு காட்சியளிக்கின்றனர். இமயத்தில் இறைவன் இருந்து காட்சி தருவது போல இச்சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. இத்திருவுருவங்களை அருகில் சென்று காணமுடியாத வண்ணம் அதிக உயரத்தில், குறுகிய, சவான பாதைகளை உடைய மலையில் வடித்துள்ளனர். இத்தகைய புதுமையான அமைப்பைத் தமிழகத்திலுள்ள வேறு எந்தக் கோயிலிலும் காண இயலாது.
நகரத்தார்கள் பல ஊர்களில் குரு பூசை மடம் அமைத்து, நாயன்மார்களின் திருநட்சத்திரத்தன்று குருபூசை இடுகின்றனர். இஃதன்றி மாணிக்கவாசகர், சுந்தரர் போன்றோரது வரலாற்றுத் தொடர்புடைய விழாக்களையும் செட்டிநாட்டில் கொண்டாடி வருகின்றனர். பிட்டுக்கு மண் சுமந்த விழா செட்டிநாட்டில் மிகுந்த புகழ்பெற்றது. இவ்வாறு அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் தனிச்சிறப்புக் கொடுத்துச் சைவத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்திய வகையில் அறுபத்து மூவர் வழிபாடு சிறப்புப் பெற்றது. பெயபுராணத்தின் பெருமையைப் போற்றியதால் இச்சிறப்பு ஏற்பட்டது; திருக்கோயில்களில் தெய்வ மூர்த்தங்கள் பெருகின.